எங்களைப் பற்றி

  இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக எழுதியவர்  (பார்க்க ஜெயமோகன் )

  ஜெயமோகன் இணையதளம் தினமும் வலையேறும் ஓர் இலக்கிய இதழ். ஜெயமோகனின் எழுத்துக்கள், இலக்கியச் செயல்பாடுகள் அந்த தளத்தால் ஒருங்கிணைக்கப்படுகின்றன ( பார்க்க ஜெயமோகன் இணையதளம்)

  விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஜெயமோகனின் வாசகர்களால் 2009ல் உருவாக்கப்பட்டது. இலக்கிய விருதுகள் வழங்குதல், இலக்கிய அரங்குகள் நடத்துதல் ஆகிய செயல்பாடுகளை பதினைந்தாண்டுகளாக முன்னெடுத்து வருகிறது.

  மூன்று முதன்மையான இலக்கிய விருதுகள் இந்த அமைப்பால் இன்று வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் அவ்விருது விழாக்கள் இலக்கியக் கருத்தரங்குகளாக நிகழ்ந்து வருகின்றன. இவற்றைத் தவிர ஆண்டில் இரண்டு இலக்கிய கூடுகைகளும் நிகழ்கின்றன. அமெரிக்காவிலும் இந்த அமைப்பின் கிளைகள் உள்ளள. அவை அங்கே பூன் என்னுமிடத்தில் ஆண்டுதோறும் இலக்கிய, தத்துவ முகாம்களை ஒருங்கிணைக்கின்றன. (பார்க்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்  )

  தமிழ் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கி விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்களால் வெளியிடப்பட்டு வருகிறது. (பார்க்க தமிழ் விக்கி )

  ஜெயமோகன் நாராயண குருவின் மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதியின் மாணவர். தமிழ்ச்சூழலில் ஓர் அறிவியக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற குரு நித்ய சைதன்ய யதியின் ஆணைப்படி குரு உயிருடன் இருந்தபோதே ,1992 முதல், இலக்கிய அரங்குகளையும், தத்துவ அரங்குகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். இவை ஊட்டி நாராயண குருகுலத்தில் நடைபெற்றன. இருநூறுக்குமேல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன (பார்க்க நித்ய சைதன்ய யதி)

  2022 முதல் இந்நிகழ்வுகள் அமைப்புரீதியாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தப்படுகின்றன. அதன்பொருட்டு முழுமையறிவு என்னும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின் கூட்டிசை(Symphony of Values) என்று நித்ய சைதன்ய யதி முன்வைத்த கொள்கையே இதன் ஆதாரம். அறிவியல், கலைகள், இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் ஆகிய அனைத்து அறிவுகளையும் ஒன்றுடனொன்று இணைத்துக் கற்றுக்கொள்வது இதன் வழிமுறை. அனைத்தையும் ஒன்றாக உணரும் ஒரு மெய்நிலையை அடைவது இதன் நோக்கம்.

  இதன் அடிப்படையில் நவீன இலக்கியம், மேலைத்தத்துவம், இந்திய தத்துவம், சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், சைவசித்தாந்தம், பௌத்த தத்துவம், சமண தத்துவம், கிறிஸ்தவ தத்துவம், இஸ்லாமிய தத்துவம், இந்திய ஆலயக்கலை, இந்தியச் சிற்பக்கலை, மேலைநாட்டு ஓவியக்கலை, மேலைநாட்டு இசை, நவீன மருத்துவம், ஆயுர்வேதம், பறவைகளை அறிதல், தாவரங்களை அறிதல் என அனைத்துத் துறைகளிலும் உரிய ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

  கல்விக்கு இன்றியமையாத கவனக்குவிப்பு, உளக்கூர்மை ஆகியவற்றை அளிக்கும் தியானம், யோகம் ஆகிய பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன. (பயிற்சிகள் குறித்த எல்லா தொடர்புகளுக்கும் [email protected])

  இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் அற்றது. அரசியல் விவாதங்கள் ஆகியவற்றை  எந்த வகையிலும் அனுமதிப்பதில்லை. எந்த வகையான மத அடிப்படைகளும்மரபுகளும் அற்றது. எந்த வகையான  ஆசாரங்களும் வலியுறுத்தப்படுவதில்லை. எந்த வகையான பழமைவாதப் பார்வைகளுக்கும் இங்கே இடமில்லை. எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா வகுப்புகளிலும் பங்குகொள்ளலாம்.

  இந்த வகுப்புகளின் வழிமுறை என்பது குருகுல நெறி. ஆசிரியருடன் சிலநாட்கள் உடன் தங்கி அவரிடமிருந்து நேரில் கற்றுக்கொள்ளுதல். குருகுல முறைக்குரிய ஒழுங்குகள் உண்டு. ஆசிரியருக்கு முற்றிலும் கட்டுப்பட்டாகவேண்டும். கல்விக்குரிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்தாகவேண்டும்.

  இணையவழிக் கல்விக்கு நாங்கள் எதிரானவர்கள். இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் இல்லங்களிலேயே ஒடுங்கிக் கொள்கிறார்கள். ஆகவே மூளைச்சோம்பலும் உடற்சோம்பலும் அடைந்து நோயுறுகிறார்கள். கல்வி வழியான விடுதலையையே நாங்கள் குறிக்கோளாகக் கொள்கிறோம். ஆகவே கல்வியின்பொருட்டு ஒருவர் தன் நேரத்தை, வாழ்க்கையின் ஒரு பகுதியை அளித்தாகவேண்டும். கல்விக்காக எதை நாம் அளிக்கிறோமோ அந்த அளவுக்கே நமக்கு கல்வி கிடைக்கும் என்பதே மரபான நம்பிக்கை. கல்வியின் பொருட்டு கிளம்பி வரக்கூடியவர்களுக்கான கல்வியையே நாங்கள் அளிக்கிறோம்.

  ஆர்வமுள்ளவர்களை வரவேற்கிறோம்

  முழுமையறிவு குழு

  தொடர்புக்கு [email protected] 

  பார்க்க பயிற்சிகள் பற்றி அறிந்துகொள்ள…


  Our English Website –  Unifiedwisdom.Today  

  எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

  எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

  எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta


  தயக்கமெனும் நோய்

  பயிற்சிகள் பற்றி…

  ஆன்லைனும் குருகுலமும்

  முந்தைய கட்டுரைஇளைஞர்களுக்கான உளக்குவிப்புப் பயிற்சி
  அடுத்த கட்டுரைஇளைஞர்களுக்கான உளக்குவிப்புப் பயிற்சி