ஆயுர்வேத வகுப்பு

    ஆயுர்வேத வகுப்பு

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    வரும் மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்


    சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். புகழ்பெற்ற எழுத்தாளர். ஆயுர்வேத முறைகளை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர் நடத்திய இரண்டு வகுப்புகள் பலருக்கும் மிக உதவியானவையாக இருந்தன.

    ஆயுர்வேதம் ஏன் அறிமுகம் செய்துகொள்ளப்படவேண்டும்? நவீன மருத்துவம் நம் உடற்கூறு, நோய்கள், மருத்துவம் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது. ஆனால் ஆயுர்வேதம்தான் நம் வாழ்க்கைமுறையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் உணவுமுறை, நம் சூழல் ஆகியவை ஆயுர்வேதத்துக்குத்தான் அணுக்கமானவை. இவற்றைப் பற்றி நாம் ஏராளமான செவிவழிச்செய்திகளை அறிந்து பலவகையான பிழையான புரிதல்களைக் கொண்டிருப்போம்.

    உண்மைநிலையை அறிய ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை அறியவேண்டும். எளிய முறையில் அதை கற்பிக்கும் நிகழ்வு இது

    நமக்கு இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பற்றி மிகக்கொஞ்சமாகவே தெரியும். நவீன மருத்துவமுறையே உலகமெங்கும் பரவியுள்ளது. அது ஐரோப்பிய மருத்துவமுறை நவீன அறிவியலுடன் இணைந்து வளர்ந்த வடிவம். ஆனால் உலகமெங்கும் தொன்மையான பல மருத்துவமுறைகள் உள்ளன. அவற்றில் சீன மருத்துவமும் ,அராபிய மருத்துவமுறையான யுனானி மருத்துவமும், ஆயுர்வேதமும் மிகமுக்கியமானவை. இந்த மரபுசார் மருத்துவங்கள் மேல் இன்று நவீன அறிவியலின் கவனம் கூர் கொண்டுள்ளது. சீன மருத்துவத்திற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது அதற்குச் சான்று

    ஒப்புநோக்க இவற்றில் ஆயுர்வேதமே மிகவும் அறிவுத்தர்க்கமுள்ளதும், தெளிவான கல்விமரபு கொண்டதும் ஆகும். இந்தியாவெங்கும் ஆயுர்வேதம் வலுவாகவே இன்றும் உள்ளது. ஆனால் அதைப்பற்றிய புரிதல் தமிழகத்தில் பொதுவாகக் குறைவு. பொதுமக்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய பல உண்டு. அதன் தனித்தன்மை என்ன, அது எவ்வகையில் பயனுள்ளது என்பதை அறிந்திருப்பதைப் போலவே அதன் எல்லைகள் என்ன, அது எதைச் செய்யாது என அறிந்திருப்பதும் முக்கியமானது. எந்த மருத்துவமும் மாயமந்திரம் அல்ல. அதற்கு ஒரு வழிமுறை உண்டு, அவ்வழிமுறைக்கு அடிப்படையான வாழ்க்கைநோக்கு உண்டு. அந்த வழிமுறையே அதன் வலிமை, அதன் எல்லையும் அதுவே.

    அத்துடன் சிந்திக்கும் ஒவ்வொருவரும் தங்கள் உடல் பற்றி, உடலுக்கும் சமூகவாழ்வுக்குமான உறவு பற்றி, உடலை இயக்கும் இயற்கைவிதிகள் பற்றி ஓரளவேனும் அறிந்திருக்கவேண்டும்.பொதுமக்களுக்கு தங்கள் உடல்நலம் மற்றும் சிகிழ்ச்சை பற்றிய ஓர் அறிதலுக்கு உதவும் கல்வி.

    சிந்திக்கும் மனிதன் தன் உடலைப் பற்றி தானே அறிந்துகொண்டே இருப்பான் என்று காந்தி சொன்னார். மேலைமருத்துவம் உடல்பற்றிய ஞானத்தின் பெருந்தொகுப்பு. நாம் ஒவ்வொருநாளும் அதை வெவ்வேறு ஊடகங்கள் வழியாக அறிந்துகொண்டிருக்கிறோம்.

    ஆயுர்வேதம் இந்த மண்ணுக்குரிய மருத்துவம். அது நோய் – சிகிழ்ச்சை என்னும் அளவில் உடலை அணுகவில்லை. உடலை வெவ்வேறு சமநிலைகள் கொண்ட ஒன்றாக அணுகுகிறது. உடல்- உள்ளம் என்னும் சமநிலையும் அவற்றில் ஒன்று. ஆயுர்வேதத்தை அறிவதென்பது முற்றிலும் புதிய கோணத்தில் நம் உடலையும் உள்ளத்தையும் நாம் அறிவதுதான்.

    நம் நோய்களை பற்றி மட்டுமல்லாமல் நம் உடலும் உள்ளமும் செயல்படும் விதத்தைப் பற்றி அறியவும், அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் பயிற்சி இது

    ஆயுர்வேத மருத்துவரும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவருமான சுனில் கிருஷ்ணன் இந்த வகுப்புகளை நடத்துகிறார்.

     

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    முந்தைய கட்டுரைகுருநித்யா காவிய அரங்கு
    அடுத்த கட்டுரைஇந்திய தத்துவ முகாம் நான்காம் நிலை