காவிய முகாம் 2026 – ஓர் அகப்பார்வை- இராச. மணிமேகலை

மூன்று நாட்கள் இலக்கியம் சார்ந்து ஒரு விவாதம் ஓரிடத்தில் நிகழ்வதும், அதற்கு நான் போக எண்ணி இயலாமல் போவதும் ஒவ்வொரு வருடமும் நிகழ்வதுதான். இந்தமுறை கிளம்பிவிட்டேன்.   4.30 மணிக்கு அந்தியூரை அடைந்தால் முன்னரே அங்கு பத்து பேர் இருந்தனர். இவர்கள்நம்மவர்கள்என்று இனங்காண முடிந்தது. மடம் செல்கிற பேருந்தின் முக்கால்வாசி பேர் காவிய முகாம்காரர்கள்.  காலை 7 மணிக்கு நித்யவனம் அடைந்தோம். பெண்களின் அதிக எண்ணிக்கை காரணமாக டார்மெட்ரி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. உள்ளே சென்றால் தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் இருந்து நேற்றே வந்திருந்தவர்கள் எங்கள் முகத்தில் தான் கண்விழித்தனர். குளியல் முடித்து உடைமாற்றி வெளியில் வந்தால் திருவிழாக் கொண்டாட்டமாக இருந்தது. உசாவல்களும், கைகுலுக்கல்களும், தோள் சேர்த்தல்களுமான காட்சிகளைக் காண முடிந்தது. மயிலின் அகவலும், குயிலின் கூவலும், சிட்டுகளின் கீச்சும், இளம்பனியின் பிண்ணனியில் மலையும், வானமும் வேறொரு உலகத்தில் காலடி எடுத்து வைத்திருப்பதை உணர்த்தியது. எவ்வித இலக்கியப் பங்களிப்புமில்லாத வாசிப்பு ஒன்றையே மூச்சாகக் கொண்ட எளிய வாசகியாக என் முன் நிகழ்ந்த உரைநிகழ்வுகள், கேள்வி பதில்கள், அதையொட்டி என் அகத்தே நிகழ்ந்த ஒப்பீடுகளைக் கொண்டே இப்பதிவை எழுதுகிறேன்.

அகம்  

காவிய முகாமின் நிகழ்ச்சி நிரல் இரண்டரை நாட்களில் 18 அமர்வுகளைக் கொண்டு  இளம் வாசகர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், மூத்த படைப்பாளிகள் (மோகனரங்கன், நிர்மால்யா, குலசேகரன், எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்ணன், தெய்வீகன், ஜெயமோகன், லஷ்மி சரவணக்குமார்) உள்ளடக்கியதாக இருந்தது  நிகழ்வுக்கு அளிக்கப்பட்ட பல பாடப்பகுதிகள் அளவில் பெரிதாக இருந்தன. ஒவ்வொரு அமர்வும் (உரையும் கேள்வி பதிலுமாக) ஒருமணிநேரம் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ‘பருமையிலிருந்து நுண்மை’ (Macro to Micro) எப்படி சாத்தியம்? எனத் தோன்றியது. இறைவாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து முதல் அமர்வில்கம்பராமாயணமும் நாலாயிரத் திவ்யப்பிரபந்தமும்தலைப்பில் தன் உரையைத் தொடங்கினார், ஜா.ராஜகோபாலன். பெரியாழ்வாரின்  ‘சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்……..உழைக்கு ஒர் புள்ளி மிகையன்றுஎன்ற பெரியாழ்வாரின் பாடலை கம்பரின்அறையும் ஆடரங்கும்…..இறையும் ஞானம் இலாத புன்கவி’   என்ற பாடலோடு அவையடக்கம் கூறித் தொடங்கி வைத்தார்.  இரு இலக்கியங்களிலும் உள்ள கருத்துகளை ஒப்பிட்டுக் காட்டினார். வாசிப்பின் முறையில் வாசகர்களையும் கொண்டுகூட்டிக் கொண்டார்.

அடுத்த அமர்வில் கலிங்கத்துப்பரணியில்போர் பாடியது, களம் பாடியதுதலைப்பில் லஷ்மிநாராயணன் போர்க்களக் காட்சிகளை கம்பராமாயண போர்க்களக் காட்சிகளோடு ஒப்பிட்டுக் காட்டினார். அந்த சந்தநயத்தை ‘’திடும் திடுமென அரங்கு அதிர பாடிக் காட்டியிருந்தால்? இதை ஒருமுறை நான் வீட்டில் பரீட்சித்துப் பார்க்க பிள்ளைகள் பயந்து அலறிய சம்பவம் நினைவுக்கு வந்தது. என் கருத்தாகயானைமேல் சரம்சரமாக எய்யப்பட்ட அம்புகளால் அதன் துதிக்கை கழன்று விழும் காட்சியில் ஆரக்கால் பொருத்தப்பட்ட சக்கரம் போன்று இருந்ததும், அதிலிருந்து முத்துக்கள் நிலமகள் மேல் சொரிவதானது வீரமகளிர்மேல் பூத்துாவி ஆசிர்வாதம் செய்யப்பட்டதை ஒத்தது, (முத்துக்கள் பிறக்குமிடம் 20. அதில் யானையின் தந்தமும் ஒன்று) என அவையில் கூறினேன்.

    ‘தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்என்ற தலைப்பில் சரண்யா பேச வந்தார். நொய்யல், நிழலின் தனிமை, நேர்வழிப்படூஉம், பிறகொரு இரவு ஆகிய கதைகளில் வஞ்சம், பழி, சாபம், என்ற உணர்வுகள் அதீதமாக வெளிப்பட்டிருக்கும் தன்மையை எடுத்துக்காட்டி அதை அவர்கள் எப்படிக் கடந்தார்கள் என்று கூறினார்.  அடுத்தடுத்த அமர்வுகளில்  வாசக பங்கேற்பாளர்கள் பலர்  கருத்தரங்கு முறையில் உரை நிகழ்த்த ஜெ. கடிவாளத்தைக் கையிலெடுத்தார். ‘இது கருத்தரங்கு அல்ல. விவாத  அரங்குதயவு செய்து தரவுகளை, தகவல் திரட்டுகளை முன் வைக்காதீர்கள். நீங்கள் நிகழ்த்தும் உரைத் தலைப்பின் மீதான விவாதப் புள்ளிகளை முன் வைத்து விவாதம் செய்யுங்கள், அதன் மீதான உங்கள் கருத்துகளைப், பார்வையை முன்வைத்து உரை நிகழ்த்துங்கள்’, என்று அறிவுறுத்தினார். இளம் வாசக பங்கேற்பாளர்களிடம் நேர்த்தியையும், குறைந்தபட்ச மூளை உழைப்பையும் அவர் கோரியதாகப் பார்க்கிறேன். மேலும் அவர்கள் கேள்விகளால் திணறியபோது அதை எளிமைப்படுத்தியும், அரங்கில் இருந்த படைப்பாளிகளை நோக்கியும் கேள்விகளை முன் வைத்தார். ‘இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறியும், தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்என்பதில் உள்ள ஆபத்தை உணர்ந்த தன்மையில் அவர் இளம் பங்கேற்பாளர்களை அணுகியதைக் கண்டேன். சான்றாக, ‘குறுந்தொகையில் மலர்கள்தலைப்பில் உரை முடிந்தவுடன் நான் எழுந்து கல்விப்புலம் சார்ந்த தொனியில்அந்தந்த நிலத்திற்கான பூக்கள் ஏதேனும் காரணம் பற்றித்தானே உரிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது? அதைக் கொஞ்சம் விளக்கியிருக்கலாமே’, என்றேன். இதையே அவர் வேறு விதமாகநொச்சிப்பூவின் எடை என்ன? அது விழும் ஓசையைக் கேட்கும் தலைவியின் மனநிலையிலிருந்து இதைப் பாருங்கள்என்றார். மேலும் இன்னொரு பாடலில்கோடல், எதிர்முகைப் பசுவீ முல்லை, நாறு இதழ்க் குவளையொடுஎன்ற பாடல் பூக்களை மட்டும் குறிப்பிடவில்லை. அவளின் தளிர்மேனிக்கும், நறுமணத்திற்கும் சிரிப்புக்கும் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது, என்றார். என்னுள்ளிலிருந்து ஒருத்தி எழுந்தோடி ஜெ விடம் கைகுலுக்கிக் கொண்டிருந்தாள். (இதையே மகளிர் அரட்டையில் வேறுவிதமாக சொன்னபோது இந்தப் பெண்கள் சிரித்த சிரிப்பில் டார்மெட்ரியின் கூரை விரிசல் விட்டிருந்தால் அதற்கு நான் காரணமல்ல.)

இலக்கியத்தில் பறவை வர்ணனைகள்என்ற தலைப்பில் விஜயபாரதி, பறவைகளை காணொலியாகக் காட்டினார். காவியமுகாமுக்கு வந்திருந்த தேவ், மாணவ் என்ற சிறுவர்கள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தவர்களை எழுப்பிவிட்டு அங்கு அமர்ந்து ஆர்வமுடன் அந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். ‘யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமேஎன்ற பாடலுக்குகானமுயலெய்த அம்பினில் யானைப் பிழைத்த வேலேந்தல்என்ற குறள் என் நினைவுக்கு வர, ‘ஈரான்தானே என்ற அமெரிக்காவின் நிலையையும், தவெகதானேஎன்ற திமுகவின் நிலையையும் வைத்து  ஜெ கமெண்ட் அடிக்க, அரங்கு சிரிப்பால் அதிர்ந்தது.

ஆய்வும் புனைவும்தலைப்பில் வேங்கை வனம் நாவலாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன், வரலாறு தகவல்களால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, அத்தகவல்களைக் கொண்டு புனைவுகள் எழுதப்படுவதையும், அவ்வாறு தொகுக்கப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் புனைவில் கையாளப்படுவதில் உள்ள சவால்கள் என்ன? ஒரு ஆய்வேட்டையும் புனைவையும் வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சம் எது? தொடர்பு என்ன? என்பதைமானுடம் வெல்லும், காவல் கோட்டம், அஞ்ஞாடிகதைகளின் வாயிலாக எடுத்துக் காட்டினார். அதிகப்படியான ஆவணங்கள், தகவல்களால்நீரதிகாரம்நாவல்  புனைவின்  அருகே வர எங்கே தடுமாறியது என்றும் குறிப்பிட்டார்.    

அகரமுதல்வன்ஈழத்துப் புலம்பெயர் எழுத்தும் பண்பும்என்ற தலைப்பில் புலம்பெயரும் வாழ்வு, அதன் நிச்சயமற்றத் தன்மை மாறியுள்ள சூழலில் தெய்வீகன் எழுதியரம்போஎனும் நாய்க் கதை (போர் நடந்த நாட்டிலிருந்து வந்த ஒருவரின் மனநிலை போர் முடிந்தபின் போருக்கு எதிரான மனநிலையாக மாறுவதுபா..ஜெயகரன் எழுதியவந்திறங்கிய கதை’, வாசு முருகவேலின்மூத்த அகதி’, முறிந்த பனை, கதைகளின் வாயிலாக (முகாம் வாழ்க்கை சாராத, தனியாக வீடு எடுத்து வாழ்பவர்களின் வாழ்க்கை), இன்றுள்ள புலம்பெயர் இலக்கியம் தன்னுருவத்தை, தன்களத்தை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்று எடுத்துக்காட்டினார்.

பயண இலக்கியம் தலைப்பில் கடலுார் சீனு, நேற்றும், இன்றும், இனியும் என பயண இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியையும், பயண இலக்கியம் வழியே வாசகன் அடையும் சாத்தியங்கள் என்ன என்பதைகௌதம புத்தரின் அரிச்சுவட்டில், அருகர்களின் பாதை, தசமகா தேவியர்நுால்களின் வழியாகப் பயணம் நிகழும் வழிகளைக் கூறினார். குடும்பம் என்ற அமைப்பில் இருந்து எல்லைத் தாண்டி மேற்கொள்ளும் பயணங்கள் எவ்வாறெல்லாம் அதிகாரக் கைப்பற்றுதலுக்காவும், மதம் சார்ந்தும், வணிகம் சார்ந்தும் நிகழ்வதையும், பல சமயங்களில் மானுடம் மீறப்படுவதையும் முன் வைத்தார். ‘மில்லினியம் தீவு, அசோகன் வாழ்ந்த கதைதொலைந்த கதை, கிழக்கும் மேற்கும், பட்டுப்பாதை (பிபிசி) ஏழு நதிகளின் நாடு, பர்மா வழிநடைப் பயணம், மானுடவியல் வரலாறு போன்ற நுால்கள்  பயண இலக்கியத்தின் சிறப்பைக் கூறுவன என்றும், மொழிவழிப் பயண இலக்கியத்தில் நாளை வெள்ளிமலையும் இடம்பெறக் கூடும் என்று தன் உரையை முடித்தார்.

அடுத்து வி.சங்கர்கவிதையை அடைதல்என்ற தலைப்பில்கவிதை எழுதுபவனுக்கு ஏற்படும் தவிப்பும், அது உருவாகி வந்ததும் இதே தவிப்பு வாசகனுக்கு ஏற்படும் தருணமே கவிதையாகிறதுஎன்று  தன் உரையைத் துவக்கினார். ‘இட்லியை வாயில் வைக்கும்போது ஏற்படுகிற மெத்தென்ற தன்மை மாவினுாடாக உருவாகியுள்ள காற்று இடைவெளியால் நிகழ்வதைப்போல,  கவிதை அது சொல்ல வரும் கருத்தை  வாசகன் தன் உணர்வுகளால் இட்டு நிரப்புவதால் சிறந்ததாக்குகிறதுஎன்றார். ‘கவிதையில் கவிஞன் வைக்கிற கருத்து துருத்திக்கொண்டு இல்லாமல் கைநழுவி விழுந்ததாக இருத்தல் வேண்டும்என்று தான் படித்ததை நினைவுகூர்ந்தார். கல்பற்றா நாராயணனின்கழுதையும் குதிரையும்கவிதையையும், பசுவய்யாவின்நடுநிசி நாய்கள்’ (சூரியஸ்தமனத்தை மறைத்த ஆட்டுக்குட்டியும், அது நகர்ந்தோடிய நிலையில் சூரியனைக் காணோம்) என்ற  கவிதையையும் முன்வைத்தபோதுமரத்தை மறைத்தது மாமதயானை மரத்தில் மறைந்தது மாமதயானைஎன்ற வரிகள் மனதிலோடியது. ‘கவிதையை அடைவதற்கான முயற்சியும் அது அமையும் தருணமும் நிகழ்ந்தபடியே இருக்கும் ஒரு மர்மமான வழிமுறையே கவிதை எனச் சுட்டுவதில் தவறேதுமில்லைஎன்றார்.

கவிதைகளின் அறிவார்த்தம்என்ற தலைப்பில் போகன் சங்கர் அவர்கள் Fine tune செய்யப்பட்ட கவிதையில் உணர்வும், உள்ளுணர்வுமே முதன்மையானது, அறிவு அடுத்தநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். கவிதை எப்போதும் அழகியலோடு தொடர்புபடுத்தப்பட்டு  வந்திருப்பதையும், அது ஒருபோதும் அறிவை நோக்கியோ, தத்துவத்தை நோக்கியோ செல்லும் விஷயமாக கருதப்பட்டதில்லை என்றார். அது மனிதனுக்கும் கடவுளுக்கும், விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவிலான ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறதுஎன்றார். ஷெல்லியிலிருந்து ஆரம்பித்து தாந்தே, டி.எஸ். எலியட்டின்உள்ளீடற்ற மனிதர்கள்பிரம்மராஜனின்அறிந்த நிரந்தரம்’, தேவதச்சனின்குளியலறையில் பலபொருட்கள் பயணம் செய்கின்றனஎன்ற கவிதையையும்  சமகால கவிஞரான சபரிநாதனின்காளிங்கரின் கடிதம்என்ற கவிதையையும்  எங்கள் முன் வைத்தார்.

சுசித்ரா தன் அமர்வில்இருத்தலியலுக்கு மேல் உள்ள இருப்புஎன்ற தலைப்பில்கரமசோவ் சகோதரர்கள்நாவலில் இவான் பேசப்படும் அளவிற்கு அல்யேஷா பேசப்படுவதில்லை என்பதையும், அல்யேஷாவின் தரிசனம் வெளிப்படும் பகுதியிலிருந்து தொடங்கி அவனின் தத்துவச் சிந்தனைகள் சிலவற்றைப் பேச விரும்புவதாக குறிப்பிட்டார். ‘கடவுள் மக்களுக்கு சொர்க்கத்தைக் காட்டுகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒரு விருந்தில் மிச்சம் வைக்கப்படும் வைன் கொடுக்கப்படும்போது ஏற்படும் சின்னச் சின்ன மகிழ்ச்சியிலும், அன்பிலும்தான் தெய்வீகம் இருக்கிறது. காதல், நட்பு, தியாகம் போன்றவைகள் தான் மகத்தானவை. கொடுக்கப்படுகிற வைன் ஒரு துரோகம் இழைக்கப்படும்போது இரத்தமாவதையும். பின் தண்ணீராவதும் அன்பு என்ற ஒன்றால் அந்த தண்ணீர் வைன் ஆவதையும் கூறினார். இருத்தலியலுக்குப் பின்பு அப்படிப்பட்ட சிந்தனைகளை முன்னெடுத்தவர்களில் சிமோன் வெயில் முதன்மையானவர் என்றும், நட்பு காதல், கருணை, சேவை மூலமே வாழ்வின் அர்த்தத்தை உணரமுடியும் என்பதை இருத்தலியலுக்கு மேலே உள்ள இருப்பாக என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் நான் புரிந்துகொண்டேன்.

கன்னட எழுத்தாளரான விக்ரம் ஹத்வார் தன் அமர்வில் The craziness of Shivram karanth பற்றிய ஒட்டுமொத்த ஆளுமைப்பண்புகளை முன் வைத்தார். ‘கன்னடமொழியின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக, நாவலாசிரியராக, சூழலியல் போராளியாக, கலை விமர்சகராக, பறவையியலாளராக, கன்னடக் கலைக்களஞ்சியத் தொகுப்பாளராக,  யட்சகான கலைவடிவத்தை மீட்டெடுத்தவராக, நடனக்கலைஞராக, உயரிய விருதான ஞானபீட பரிசு பெற்றவராக என அவரது பன்முகத்திறமைகளைப் பட்டியலிட்டார். அவருடையமண்ணும் மனிதரும்’‘, மரகதவீணை’, ‘அழியாத சுவடுகள்தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள். சமூகசேவையைத் தன் வாழ்க்கையாகக் கொண்ட இவருக்கு போராட்டமே வாழ்க்கையானது. ‘பித்தனின் பத்து முகங்கள்இவரது சுயசரிதை நுாலாகும். காந்தியைப் போலவே தன் வாழ்க்கையையே செய்தியாக மக்கள் முன் வைத்தவர். கவிஞர்களுக்கான பித்து மனநிலை அவரிடம் இல்லாததால் கவிதைத் தளத்திற்குள் அவர் வரவில்லை என்ற செய்திகளையெல்லாம் எங்கள் முன் வைத்தார்.

அடுத்துநினைவுக்கலைபற்றி திருமூலநாதன் தன் பேச்சில்,  வாசிப்பதையும், பார்ப்பதையும், கேட்பதையும் நீண்டகாலம் நினைவில் வைத்திருப்பது எப்படி? அதற்காக நாம் செய்யவேண்டிய பயிற்சிகள் என்னென்ன? என்பதைக் குறித்து உரையாற்றினார். அஷ்டாவதானம், தசாவதானம், சதாவதானம் பற்றியும், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் (ஒரே சமயத்தில் நுாறு செயல்களை நினைவில் வைத்திருக்கக்கூடியவர்) இக்கலையில் சிறந்து விளங்கியதையும் கூறினார். கூர்ந்த கவனம், செய்திகளைத் தொகுத்துக் கொள்ளுதல், தொடர்பு படுத்துதல்  மீச்சிறு தகவல்களை நாம் விரும்புவனவற்றோடு இணைத்து நினைவில் கொள்ளுதல் மூலமாக கவனம் குன்றாமல் நினைவு வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறி தானே அப்பயிற்சியை செய்தும் காட்டினார். திருக்குறள்களின் எந்த எண்ணை சொன்னாலும், சீர் வரிசை மாற்றி  சொன்னாலும் சொல்லுதல், மாயக்கட்டத்தில் நான்கு இலக்க எண்களை எப்படிக் கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகை வருமாறு கூட்டிச் சொல்லுதல், பேரெண் கூட்டல், எந்த வருடத்தின் நாள், மாதம் சொன்னாலும் கிழமை கூறுதல். சொற்றொடரின் வரிசை மாற்றிய எழுத்துகளைக்கொண்டு அந்தச் சொற்றொடரைக் கூறுதல் என்று அசத்தினார். மாணவர்களுக்கு மதிப்பெண் அளித்த பேராசிரியருக்கு மாணவர்களாகிய நாங்கள் அன்று மதிப்பெண் வழங்கினோம். ‘இடைவிடாத பயிற்சியே கவனகக்கலையின் அச்சாணி என்றும், ஒருவன் தான் கற்றதை, தன் புலமையை வெளிப்படுத்தி அவை முன்  நிற்கும் வழிமுறைகளைஒரு குறி கேட்போன், இருகால் கேட்பின், முக்கால் கேட்பின்…….மையறு புலமை மாண்புடைத்தாகும்என்று  நன்னுால் வழி கைக்கொண்டால் போதும் என  உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியாக அமர்வில் பங்கேற்ற அனுபவமிக்கவர்கள் தங்களது உரையை நுண்மையிலிருந்து பருமை நோக்கி கொண்டு சென்றதையும், மற்றவர்கள் பருமையிலிருந்து நுண்மை நோக்கி வரும்போது சொல்ல வந்த கருத்திலிருந்தும், நேரக் கட்டுப்பாட்டிலிருந்தும் விலகியதைக் காணமுடிந்தது.

அகப்புறம்

பாவண்ணன், கவிஞர் அதியமான் அவர்களுடனான மாலைநேர நடைப்பயிற்சியின்போது முன்ஷி பிரேம்சந்தின்கோதான்கதையை பாவண்ணன் சொல்லக் கேட்டதும், வேறொரு இடைவேளையில் வேங்கைவனம் நாவலின் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ராஜஸ்தான் சென்றபோது அதில் வரும் மஜ்ஜிலி புலியைப் பற்றிய தகவல்களையும், நுார்ஜகான் பற்றிய தகவல் சேகரிப்பில் இருப்பதை  ரபியத், என்னுடனான உரையாடலின்போது பகிர்ந்ததும், அகரமுதல்வன், நான், ஜமீலா வலதுசாரி, இடதுசாரி மார்க்சியம் பற்றி சில நிமிடங்களே பேசியதும், ‘மரபிலக்கியம் என்றதும் கம்பு சுற்றவேண்டியது, நவீன இலக்கியம் என்றதும் கம்மென்றிருக்க வேண்டியதுஎன்று கடலுார் சீனு கிண்டலடித்ததும், அது அப்படியல்ல, தெரிந்த ஒன்றுக்கு வினையாற்றுவதும், தெரியாததை அவதானிப்பதும் நல்லதுதானே என பதிலுரைத்ததும், வெள்ளியன்று இரவு உணவிற்குப்பின் வந்திருந்த அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க பாவண்ணன், ஜெயமோகன், போகன்சங்கர், விக்ரம் ஹத்வார் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பைரப்பா பற்றியும், ஷிவ்ராம் காரந்த் பற்றியும் பகிர்ந்த நினைவுகளும்  மறக்கவியலா  தருணங்கள். இரவு மகளிர் மட்டுமானபுளியமரக் கூடுகையின்போது நாங்கள் பேசியவை எங்களை நாங்களே முன்னெடுத்துச் செல்லக்கூடியவை. பெண்கள் வாசிக்கிறார்கள், அறிவுத்தளம் நோக்கிச் செல்கிறார்கள் என்றதும் ஏன் இந்தப் பதற்றம்? அவரவர் கதைகளை பரிமாறிக்கொண்டபோது என்னுள் இருந்ததேவகி சித்தி’ ‘மாற்றம் வந்திருக்கு என்கிறீர்கள். மனப்பான்மை மாறவில்லையே!’ என்று கேட்டாள். அறுபதைக் கடந்தவளும், இருபதைக் கடந்தவளும் எப்போது தேவகி சித்தியைக் கடப்பது? எம் குறைகளை,

கல், தரை அறியும்,

புல், பூண்டு அறியும்,

செடி கொடி அறியும்,

மரம் மட்டை அறியும்,

விண் மண் அறியும்,

யாம் கதைத்த ஞான்றே’,

என்று சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன சொல்ல? எதிரே உணவரங்கில் ஆண்கள் தங்கள் கூட்டம் முடிந்து கலைந்து சென்று கொண்டிருந்தனர். ஜாஜா தலைமையில் எங்களைக் கடந்து சென்ற கூட்டம்நாங்க உங்களைப் பாக்கலே, பேசினதெதுவும் கேட்கலேஎன்று கோஷமிட்டுக்கொண்டு சென்றது. நாங்களும் எங்கள் கூட்டத்தை முடித்து துாங்கச் சென்றோம். அங்கே சசிகலா பண்ண அலப்பறையில் யாருமே துாங்கமுடியவில்லை. ஏன் குலசேகரன் கதவைப்பூட்டிக்கொண்டு கதை எழுதப்போகிறார் எனத் தெரிந்தது. மறுநாள் மறக்காமல் அவரிடம் சென்று, ‘தெய்வமே! நீங்க எங்கியோ போய்ட்டீங்கஎன்று சொல்லிவிட்டு வந்தேன். மறுநாள் நான், ஜாஜா, சிவக்குமரன், வெள்ளை வேட்டி சட்டை அணிந்த பெரியவர், அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுஎங்களுக்கும் இதேபோல் கூடுகை வைத்தால் என்னவெல்லாம் பேசுவோம் தெரியுமா? அவ்வளவு கொடுமைகளை நாங்களும் அனுபவிக்கிறோம். வார்த்தையால் சொல்லமுடியாதுஎன்று சொல்லி சிரிக்கச் சிரிக்கப் பட்டியலிட்டார்கள். எப்பவும் ஜாஜா இருக்கிற இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமில்லை! பேர் அப்படி!

இறுதியாக, ஒவ்வொருவரும் தவறவிடக்கூடாத நிகழ்வு இது. ‘உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிந்தோம்நாங்கள். ஜெவிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றபோது குரு நித்ய அரங்கில் விடுபட்ட  பிளாஸ்டிக் கவர்களையும், பேப்பர் கப்புகளையும் அவர் சேகரித்துக்கொண்டிருந்தார். அச்செயல்இது நம் இடம், இதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமைஎன்று சொன்னது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் செயல்களையே செய்தியாக முன்வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

அன்பும் நன்றியும் ஜெ!

இராச. மணிமேகலை.

முந்தைய கட்டுரைஇஸ்லாமை கற்பவர்கள் உண்டா?