உளசோர்வும் தன்னலமும்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காணொளி ஒன்றில், மனச்சோர்வு நோய் என்பது பெரும்பாலும் செயலின்மை, உடற்பயிற்சி இல்லாமை, நேரடிச் செயல்பாடுகளிலிருந்து விலகுதல் ஆகியவற்றிலிருந்து வருகிறது என்று சொல்லியிருந்தீர்கள். ‘கிளினிக்கல் டிப்ரஷன்’ என்று சொல்லப்படும் தீவிரமான மனச்சோர்வுக்கு மூளை சார்ந்த காரணங்களோ, உடலமைப்பு சார்ந்த காரணங்களோ இருக்கலாம். ஆனால், சாதாரணமாகக் காணப்படும் மனச்சோர்வு என்பது நாம் செயல்பாடுகளை வேண்டுமென்றே குறைத்துக்கொள்வதிலிருந்து உருவாவது.

சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு பெரும்பாலும் இந்த மனச்சோர்வுகள் படிப்படியாக நீங்கி வருவதைப் பார்க்க முடிகிறது.

தன்மூலம் மனச்சோர்வுக்கு இன்னொரு காரணமும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனச்சோர்வில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பிறரைப் பற்றி கவலைப்படுவதில்லை. பிறருடைய துன்பமும், பிறருடைய அக்கறைகளும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தன்னை நோக்கியே தன்னைச் சுருக்கிக்கொள்வது இந்த வகையான மனச்சோர்வின் ஒரு முக்கியமான அறிகுறி.

தன்னுடைய வெற்றி, தன்னுடைய இயலாமை, தன்னுடைய சோர்வு என்று தன்னைப் பற்றியே அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஆகவே சோர்வு பெருகுகிறது.

இந்தத் தலைமுறையில், பிறரைப் பற்றி கவலைப்படாமல், தன்னுடைய வெற்றியையும் மகிழ்ச்சியையும் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும் என்பதைத்தான் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆகவே, அவர்கள் மெல்ல மெல்ல ஒருவிதமான ஆழமான மனச்சோர்வை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள்.

மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கு பிறரைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு முக்கியமான வழியாக இருக்கலாம். ஒருவருடைய பெற்றோருக்கு ஆயிரம் சிக்கல்களும் சவால்களும் இருந்தாலும், அவர்கள் மனச்சோர்வை நோக்கிச் செல்வதில்லை. அதற்குக் காரணம், அவர்கள் கவனித்துக்கொள்ளவும் பொறுப்பேற்றுக்கொள்ளவும் பிறர் இருக்கிறார்கள் என்பதுதான்.

ஆர்.ராமகோபால்.

முந்தைய கட்டுரைமகிழ்ச்சியை உணர்தல்…