இனிய ஜெ.
அஜிதன் அவர்களின் வாக்னர் – மேலை இசை அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன். மீண்டும் அந்த இசையை கேட்பதற்காக உட்கார்ந்தேன்.
அந்த வகுப்பில் சொன்ன ஒவ்வொன்றும் வாகனரின் இசை நாடகத்தை பார்க்கும்பொழுது மேலெழுந்தபடியே வந்ததது.
உதாரணமாக,
அஜிதன் ஒரு இடத்தில் இவ்வாறு கூறினார்: என்னுடைய அப்பா பாரிஸில் இருக்கும் போது ரிங் சைக்கிள் 2 காண ஒப்பேராவில் கண்டு முடித்தவுடன் என்னை தொடர்பு கொண்டு, ” சில இடங்களில் என்னுடைய வெண்முரசு படைப்பிற்கு சமமான ஒரு உணர்ச்சி கொந்தளிப்பை நான் இதிலும் உணர்ந்தேன்” அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அவரின் 10 வருட ரசனையே இந்த வகுப்புகளுக்கு காரணம் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
மேற்கத்திய இசையின் முறையான விரிவான அறிமுகம், ரிச்சர்ட் வாகனரின் வரலாறு, அவர்களின் முன்னோடிகளில் இருந்து இவர் எப்படி வேறுபடுகிறார், மற்றும் சுவாரஸ்யமான சில தகவல்கள். உதாரணமாக
நாம் இப்பொழுது டிஸ்னி படங்களில் காணும் உண்மையான பிரம்மாண்டமான கோட்டையை கட்டிய பவேரியாவின் மன்னரான King Ludwig II இவரின் இசை மேதமையை உணர்ந்து இவரைத் தேடி வர ஆட்களை அனுப்பினார். ஆனால் வாக்னரோ, தன் கடன்காரர்கள் அனைவரும் மன்னரிடம் போட்டுக் கொடுத்து விட்டனர் என்று ஓடி ஒளிந்து கொண்டார். பின்பு நடந்து விஷயங்களில் அனைத்தும் வரலாறு.
இப்பொழுது நாம் திரைப்படங்களில் பார்க்கும் பின்னணி இசைக்கான – ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பிரத்தியேகமான இசை – Theme music) யோசனை இந்த வாக்னரின் இசை நாடகங்களே முன்னோடி.
இப்பொழுது இருக்கும் திரையரங்குகளின் அமைப்பே அவருடைய யோசனை தான்
இவரின் கருத்துக்களில் இருந்து பரஸ்பர தாக்கம் பெற்ற க்ஷோப்னவர்! பின்பு அவர்களுக்கு உண்டான தத்துவ வேறுபாடுகள், இவரை ஆதர்சனமாக ஏற்ற ஹிட்லரின் இருண்ட மருவிளைவு என அனைத்தும் மணக்கண்ணில் வந்துபோனது.
இவற்றைப் பற்றி எல்லாம் நான் விரிவாக இனிமேதான் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் தொடக்கப்புள்ளி இந்த அறிமுக வகுப்பே.
இந்த ரிங் சைக்கிளிள் முதலில் கடைசி பக்கத்தையே வாக்னர் எழுதினார். பிறகு ரிங் சைக்கிள் 2 மற்றும் ஒன்றாம் பாகத்தை முடித்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஓப்பராவே கேட்டு முடித்தவுடன் உண்டாகும் ஒரு மேலதிக உணர்வு, ஒரு சிறந்த படைப்பை ருசித்த ஒரு திருப்தி உணவு இல்லாமல் எவருக்கும் இருக்காது. இதற்காக நாம் சிறிது பழக வேண்டும். வாசிப்பதை போலவே.
எனக்கு, கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பது அழுத்தம் திருத்தமாக நீண்ட காலத்திற்கு பிறகு உணர வைத்த வகுப்புகள் இவை. இத்தகைய ஒரு பிரம்மாண்ட திறப்பை அளித்த முழுமை அறிவு அமைப்பிற்கு மிகவும் நன்றி.
பி.கு.
உங்களின் இந்திய தத்துவ வகுப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
விக்னேஷ் குமார்.












