அன்புள்ள ஜெயமோகன்,
‘தற்கடமை’ என்ற சொல்லை உங்களுடைய உரையில் கேட்டு ஒருவகையான திடுக்கிடலுக்கு ஆளானேன். எனக்கு வயது எழுபத்தாறு. இத்தனை ஆண்டுகளாக, பிறருக்கு நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதுதான் எனக்கான கடமை என்று எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறேன்.
எனக்கான கடமை என்பது அறிவைத் தேடுவது, மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ்வது, என் முன்னோருக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்வது என்பதையெல்லாம் இந்தக் காணொலியின் வழியாகப் புரிந்துகொண்டேன்.
முன்னோருக்குச் செய்ய வேண்டிய கடன் என்பது வைதிகச் சடங்குகளைச் செய்வது மட்டுமல்ல; அவர்களின் பெயரை நிலைநிறுத்துவது, அவர்களின் மரபைப் பெருமைகொள்ளச் செய்வது என்பதும்தான். இதையெல்லாம் நான் செய்யவே இல்லை என்று எண்ணும்போது, இந்த முதுமையில் பெரும் சோர்வை அடைகிறேன்.
‘தற்கடமை’ என்பதை எண்ணிப்பார்க்க முடியாத ஒரு சூழலில்தான் நாங்கள் இதுவரை வாழ்ந்திருக்கிறோம். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் எங்களிடம் பெரியவர்களும் ஆன்மிக உபதேசகர்கள் அனைவரும் சொன்னார்கள். குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதுதான் ஒரு மனிதன் செய்ய வேண்டிய ஒரே கடமை என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது.
குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது என்பது வாழ்வின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான் என்பதை உங்களுடைய உரையில் கேட்டபோது, நம்முடைய நீண்டகால மரபும் அதைத்தான் சொல்கிறது என்று தெரிந்துகொண்டேன். ஒருவகையில், இத்தனை காலம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன்.
கமலா கண்ணன்












