யோகக்கொண்டாட்டம்

    யோகக்கொண்டாட்டம்

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. அவர்களின் பயிற்சிநிலை, அதன் தொடர்ச்சி ஆகியவற்றை ஆசிரியர் பரிசீலிப்பார்


    யோகப்பயிற்சி பலவகையான உடல்நலச்சிக்கல்கள், உளச்சோர்வுநிலைகள் ஆகியவற்றுக்கு பெரும் நிவாரணம் அளிப்பது. ஆனால் அதை முறையாக, நம்மை நன்கறிந்த ஓர் ஆசிரியரிடமிருந்து, அவருடன் தொடர்ந்து கலந்தாலோசித்தபடி, நேரில் கற்றுக்கொள்வதே உகந்தது.

    பெருந்திரளாக, ஓர் உடற்பயிற்சி போல கற்பது இங்கே வழக்கமாக உள்ளது. அது பிழை என்றல்ல, அது உள்ளத்தையும் ஈடுபடுத்துவதற்கு உகந்தது அல்ல என்பதே குறைபாடு. உள்ளத்தை அருகே இருக்கும் ஆசிரியரே வழிகாட்டி நடத்த முடியும். யோகம் என்பது உள்ளம்- உடல் இரண்டும் இணையும் ஒரு பயிற்சி. ஓர் ஆசிரியரிடமிருந்து தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் இங்கே பெரும்பாலும் இல்லை. ஆகவேதான் யோக முகாம்களை சென்ற ஆண்டு முதல் ஒருங்கிணைக்கிறோம்.

    இந்த பயிற்சி முற்றிலும் மதச்சார்பு அற்றது. ஏனென்றால் யோகம் என்பது மதம் சார்ந்தது அல்ல. அது இந்து மதத்தின் எந்த வழிபாட்டு முறைமையுடனும் தொடர்புடையது அல்ல. வேள்வி, ஆலய வழிபாடு ஆகிய இரண்டு இந்து வழிபாட்டுமுறைகளுக்கும் அப்பாற்பட்டது அது.

    யோகம் சாங்கிய தரிசனத்தின் துணைத்தரிசனமாக, தனியொரு மரபாகமே இந்தியாவில் மூவாயிரமாண்டுகளாக இருந்து வந்துள்ளது. சமணம், பௌத்தம் உட்பட எல்லா மதங்களுக்கும் பொதுவானதாகவும் இருந்து வருகிறது. அதை நலவாழ்வுக்கான வழிமுறையாகவும் மெய்த்தேடலுக்கான கருவியாகவும் இந்துமதம் விரிவாக்கிக்கொண்டது. ஆனால் சாங்கியமும் யோகமும் அடிப்படையில் இறையில்லாத தரிசனங்கள் என்றும், எல்லா மதத்தவரும் அதை தங்களுக்குரியதாக எடுத்தாண்டனர் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்றும் அனைத்து மதத்தவரும் அதை தங்கள் மதம் சார்ந்து விரிவாக்கிக்கொள்ள முடியும்.

    யோகப்பயிற்சிகள் சார்ந்த எண்ணற்ற பள்ளிகள் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும், வெகு சில மரபார்ந்த கல்விநிலைகள் மட்டுமே, இந்த துறையில் நீண்ட ஆய்வுகளை செய்து அவற்றை தொடர்ந்து மேம்படுத்தி இன்று வரை சரியான பாடத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

    இந்த துறையில் உலகளவில் இரண்டு விதமான பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஒன்று உடலியல், மற்றும் நோய்க்கூறு சார்ந்த பாடம், {NON TRADITIONAL YOGA} மற்றொன்று மரபார்ந்த பார்வையும், நவீன அறிவியலுக்கு அணுக்கமான ஆய்வுகளையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் {TRADITIONAL YOGA}

    இந்த முகாமில் மேலே சொல்லப்படட இரண்டு பாடத்திட்டங்களளின் அடிப்படைகள் அவற்றை ஒட்டிய பயிற்சிகள், அதன் சாதக பாதகங்கள், அதில் நமக்கு தேவையான பயிற்சிகள் என ஒரு விரிவான பார்வையை முன்வைத்து சிலவற்றை கற்றுக்கொள்ளலாம்

    இந்த வகை பயிற்சிகள் எந்த வித பக்கவிளைவுகளுமின்றி , பெரியவர்கள் அனைவருக்குமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே யோகப்பயிற்சியில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நோய்க்கூறு இருப்பவர்கள் அல்லது மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் அடிப்படையான மனம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் .

    இந்த மூன்று நாள் முகாமில்

    • அடிப்படையான 10 ஆசனப்பயிற்சிகள்
    • 3 விதமான பிராணாயாம பயிற்சிகள்
    • பிரத்யாஹார / தியான அடிப்படைகள்

    என மொத்தம் ஆறு அமர்வுகள் / வகுப்புகள் நடத்தப்படும். பங்குபெறும் ஒருவர் அனைத்திலும் கலந்துகொள்ள வேண்டும்.

    முகாமில் யோக பயிற்சியுடன் பரிந்துரைக்கப்படும் உணவுத்திட்டம் பின்பற்றப்படும்.

    யோகம் பயிலவிரும்பும் ஒரு நவீன உள்ளத்துக்கான பயிற்சியையே உத்தேசித்தேன். தர்க்கபூர்வமான, அறிவியல்சார்ந்த விளக்கங்கள் அளிக்கப்படவேண்டும். இயல்பான, நட்பான வழிகாட்டுதல்கள் தேவை. பயிற்சிக்காக அழகான அமைதியான குருகுலச் சூழல் அமையவேண்டும். இணையான உள்ளங்கள் அங்கே ஒன்றுகூடவேண்டும்.

    யோகப்பயிற்சி இன்றைய சூழலில் நம்முடைய தேங்கிப்போன, மாறாச் சுழற்சி கொண்ட வாழ்க்கைமுறையின் விளைவாக உருவாகும் நீண்டகால உடல்நலச் சிக்கல்களை தீர்க்கிறது. உளச்சிக்கல்களை உடலை செம்மைசெய்வதன் வழியாக சரிசெய்கிறது. நம் தொழில், அலுவலகம், குடும்பம் உள்ளிட்ட சூழல்களில் உருவாகும் பதற்றங்களை எதிர்கொள்ளும் சமநிலையை அளிக்கிறது. நம் கவனத்தை குவிக்க உதவுகிறது.

    யோகப்பயிற்சி பற்றி நமக்கு பல பிம்பங்கள் உள்ளன.

    • யோகப்பயிற்சியால் உடனடி அற்புதங்கள் விளையாது. அது மாயாஜாலம் அல்ல. ஆனால் உண்மையான ஓர் அற்புதம் அதில் உள்ளது. பொறுமையான பயிற்சியால் அதை அடையமுடியும்.
    • யோகப்பயிற்சி என்பது புதியபுதிய வகையில் அமைய முடியாதுஒரு நீண்ட குருமரபின் வழியாகவே அடையமுடியும். ஓர் யோக ஆசிரியர் சொல்லித்தரும் எதையும் அவருடைய மரபு குறைந்தது மூன்று தலைமுறைக்காலம், 100 ஆண்டுகள், பயின்று அவதானித்திருக்கவேண்டும். செய்வன, செய்யக்கூடாதன வகுக்கப்பட்டிருக்கவேண்டும்
    • யோகப்பயிற்சியும் தியானப்பயிற்சியும் வேறு. யோகப்பயிற்சியும் ஆன்மிகப் பயிற்சியும் வேறு. ஆனால் யோகம் தியானத்துடனும் ஆன்மிகத்துடனும் நெருக்கமான உறவுள்ள ஒன்று.
    • யோகம் என்பது அடிப்படையில் தத்துவப்பயிற்சி. அறிவுசார்ந்தே யோகம் கற்பிக்கப்படமுடியும்.

    நடத்துபவர்

    குரு சௌந்தர் பிகார் யோகமரபு என அழைக்கப்படும் சத்யானந்த யோக மரபில் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்ட ஆசிரியர். சென்னையில் சத்யானந்த யோக மையம் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். தொழில்முறையாக முதலீட்டு ஆலோசகர்.

    பொதிகை தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக யோகம் சார்ந்த தொடர் நிகழ்ச்சிளை நடத்தி வருகிறார்.

    யோகநிகழ்ச்சிகள் காணொளிகள் – https://www.youtube.com/playlist?list=PL8h2kpz6_l5yFf3xvFpXv-cbD02i8vL3R

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    Additional Details

    Category -

    முந்தைய கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி
    அடுத்த கட்டுரைகுருநித்யா காவிய அரங்கு