அன்புள்ள ஜெயமோகன்,
இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எழும் ஒரு விவாதம், இலக்கியம் அறத்தைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா என்பதுதான். எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. அறத்தையோ ஒழுக்கத்தையோ பிரச்சாரம் செய்யும் எழுத்துகள் எனக்குப் பிடிப்பதில்லை.
ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலக்கியத்தைத் தொடர்ந்து வாசித்த பிறகு, இப்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. இலக்கியம் அறத்தைப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், அறவுணர்விலிருந்தே உயர்ந்த இலக்கியம் உருவாக முடியும். இலக்கியத்தின் ஒட்டுமொத்த நோக்கமே அறம்தான் என்பதை இப்போது உணர்கிறேன்.
இந்தப் புரிதலை எனக்குத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
அன்புடன்
ரவி சாரதி












