ஜெயக்குமார் நடத்திவரும் ஆலய பயிற்சி வகுப்புகள் எங்கள் முழுமைஅறிவு சார்பில் நான்காண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஏறத்தாழ ஐநூறு பேருக்கு மேல் அந்த பயிற்சிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் அது வாழ்க்கையின் புதிய ஒரு களத்தை திறந்துதருவதாக அமைந்திருக்கிறது. பலர் அன்றிலிருந்து இன்று வரைக்கும் தொடர்ச்சியாக ஆலயங்களை நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்களால் ஆலயங்களைமேலும் புதியதாக கண்டடைகிறார்கள். ஜெயக்குமார் அவர்களே தொடர்ச்சியான ஆலய பயணங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.
மிக விரும்பப்படும், திரும்பத் திரும்ப கேட்கப்படும் இந்த ஆலய வகுப்புகள் மறுபடியும் நடைபெறவிருக்கின்றன. ஆர்வம் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
நாட்கள் ஜூலை 10 11 மற்றும் 12 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் – இடமிருப்பவை
நிஷா மன்ஸூர்
கவிஞரும், எழுத்தாளரும், பேச்சாளருமான நிஷா மன்ஸூர் சூஃபி இஸ்லாமிய மரபைச் சேர்ந்தவர். குரு நித்ய சைதன்ய யதிக்கும் அணுக்கமானவராக இருந்தார்.
முழுமை அறிவின் சார்பில் தொடர்ச்சியாக நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய மெய்ஞான அறிமுக வகுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இந்த வகுப்புகளின் தேவை, பயன் என்ன என்பதை பல கோணங்களில் விளக்கியும் இருக்கிறோம்.
ஐந்துகாரணங்களுக்காக இவை நமக்கு தேவைப்படுகின்றன.
- தமிழ் பண்பாடு என்பது நீண்ட சூஃபி பாரம்பரியம் கொண்டது. நாம் வாழும் இடத்திலிருந்து அதை அதிகபட்சம் பத்து கிலோமீட்டருக்குள் ஒரு முக்கியமான சூபி தர்கா இருக்கும். நம் இலக்கியங்களில் சூஃபி கவிஞர் பலர் உள்ளனர். நம் அருகே இருக்கும் இந்த மாபெரும் பண்பாட்டை அறியாமல் நாம் தமிழ் பண்பாட்டை அறிந்தோம் என்று சொல்வது ஒரு மாயையே. இலக்கியம், பண்பாடு சார்ந்த ஆர்வமுடைய எவருக்கும் சூஃபி மரபை அறிவதென்பது ஓர் அடிப்படைத்தேவை.
- சூஃபி மரபு என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியதல்ல. எந்த சூஃபி ஞானியும் இஸ்லாமியர்களுக்காக மட்டும் பேசியவரும் அல்ல. சூஃபி தர்காக்களில் இன்று வணங்குபவர்களின் பாதிவரை பிற மதத்தினரே. அந்த மரபை அறியாமலேயே வெறும் வழிபாட்டிடமாக அவற்றை கருதுகிறோம். அம்மரபை அறிமுகம் செய்வது இதன் நோக்கம்.
- இஸ்லாமியர்களிலேயேகூட பெரும்பாலும் சூஃபி மெய்ஞான மரபு பற்றிய அறியாமையே உள்ளது. அண்மைக் காலத்திலே மையப்போக்கு இஸ்லாமிய நம்பிக்கையாளர் சூஃபி மரபை வெறும் கல்லறை வணக்கம் என்றும், தனிமனித வணக்கம் என்றும் நிராகரிக்கும் சூழல் உள்ளது. சூஃபி மரபு என்பது மனிதர்களையோ அல்லது மனிதர்கள் சார்ந்த இடங்களையோ இறை என வழிபடுவது அல்ல. இறையருளை அறிந்து அதற்கென்று மட்டுமே வாழ்ந்த மனிதர்களை அறிவதும், அதன் வழியாக இறையுணர்வை அடைய முயல்வதும்தான். ஆகவே இஸ்லாமியர் உட்பட அனைவருக்கும் சூஃபி மரபு அறியப்பட வேண்டிய ஒன்று.
- இந்து மெய்ஞான மரபிலேயே சென்று 400 ஆண்டுகளில் உருவான எல்லா மெய்யியல்களிலும் சூஃபி மரபின் நேரடியான செல்வாக்கு உண்டு. யோக -சித்த மரபுகளையும் சூஃபி அடிப்படைகள் உள்ளன. சூஃபி மரபை முற்றும் அறியாத ஒருவர் யோக -சித்த மரபுகளை சரியாக அறிந்திருப்பார் என்று சொல்ல முடியாது. அந்த மரபை முறையாக அனைவருக்கும் அறிமுகம் செய்யும் வகுப்புகள் அனேகமாக தமிழில் இங்கன்றி வேறெங்கும் நிகழவில்லை.
- கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் இந்திய இசையை, இந்தியக் கலையை, இந்திய கவிதைமரபைப் புரிந்து கொள்வதற்கு சூஃபி மரபின் மீதான அறிமுகம் அவசியமானது. சூஃபி இசையே இந்தியாவில் கஸல் என்றும் வெவ்வேறு பெயர்களிலும் உள்ளது. அந்த இசை மரபின் கருத்தியல் உள்ளடக்கம் அதன் கலைப் பார்வை ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கும் இந்த வகுப்புகள் மிக உதவியானவை
நாள் ஜூலை 3 4 மற்றும் 5
தொடர்புக்கு [email protected]

தியானம், உளக்குவிப்பு, செயல்முனைப்பு- பயிற்சிகள்
தில்லை செந்தில் பிரபு நடத்திவரும் தியானம்- உளக்குவிப்பு- செயல்முனைப்புப் பயிற்சிகள் அவற்றின் எளிமை காரணமாகவும், நடைமுறைப் பயன் காரணமாகவும் புகழ்பெற்றவை. தொடர்ச்சியாக இப்பயிற்சியில் பலர் கலந்துகொண்டே இருக்கிறார்கள். இப்பயிற்சிகள் அடிப்படை தியானம், அடிப்படை யோகம், அடிப்படை மூச்சுப்பயிற்சிகள் ஆகியவை இணைந்தவை. இவற்றுடன் மனம் சார்ந்த அன்றாட நிகழ்வுகளை தொகுத்துக்கொள்ளும் பயிற்சியும்கூட.
இந்த வகையான பயிற்சிகள் இன்றைய நடைமுறைவாழ்க்கையில் மிக அவசியமானவை. அவற்றின் பயனை நாம் உண்மையில் இன்னும் உணரத்தொடங்கவில்லை. ஏனென்றால் நாம் எந்தச் சிக்கலில் இருக்கிறோம் என்பதையே நாம் உணர்ந்திருப்பதில்லை.
- நாம் எந்தச் செயலையும் முழுமையாகச் செய்யாமல் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
- ஒரு செயலில் கவனம் குவியாமல் அதற்குள்ளேயே சிறு சிறு கவனச்சிதறல்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
- நமக்கு மிக முக்கியமானவையும் நாம் மிக விரும்புபவையுமான செயல்களைக்கூட நாம் தொடங்காமல் ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றால்,
- காலை எழுந்ததுமே நமக்கு உகந்த, நமக்கு அவசியமான செயல்களத்திற்குள் நுழையாமல் இருக்கிறோம் என்றால்,
- இரவுகளில் நம் மனம் இயல்பாக அடங்கி தானாகவே சரியான நேரத்துக்கு தூக்கத்திற்குள் செல்லவில்லை என்றால்,
நாம் உண்மையில் சிக்கலில் இருக்கிறோம். நம் உள்ளம் குவியவில்லை. நம் அக ஓட்டமும் புறச்செயலும் ஒத்திசையவில்லை. நம் அகம் ஓடை போல தொடர்ச்சியாக முன்னால் ஓடவில்லை, அது சிதறிச் சிதறிப் பரவிக்கொண்டிருக்கிறது.
அது ஒரு வகையான நோய்நிலை. எந்த நோய்க்கும் அதற்கான மருத்துவம் தேவை. இந்த வகையான அகப்பயிற்சிகள் அதற்கான மருத்துவங்கள்தான். இவை உடலை இலகுவாக ஆக்க, செயல்திறமைகொள்ளச் செய்ய உதவுகின்றன. மனதைக் குவிக்கவும் செயலுடன் இணைக்கவும் கற்பிக்கின்றன. முறையான ஆசிரியர் இவற்றைக் கற்பிக்கவேண்டியிருக்கிறது.
தில்லை செந்தில்பிரபு இந்த பயிற்சியில் முப்பதாண்டுக்கால அனுபவம் கொண்டவர். பல்லாயிரம்பேரை பயிற்றுவித்தவர். அவர்களால் ஆசிரியராக வணங்கப்படுபவர். ஓர் யோக- தியான ஆசிரியர் அதற்கு மட்டும் ஆசிரியர் அல்ல, முழு வாழ்க்கைக்கும் ஆசிரியர் அவர்.
புகழ்பெற்ற இப்பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன.
நாள் – 26, 27, 28.
தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்

நவீன இளைஞர்களிடையே கூட பலருக்கு கழுத்து வலி, இடுப்பு வலி மற்றும் அசைவுகளில் இறுக்கம் போன்ற பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக காதுகள் சார்ந்தும் கழுத்து சார்ந்தும் பலவகை இயலாமைகள். அவை நீண்ட நேரம் பணியாற்றுவதன் விளைவும்கூட. தூக்கமின்மை செரிமான பிரச்சனைகள் என்று வேறு வகையான தொடர்ச்சிக்கல்களும் உள்ளன .இவை எல்லாம் நவீன வாழ்க்கை முறை நமக்கு அளிக்கும் இடர்கள்.
நாங்கள் அறிவார்ந்த வகுப்புகளுக்காக இந்த அமைப்பை தொடங்கிய போது மேற்குறிப்ப்பிட்ட் சிக்கல்கள அனைத்துமே அறிவார்ந்து செயல்படும் அனைவருக்கும் இருப்பதை உணர்ந்து கொண்டுதான் தொடர்ச்சியான யோக- தியான பயிற்சிகளை முன்னெடுத்தோம். அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆயுர்வேதப் பயிற்சியும் உருவாக்கப்பட்டது.
இது மருத்துவப் பயிற்சி அல்ல. ஆயுர்வேதம் எப்படி உடலைப் பார்க்கிறது, எப்படி கையாள்கிறது என்னும் அறிமுகம். நம் உடலை நாமே அறிவதற்கான ஒரு தொடக்கம். ஒரு புதிய உலகுக்குள் நுழைவதன் உற்சாகத்தையும், கற்பதன் கொண்டாட்டத்தையும் அளிக்கும் வகுப்புகள் இவை.
நம் உடலை நடைமுறை சார்ந்து சரி செய்து கொள்வதற்கும், தேவையான நிலையில் மட்டும் உரிய ஆயுர்வேத மருத்துவ உதவியை நாடுவதற்குமான வழிகாட்டல் இது.
தன் உடலை தானே உணர்ந்து கொள்வது என்பது மிக பெரிய ஒரு திறப்பு. தன் உள்ளம் உடலும் ஒத்திசைந்து செயல்படுவதை புரிந்து கொள்ளாத ஒருவரால் சிறந்த முறையில் செயலாற்றவும் இயலாது. குறிப்பாக யோகம் – தியானம் ஆகிய பயிற்சிகளுடன் இணைத்துக்கொள்ளவேண்டிய கல்வி இது.
ஆயுர்வேத் கற்றவரும் தமிழ் நவீன இலக்கியவாதியுமான் சுனில் கிருஷ்ணன் நடத்தும் இந்த வகுப்புகள் ஏற்கனவே பலமுறை நடந்து பங்கேற்பாளர்களால் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டவை
ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்
நாட்கள் ஜூலை 17 18 மற்றும் 19
தொடர்புக்கு [email protected]

அஜிதன் நடத்தி வரும் மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள் இப்போது உலகின் வேறு நாடுகளின் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்க மேலைத்தத்துவப் பேராசிரியர்களும் அஜிதனின் விரிவான கல்வியை உணர்ந்து, நேரடி உரையாடலில் உள்ளனர். அமெரிக்க அறிஞர் ஒருவருடனான ஒர் உரையாடல் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது.
ஐரோப்பிய தத்துவம் மிக விரிவானது. அதை அறிமுகம் செய்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல. ஆனால் எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவு தூரம் நமது புரிதலை மேம்படுத்தி, நம்மை அறிதலின் உவகையை நோக்கிக் கொண்டு செல்வது அது.
சமகால அரசியல் கோட்பாடுகள், சமூகவியல் கோட்பாடுகள், உளவியல் கோட்பாடுகள் மட்டுமல்ல; இன்றைய நிர்வாகவியல் கோட்பாடுகளுக்குக்குக்கூட அடிப்படையாக அமைந்திருப்பவை மேலைச்சிந்தனைகளே. நம் கல்வியும் தொழிலும் தொழில்நுட்பமும் எல்லாமே அதன்மேல்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆகவே மேலைத்தத்துவச் சிந்தனையை அறிந்திருப்பதென்பது இன்றுள்ள தொழில் உட்பட அனைத்தையுமே ஆழமாகவும் ஒட்டுமொத்தமாகவும் புரிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படையை அளிப்பது.
இன்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒரு குறைந்தபட்சக் கல்வி என்று இதைச்சொல்லலாம்.ஆகவே தான் இதற்கு இத்தனை வரவேற்பு உலகமெங்கும் இன்று உள்ளது. தமிழகத்தில் மேலைச்சிந்தனையை முறையாக அறிமுகம் செய்யும் முதன்மையான வகுப்பு என்றே இதைச் சொல்ல முடியும்.
பழைய கிரேக்கச் சிந்தனையில் இருந்து தொடங்கி, இன்றுள்ள தத்துவ சிந்தனைகளை வரை மூன்று நாட்களில் செறிவாகவும் தீவிரமாகவும் அறிமுகம செய்யும் வகுப்பு இது. ஒவ்வொரு தத்துவ சிந்தனையும் என்ன சொல்கிறது என்று அஜிதன் மேற்கோள் பாடம் நிகழ்த்துவதில்லை. மாறாக நவீன மனிதன் எதிர்கொள்ளும் அறம் ,அதிகாரம், உறவுகள், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவு என வெவ்வேறு தளங்களில் எழும் அடிப்படைக் கேள்விகளை தொட்டுச் சிந்திக்கச் செய்து அதன் விடைகளை புகழ்மிக்க தத்துவ சிந்தனையாளர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று விளக்குகிறார்.
அந்தக் கல்வி என்பது சிந்திப்பவர்களுக்கு அறைகூவலானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவஞானியில் தங்களுக்கான சிந்தனையாளனை கண்டுகொள்கிறார்கள். சிலர் நீட்சேயில். சிலர் ஹெகலில். சிலர் ஷோப்பனோர்வரில். அந்தக் கண்டடைதல் வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு தொடக்கம்.
ஆர்வம் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
நாட்கள் ஜூலை 24 25 மற்றும் 26
தொடர்புக்கு [email protected]













