இயற்கையில் நாம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

இயற்கையுடன் இருப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மனநிலை. அந்த மனநிலையை வளர்த்துக்கொள்ளாமல் இயற்கையுடன் இருப்பதற்கான பயிற்சியை மேற்கொள்ள முடியாது. இயற்கையுடன் இருப்பது என்பது வெறுமனே ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வதோ, மரம் செடி கொடிகளுக்கு அருகில் இருப்பதோ அல்ல. அது இயற்கையுடன் உள்ளார்ந்த வகையில் ஒன்றிணையும் ஒரு மனநிலை.

நம்முடைய வாழ்க்கை என்பது எதையாவது அடைவதற்கானது அல்ல; மகிழ்ச்சியாக இருப்பதற்கானது. இயற்கையுடன் இணைந்திருப்பதிலேயே முழுமையான மகிழ்ச்சி உள்ளது. அந்த மகிழ்ச்சியை உணர்வதற்கு, இயற்கையுடன் இணைந்திருப்பதற்கான ஒரு சூழலை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் படிப்பு, வேலை, குடும்ப உறவுகள் என அனைத்தும் அமைகின்றன. இவை வாழ்க்கையின் இறுதி இலக்குகள் அல்ல; நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் மட்டுமே.

இந்தப் புரிதல் நமக்கு மிகவும் அவசியம். உலகியல் வாழ்க்கையில் நாம் நாடும் லாபம், வெற்றி, புகழ், குடும்ப உறவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய மனச்சிக்கல்களில் சிக்கிக்கொண்டிருப்பவர்களால் இயற்கையுடன் உண்மையாக இணைய முடியாது. இவற்றை அடைவதிலேயே வாழ்க்கையின் பொருள் இருப்பதாகக் கருதும்போது, இயற்கையுடன் ஒன்றியிருப்பதன் மூலம் கிடைக்கும் ஆழமான மகிழ்ச்சியை நாம் இழந்துவிடுகிறோம்.

இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொள்வதும், அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இயற்கையுடன் இணைந்திருப்பதன் வழியாகவே வாழ்க்கையின் முழுமையை உணர முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்புடன்,

குமரவேல்

முந்தைய கட்டுரைதற்கடமை