உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள்

    உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள்

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    பிப்ரவரி மாதம் 28, மார்ச் 1, 2 தேதிகளில் கவனக்குவிப்பு- ஊழ்கப்பயிற்சி.


    இன்றைய வாழ்க்கையில் நம் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி ஒன்றில் நிலைக்கவிடும் பயிற்சியை முறையாக அடைந்தே தீரவேண்டும். படிப்பு, பணி இரண்டுக்கும் மிக இன்றியமையாதது இப்பயிற்சி. பல தொழில்நிறுவனங்களும் கல்விநிறுவனங்களும் சர்வதேச அளவில் இவற்றை தங்கள் ஊழியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் நிகழ்த்திவருகின்றன

    ஏனென்றால் நாம் இன்று பலதிசைகளில் கவனம் சிதறடிக்கப் படுகிறோம். தொடர்ச்சியாக குறைந்தது ஒருமணிநேரம் ஒரு செயலை செய்ய நம்மால் முடியுமா என்பதுதான் இந்நூற்றாண்டின் சவால். செய்ய முடிபவர்கள் மட்டுமே வெல்கிறார்கள்

    இன்றைய வாழ்க்கையின் அடிப்படைச் சிக்கல்கள் சில உள்ளன. ஒன்று, துயிலின்மை. இரண்டு, கவனம் குவியாமை. மூன்று, உளச்சோர்வு. மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. அவற்றைக் கருத்தில்கொண்டு அமைக்கப்பட்ட பயிற்சி முறை இது.

    நம் உள்ளத்தை நம்மால் கையாள முடியாத நிலையில் நம்மிடம் எப்போதும் ஒரு சலிப்பு உள்ளது. அதை வெல்ல நம் உள்ளத்தை தொடர்ந்து எதிலாவது ஈடுபடுத்தியாகவேண்டியுள்ளது. உள்ளம் தீவிரமாக ஈடுபடுவது எதிர்மறையான விஷயங்களில்தான். அதையே நாம் ‘திரில்’ என்கிறோம். வன்முறை, காமம் ஓங்கிய சினிமாக்கள். அல்லது வம்புகள், சச்சரவுகள். இவை உடனடியாக நம்மை துயிலின்மைக்கும் சோர்வுக்கும் இட்டுச்செல்கின்றன. எதையும் தொடர்ச்சியாக கவனிக்க முடியாதவர்களாக ஆகிறோம்.

    கவனிக்கமுடியாத காரணத்தால் நாம் துளித்துளியாக கருத்துக்களையும், செய்திகளையும், காணொளிகளை பார்க்கவும் வாசிக்கவும் ஆரம்பிக்கிறோம். நூறு சொற்களுக்குள் அமைந்த முகநூல்பதிவுகள், ஐந்து நிமிடக் காணொளிகள் பெருகுவது இதனால்தான். உண்மையில் இவை நம்மை மேலும் சிதறடிக்கின்றன. தொகுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு செய்திகளை கொண்டுவந்து நம்முள் கொட்டி நம் உள்ளத்தை பெரிய குப்பைக் கிடங்காக ஆக்குகின்றன. ஆகவே நம் கவனிக்கும் திறன் மேலும் குறைகிறது. ஒரு நூலை கூர்ந்து பயில்வது கடினமாகிறது. ஒரு தொழில்முறை பயிற்சியை மேற்கொள்வது, ஒரு தேர்வுக்காக பயில்வது இயல்வதில்லை.

    இந்த நச்சுச்சூழலுக்கு எதிராகவே இந்த தியானப் பயிற்சிகளை தொடங்கினோம். ஒரு பாதை இருக்கவேண்டும், அதை தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக. இது மதம் சார்ந்ததாகவோ, தனிநபர் வழிபாட்டுத்தன்மை கொண்டதாகவோ இருக்கலாகாது என்பதை முதன்மைப்படுத்தினோம்.

    என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் இன்றைய சூழலில் உளம்குவிந்து செயலில் ஈடுபடுவது எப்படி என்பதாகவே உள்ளன. அதை நிகழ்த்தமுடியாமையாலேயே வாழ்வில் சோர்வும் சலிப்பும் கொண்டவர்கள் பலர். இன்றைய தொழில்நுட்பம் உளக்குவிதலுக்கு எதிரானது.நம் கவனத்தை கவர்ந்திழுக்க நம்மைவிட பலமடங்கு வல்லமைகொண்ட அறிவாளிகள், ஆய்வாளர்கள் நிறுவனமாக ஒருங்கிணைந்து பெரும்பணம் செலவிட்டு பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு திசையிலாக இழுக்க நம் கவனம் பலவாறாகச் சிதறுண்டு சிதைகிறது.

    அதற்கு எதிராக நம்மை நாமே குவித்துக்கொள்ள நாம் மட்டும் முயன்றால் இயலாது. அதற்கென நிபுணர் உதவியும் பயிற்சியும் தேவை. ஆனால் அது நம் சூழலில் மிக அரிதாகவே அமைகிறது. இந்த தியானமுகாம்களின் நோக்கம் அது. எங்கோ ஓரிடத்தில் நாம் நம்மை குவித்துக்கொண்டோம் என்றால் நம்மை குவித்துக்கொள்வது எப்படி என்னும் வழியை நாமே கண்டுகொள்வோம். அந்த அறிதலே நம்முடைய மிகப்பெரிய ஆயுதம்.

    அதை பயின்று அறிதல் வேண்டும் என்பது என் எண்ணம். அதற்கு நம்மை அறிந்து அருகிருந்து வழிகாட்டுபவர் தேவை. அத்தகைய பயிற்சிகள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக எங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இருபதாண்டுகளாக இத்துறையில் செயல்படும் தில்லை செந்தில் பிரபு ஒருங்கிணைக்கிறார்

    இப்பயிற்சியை அடைந்து, தொடர்ந்து செய்பவர்கள் அந்த பெரும் வேறுபாட்டை உணரமுடியும்.

    புகழ்பெற்ற உளப்பயிற்சி நிபுணர் தில்லை செந்தில் பிரபு நடத்துகிறார். தில்லை செந்தில் பிரபு தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிக அமைப்பு ஒன்றில் நீண்டகாலம் முழுநேரப் பயிற்சியாளராக இருந்தவர்.

    தில்லை செந்தில் பிரபு பொறியாளர். Asst. General Manager ,Mak Controls and Systems Pvt Ltd ஆக இருந்தவர் இப்போது Vice President , MAK Controls & Systems Pvt. Ltd, Coimbatore. ஆக பணியாற்றுகிறார். ஏழை மாணவர்களின் கல்விக்காக    ANANDA CHAITANYA FOUNDATION எனும் அமைப்பை நடத்தி வருகிறார்.

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    Additional Details

    Category -

    அடுத்த கட்டுரைசைவத் திருமுறைப் பயிற்சி