தினம் மூன்று இணையப்பக்கங்கள்

அன்புள்ள ஜெ,

ஒவ்வொரு நாளும் மூன்று இணையப்பக்கங்களில் உங்கள் எழுத்து வந்துகொண்டிருக்கிறது (www.jeyamohan.in, www.unifiedwisdom.guru, www.unifiedwisdom.today) இவற்றை வலையேற்றம் செய்வதற்கு உரிய உதவியாளர்களும் எழுதுவதற்குரிய உதவியாளர்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் விடாமல் இவை வெளிவந்துகொண்டிருப்பது நம் சூழலில் ஓர் அற்புதம் என்றுதான் தோன்றுகிறது. ஒரு செயலை முழுமூச்சாகவும், அர்ப்பணிப்புடனும், நேர்த்தியாகவும் செய்வது என்பதற்கு நீங்கள்தான் முன்னுதாரணம். (இந்த மூன்று இணையப்பக்கங்களையும் பெரும்பாலானவர்கள் படிப்பதில்லை என்பதை அறிந்தும் இந்த தொடர் செயல்பாடு நிகழ்கிறது என்பது இன்னும் ஆச்சரியம்). வாழ்த்துக்கள்.

சி.ஜெபமாலை.

அன்புள்ள ஜெபமாலை,

நலம்தானே?

இந்த மூன்று தளங்களிலும் தொழில்நுட்ப நிர்வாகம் என் நண்பர் திரு வின் மேற்பார்வையில் உள்ளது. இதற்கு பணம் கொடுத்தால், அவருடைய தகுதிக்கு நான் லட்சங்கள் கொடுக்கவேண்டியிருக்கும். இது அவருடைய நன்கொடை, என் செயல்பாடுகளுக்கு. வலையேற்றம் முழுக்க நானே செய்கிறேன். எழுதவும் உதவியாளர்கள் இல்லை. எனக்கு உதவியாளர் என எவரும் இல்லை, நான் அருண்மொழியின் உதவியாளராக வேறு இருக்கவேண்டியிருக்கிறது.

இந்த மூன்று தளங்களையுமே வாசிப்பவர்கள் குறைவு என எனக்கும் தெரியும். வாசிப்பதில்லை என்றால் அது அவர்களின் பிழை, நான் என்ன செய்ய முடியும் என்றுதான் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். ஓர் இயக்கம் அதற்கான முகமாக இணையப்பக்கம் ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும். முழுமையறிவுக்கான இணையப்பக்கங்கள் இவை. இவை தொடர்ந்து வெளிவருவது, ஒருநாளும் தவறாமலிருப்பது என்பது முழுமையறிவு இயக்கத்தின் நேர்த்திக்கான சான்று. ஆகவே இவை வெளிவருகின்றன.

முழுமையறிவுப் பக்கங்களை படிப்பவர்கள் சிலர் உள்ளனர். ஆங்கிலப் பக்கங்களை மட்டுமே படிக்கும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் உண்டு.

ஜெ

 

முந்தைய கட்டுரைவாசிப்பும் நானும்