அறிவியலும் கோமியமும்

அன்புள்ள ஜெ

நவீன அறிவியலின் இலக்கணவாதியான கார்ல் பாப்பர் பற்றிய அறிமுகமும் அவருடைய அடிப்படைகள் பற்றிய விளக்கமும் தெளிவாக இருந்தன.

இன்று ஓர் ஐஐடி பேராசிரியரான ஆர்.எஸ்.எஸ்.காரர் கோமிய மகிமை பற்றிப் பேசியபோது இங்கே தமிழியரும் திராவிடரும் கொதிக்கிறார்கள். அறிவியல் அறிவியல் என்று குதிக்கிறார்கள். எளிமையாக அவர்களிடம் போய் சித்தமருத்துவம் சொல்லும் கொள்கைகளைப் பற்றி கேட்டுப்பாருங்கள். ஆகா, தமிழர் மருத்துவம் என்று புல்லரிப்பார்கள். சித்தமருத்துவம் லெமூரியாக்கண்டத்தில் தோன்றியது என்று சொல்வார்கள்.

தமிழ்மொழி, திராவிட நாடு பற்றிய இவர்களின் பேச்சுக்களில் ஏதாவது அறிவியல் அடிப்படை உண்டா? ஏதாவது புறவயத்தர்க்கம் உண்டா? எல்லாமே மூடத்தனமான நம்பிக்கைதான். கேட்டால் நீ தமிழ்விரோதி, திராவிடவிரோதி என்பார்கள். அதாவது இங்கே மதமூடநம்பிக்கை கீழ்த்தரம். இனமூடநம்பிக்கை மொழிமூடநம்பிக்கை உசத்தி.

கோமியம் நீண்டகாலமாக அனுபவ மருத்துவமாக இருந்துவந்துள்ளது. பல பழங்குடிகள்கூட பயன்படுத்துகிறார்கள். சாணியும் அவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அது அனுபவ மருத்துவம் மட்டுமே, அறிவியல் அல்ல.அது அறிவியல் ஆகவேண்டும் என்றால் அதற்கு அறிவியல்தர்க்கப்படி புறவயமாக விளக்கம் அளிக்கப்படவேண்டும். அந்த விளக்கம் அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அதாவது நிரூபிக்கவேண்டும்.

அவ்வாறு இன்னும் கோமியத்தின் மருத்துவப் பயன் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல ஆயுர்வேதத்தின் ஏராளமான மருந்துகளும் நிரூபிக்கப்படவில்லை. ஓமியோபதியின் பயனும் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்படும்வரை அதை அனுபவம் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய அறிவியல் என்று சொல்லக்கூடாது. ஐஐடி பேராசிரியர் உளறியது அங்கேதான்.

அறிவியல் என்ன வகையாகச் செயல்படுகிறது என்று விளக்கியிருக்கிறீர்கள். இங்கே இன்னும் அறிவியல் கற்பிக்கப்படவில்லை. அறிவியல் செய்திகளை மனப்பாடம் செய்யவே கற்பித்து வருகிறோம்.

கிருஷ்ணா ராஜசேகரன்

முந்தைய கட்டுரைவரலாற்றை நேர்மையாகக் கற்பது…
அடுத்த கட்டுரைதாவரங்கள், நேரடிக் கானக அறிமுகப்பயிற்சி