காட்சிக்கலைப் பயிற்சி

    காட்சிக்கலைப் பயிற்சி

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுக வகுப்புகள் ஏப்ரல்   ஏப்ரல் 19 20 மற்றும் 21 தேதிகளில் ஈரோட்டை அடுத்த மலைத்தங்குமிடத்தில் நிகழும்.


    நவீன ஓவியங்களை புரிந்துகொள்வதென்பது இன்றைய இளையதலைமுறைக்கு நவீன வாழ்க்கைச்சூழலில் மிக அவசியமான ஒன்று. ஒரு நட்சத்திர விடுதியில், ஒரு செல்வந்தரின் இல்லத்தில் அசல் ஓவியமொன்றை காணும் வாய்ப்பு அமையாதவர்கள் குறைவு. இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு அவற்றை எப்படி ரசிப்பதென்று தெரியாது. அடிப்படைப் பயிற்சியே நம் சூழலில் இல்லை. கணிசமானவர்கள் ஏதாவது அபத்தமாகச் சொல்லி ஓவியக்கலை அறிமுகம் உடைய அயல்நாட்டவர் முன் தங்களை கேலிப்பொருளாக்கிக்கொள்வதுமுண்டு

    ஓவியக்கலை அறிமுகம் என்பது வரைவதற்கான பயிற்சி அல்ல. பார்ப்பதற்கான பயிற்சி. அதை அடைந்ததுமே நம்மைச்சூழ்ந்துள்ள உலகம் மாறிவிட்டிருப்பதை காண்போம். நம் கட்டிடங்கள், நம் நுகர்பொருட்கள் ,நம் ஆடைகள் எல்லாமே நவீன ஓவியத்தின் விளைவாக உருவானவை என அறிவோம்.

    நீண்டநாட்களாக பல இளைஞர்கள் கோரியதற்கு ஏற்ப நவீன ஓவியம், நவீன புகைப்படக்கலை பற்றிய ஓர் அறிமுகவகுப்பை புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரும், நவீனக் கலை விமர்சகருமான நண்பர் ஏ.வி.மணிகண்டன் நடத்த ஒப்புக்கொண்டுள்ளார்

    வகுப்பு ஆறு தலைப்புகளில் தனி அமர்வுகளாக அமையும்

    • காண்பியல் கலையை அணுக தத்துவ அழகியல் பயிற்சியின் தேவை குறித்தும் அவற்றை மீறிச் செல்வது குறித்தும்.
    • கீழை மேலை மரபின் வேறுபாடுகளும், அவற்றின் கலை வெளிப்பாட்டின் வேறுபாடுகளும். அவற்றைத்தாண்டி மேலைக் கலையை அணுகுவது குறித்தும்.
    • 19-ஆம் நூற்றாண்டு வரையிலான மேலைக் கலை மரபின் வரலாறும் அழகியல் விவாதங்களும், கலைப்படைப்புகளின் வழியாக.
    • காண்பியல் கலையையும் கலைப் படைப்பையும் வாசிக்கும் முறைமைகள் குறித்து ஒரு அறிமுகம். படிமங்களை வாசிப்பது ஓவிய/சிற்ப/புகைப்பட கலையில்.
    • இருபதாம் நூற்றாண்டு முதல் இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரையிலான போக்குகள். அவான் கார்ட், நவீனத்துவ, பின் நவீனத்துவக் கலை இயக்கங்களும் சமகால கலையும்.
    • புகைப்படக்கலையில் வரலாறும் அழகியல் போக்குகளும். புகைப்படங்களை வாசிப்பதன் முறைமைகளும்

    இந்த வகுப்புகள் ஓவியங்கள் வரைபவர்களுக்கு மட்டுமானவை அல்ல. ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை மற்றும் ஆலயக்கலைகளை ரசிப்பதற்கான பயிற்சிகளும்கூட.

    இன்றைய வாழ்க்கையில் காட்சிக்கலைகளுடன் ஓர் அறிமுகமென்பது நாகரீகத்தின் அடிப்படைகளில் ஒன்று. நவீன ஓவியம் அல்லது புகைப்படக்கலை பற்றிய பரிதாபகரமான அறியாமையை வெளிப்படுத்தி கேலிக்குரியவர்களாக ஆகும் ஏராளமானவர்களை சந்திக்கிறேன். பலரை உயர்மட்டங்களிலேயே காணமுடிகிறது. ஒருவர் தன்னை இன்றைய நவீன நாகரீகத்தில் அறிமுகமுள்ளவர் என்று காட்டிக்கொள்ளக்கூட கொஞ்சம் காட்சிக்கலை அறிமுகம் தேவையாகிறது.

    தமிழகத்து அறிவுச்சூழலுக்கு மாணவர்களுக்கும் நவீன ஓவியக்கலையை அறிமுக செய்ய முடிவெடுத்தது மூன்று காரணங்களுக்காக.

    ஒன்று, இன்றைய உலகில் புழங்குவதற்கே நவீன ஓவியக்கலை சார்ந்த அறிமுகம் தேவை.நவீன ஓவியங்கள், நவீனக் கட்டிடங்கள், நவீன ஆடைகள், நவீன நகைகள் ஆகியவற்றை ரசிப்பதற்கான பயிற்சி அது. அவற்றின் அழகியல் மற்றும் அவற்றுக்குப் பின்னாலுள்ள சிந்தனை முறைகளைப் பற்றி அறிவார்ந்து புரிந்து கொள்வதற்கான பயிற்சி. குறைந்தபட்சம் அவற்றைப்பற்றி பேச்சு நிகழுமிடங்களில் ஒன்றும் தெரியாமல் நிற்காமலிருப்பதற்கான அறிமுகமாவது இன்றைய மனிதனுக்குத் தேவை.

    இரண்டு, இன்றைய உலகில் நவீன ஓவியக்கலை என்பது பலநூறு தொழில்களுக்கான தொடக்கம். கட்டிடக்கலை வரைவாளர், ஆயத்த ஆடை வடிவமைப்பாளர், கணிப்பொறி வரைகலையாளர் என பல துறைகளில் இன்று பலரும் பயில்கிறார்கள். நவீன ஐரோப்பிய ஓவியக்கலை பற்றிய அறிமுகம் இன்றி அவற்றுக்குள் மெய்யாக நுழைய முடியாது. வெறுமே பாடங்களைக் கற்றுக்கொள்வதில் பொருளில்லை. ஓவிய அறிமுகம் அனைத்தையும் புத்தம் புதியதாக காட்டும். நம்மிடம் இருக்கும் சாத்தியக்கூறுகளையே நாம் அறிய முடியும்.

    மூன்று, அனைத்துக்கும் மேலாக இன்றைய எழுத்தாளர், இலக்கிய வாசகர் நவீன ஓவியக்கலையை அறிமுகம் செய்துகொள்ளாமல் இன்றைய சிந்தனையைப் புரிந்துகொள்ளவே முடியாது. இன்றைய இலக்கியத்தின் எல்லா அடிப்படைகளும் ஓவியக்கலையில் இருந்து உருவானவை, அல்லது ஓவியக்கலையையும் இணைத்துக்கொண்டு வளர்ந்தவை. நவீன ஐரோப்பிய இலக்கியம் என்பது ஓவியக்கலையில் இருந்து பெற்ற படிமங்களால் ஆனது. ஓவியக்கலை அறிமுகம் இல்லாத ஒருவர் ஓர் ஐரோப்பிய நாவலை மெய்யாகவே வாசிக்க முடியாது. ஓர் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து எதையுமே ரசிக்கமுடியாது.

    நானறிந்தவரை இன்றைய தமிழ்ச்சூழலில் ஏ.வி. மணிகண்டன் போல இவ்வறிமுகத்தை அளிக்க பிறிதொரு ஆளுமை இல்லை. ஓவியம் அறிந்தவர்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு இலக்கிய அறிமுகம், மொழிப்பயிற்சி இருக்காது. நவீனக் கவிதைகள் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ் நவீன இலக்கியச் சூழலில் புழங்கியிருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களால் அழகியல் கொள்கைகளை விளக்கிக் கற்பிக்க முடியாது .

    ஏ.வி. மணிகண்டன்

    ஏ.வி. மணிகண்டன்
    ஏ.வி. மணிகண்டன் – தமிழ் விக்கி

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    Additional Details

    Category -

    முந்தைய கட்டுரைசைவத் திருமுறைப் பயிற்சி
    அடுத்த கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி