அன்புள்ள ஜெயமோகன்,
உங்களின் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
குறிப்பாக பாலியல் தளங்களில் தங்களின் கவனத்தை இழந்து வருபவர்கள் பற்றிய காணொளி மிக விரிவாகவும் சிறப்பாகவும் வழக்கம்போல பேசியிருந்தீர்கள் இறுதியில் உளக்குவிப்பு வகுப்பு அவர்களுக்கு எவ்விதம் உதவக்கூடும் என வரையறுத்து நிறைவு செய்திருந்தீர்கள்
நான் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன் கிட்டத்தட்ட உங்களின் இருபது வருட வாசகன் என்கிற முறையில் சற்றே உரிமை எடுத்துக் கொள்கிறேன் பிழை இருப்பின் பொறுத்தருள்க
நீங்கள் சொன்ன சிக்கல்கள் பாலியல் சார்ந்து ஏற்படும் விழைவு மெல்ல மெல்ல பல மடங்காகப் பெருகி இயல்பு வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது, வேலையில் கவனச்சிதறல் முதலாக நேரவிரயம் வேலையில் விருப்பமின்மை, எரிச்சல், மனஅழுத்தம் மற்றும் பல.
குடும்பம் மற்றும் துணையுடன் நேரம் செலவிட முடியாமல் அவதிப்படுவது மிக முக்கியமாக எந்நேரமும் குற்றவுணர்ச்சியில் மூழ்கித் தவிப்பது
சுருங்கச் சொன்னால் மனம் மிக மோசமாகக் கெட்டுப் போயிருக்கிறது தன்னைக் கெடுத்துக்கொள்ளும் தூண்டுதல்களுக்கு இலக்காகி தன் வசமற்று போய்விட்டது
குடும்பம் மற்றும் துணையுடன் நேரம் செலவிட முடியாமல் அவதிப்படுவது மிக முக்கியமாக எந்நேரமும் குற்றவுணர்ச்சியில் மூழ்கித் தவிப்பது
சுருங்கச் சொன்னால் மனம் மிக மோசமாகக் கெட்டுப் போயிருக்கிறது தன்னைக் கெடுத்துக்கொள்ளும் தூண்டுதல்களுக்கு இலக்காகி தன் வசமற்று போய்விட்டது, தன்னுடைய இயல்பான ஒழுங்கு சிதறிவிட்டது (order has become disorder)
Prefrontal Cortex பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அது முழுமையாக அமைவதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகும் என அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, நம்முடைய தலையின் பின்புறத்தில் உள்ள அமைப்பு நாம் சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும், திட்டமிடுவதையும் உருவாக்கும் ஒரு அமைப்பு.
நம்முடைய மூளையை நான்கு செயல்பாடுகளாக வகுக்கலாம் (Cricuit,Alarm,filter,Scan)
Circuit:- கிட்டத்தட்ட வயரிங் போன்ற ஒரு அமைப்பு.
Alarm:- நன்மை தீமைகளைச் சுட்டிக்காட்டும் ஒரு அமைப்பு.
Filter:- நன்மை மற்றும் தீமைகளை மிகத் தெளிவாகத் தீர்மானம் செய்யும் அமைப்பு.
Scan:- இந்த ஒட்டுமொத்தத்தையும் ஒருமுறை சரிபார்த்து தனக்குரியதைத் தேர்ந்தெடுக்கும் ஒரு அமைப்பு.
இந்த அமைப்பில் ஏதோ ஒன்று பழுதுபட்டிருந்தாலும் அவருக்குத் தீங்குகள் விளைவது உறுதி.
இது அவர் செய்துகொள்ளக்கூடிய தீங்கு அல்ல அந்த அமைப்பில் இருக்கும் சிக்கல், இந்தியக் குடும்பங்களின் நெருக்கடி சமூகத்தின் கட்டுமானம் மிக இறுக்கமானது, தன்னைத் திறந்து கொள்வதாக நினைத்து அவர் பாலியல் தளங்களை நோக்கிப் போடப்படும் வலையில் அவர் சிக்கிக் கொள்கிறார்.
சிக்குவதிலும் ஆச்சரியமாக நான்கு வகைகள் உள்ளன trigger,obsession,anxiety,compulsion.
மூளையின் பழுதுபட்ட அமைப்பு எந்தத் தூண்டிலில் நீங்கள் சிக்குவீர்களோ அதை அமைக்கிறது, சிக்கியவுடன் இறுக்குகிறது, அந்த இறுக்குதலில் அமைதி பறிபோகிறது, ஆனால் பலவந்தமான இந்தப் பிடியிலிருந்து விடுபட முடிவதில்லை.
பாலியல் தளங்களைப் பார்ப்பவர்களின் குற்றவுணர்ச்சியே சான்று அவர்கள் விடுபட நினைக்கிறார்கள் முடியவில்லை, ego dystonic என்று சொல்லும் வலையில் விழுந்து கிடக்கிறார்கள் எது வேண்டாம் என நினைக்கிறோமோ அதன் வலையில் அகப்பட்டு அமைதி இழப்பது.
இவற்றை உளக்குவிப்பு மற்றும் யோகா மூலமாகத் தீர்க்க முடியுமா என்றால் அதற்கு முன்னதாக செய்ய வேண்டியவை உண்டு அவற்றோடு யோகா ஆயுர்வேதம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளும் போது பலன்கள் பிரமிக்கத்தக்க வகையில் அமையும்.
யோகா மற்றும் உளக்குவிப்பு மனத்தின் பதற்றத்தைக் குறைக்கும் ஆனால் வருடக்கணக்காக பாலியல் தளங்களில் வீழ்ந்து கிடப்பவர்களின் பாதிப்பின் தன்மையை வரையறுக்க வேண்டும்,
அவர் சிக்கிக்கொண்டிருக்கும் சுழற்சி அதன் வடிவங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் பழக்கமா,கட்டாயமா, உறவுச் சிக்கல்களா
எந்த வகையில் நமக்கு பலவீனம் உண்டோ அதை கையில் எடுத்துக்கொண்டு நம்மை வீழ்த்தத் தயாரான ஒன்று நம் மூளையின் கட்டமைப்பில் உண்டு.
இந்தப் பிரச்சினையின் தீவிரம் மருத்துவர்களுக்கே தெரிவது இல்லை இளநிலை மருத்துவப் படிப்பில் மனநலம் சார்ந்த வகுப்புகள் வெகுக் குறைவு.
ஆக எப்படி தான் சமாளிப்பது?
Exposure and Response Prevention-
மென்மையாக எதிர்கொள்ளுங்கள் ஆனால் எதிர்வினை செய்யும் நேரத்தை அதிகப்படுத்துங்கள்.
முன்பு ஒரு கட்டாயத்துக்கு ஐந்து நிமிடங்களில் ஆட்படுவீர்கள் என்றால் அதை இருபது நிமிடங்களுக்குத் தள்ளிப் போடுங்கள்.
உங்களின் பலவீனமான நேரம் என்ன காலையில் உற்சாகமானவராக இருந்தாலும் பிற்பகல் அல்லது இரவு உங்களின் கவனம் குறைந்த நேரத்தில் அது உங்களைத் தாக்க வருகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
இது அறிவியல் தசாப்தங்களாகச் செய்த முயற்சியின் பெயர்தான் ERP.
இதில் முறையான பயிற்சி பெற்று இதைச் செய்பவர்கள் மனச்சிக்கல்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கிறார்கள் என NIMHANS பெங்களூருவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூளையின் வயரிங்கை மாற்றக்கூடிய வழிகளைக்கூட கண்டுபிடித்திருக்கிறார்கள் குறிப்பாக dr.schwartz 1996 இல் நான்கு வழிகளைச் சொன்னார்
Relable,Reattribute,Refocus and Revalue:-
அடையாளம் காண்தல்,வரையறை செய்தல்,மதிப்பிடுதல் மற்றும், கவனம் கொடுப்பதா அல்லது ஒதுக்குவதா என உறுதி செய்தல்
இதை ஒரு தெரபிஸ்டின் உதவியுடன் தொடர்ந்து பயிலும் போது மாற்றங்களை உணர முடியும்.
மருந்துகளின் தேவை:-
நம்முடைய மூளையில் செரோட்டோனின் என்கிற ரசாயனம் உள்ளது அந்த ரசாயனம் நம்முடைய மனதைச் சமாளிப்பதில் அமைதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது, குறிப்பாக நாம் ஒரே எண்ணத்தில் சிக்கிக் கொள்வதைத் தடுக்கிறது முடிவெடுக்கும் திறனுக்கு பெரிதும் உதவி செய்கிறது இது குறையும்போதும் நாம் பேசிய பல சிக்கல்கள் உருவாகின்றன.
இதற்கு மருந்துகளை FDA பரிந்துரைத்திருக்கிறது.
ஸ்வார்ட்ஸ் சொன்ன நான்கு வழிகளை விட நம் மரபுக்கு நெருக்கமான ஒரு தெரபி.
Acceptance and Commitment Therapy:-
எண்ணத்துடன் போராடாதே வரவும் போகவும் விடு, சாட்சி பாவம்.
யோகமும் ஆயுர்வேதமும் பலனளிக்கும் கண்டிப்பாக பலனளிக்கும் ஆனால் தனியாக அல்ல.
தெரபிஸ்ட் மற்றும் மருந்துகளின் இணைவு பலரை மனச்சிக்கலிலிருந்து மீட்டிருக்கிறது.
Sheet anchor role-ஐ தெரபியும் அதன் துணை நிலைகளாக மருந்து மற்றும் யோகா அல்லது உளக்குவிப்பு நிகழும் போது மாற்றம் உறுதி.
1999 சான் டியாகோவில் Dr.shannahoff-kalsa குண்டலினி யோகா அளித்த பலன்களைப் பதிவு செய்திருக்கிறார்.
(https://en.wikipedia.org/wiki/David_Shannahoff-Khalsa)
மருந்து உபாதைகளைக் குறைக்கிறது, தெரபி சிறிது சிறிதாக ஆனால் உறுதியாக வேலை செய்கிறது, யோகா அமைதிப்படுத்துகிறது.
நீங்கள் சொன்ன நபர்கள் இன்றிருக்கும் நிலையிலிருந்து மீள்வதற்கான வழி இதுவே, இதைப் புரிந்துகொண்டவர்களுக்கு உளக்குவிப்பு பயிற்சியும் உதவும்.
தங்களின் தர்க்க மனத்தைக் கையாளாமல் மேலும் ஆழ்ந்து செல்வது சாத்தியம் இல்லை.தங்களின் தோல்வியை அமைப்பின் தோல்வியாக என்னிடம் ஒரு நண்பர் பேசிய பிறகுதான் இதை எழுதுகிறேன்
இந்த அமைப்பின் மீது பெரும் மதிப்பு கொண்டிருப்பவன் நான்.
வைணவம் குறித்த வகுப்பிற்குப் பின்னர் என் தேடலின் வழியாக என் வாழ்வின் தரிசனமாக அது மாறிவிட்டது அதை பின்னர் எழுதுகிறேன்.
நம்முடைய நோக்கம் ஒருங்கிணைந்த கல்வி எனவே இந்தக் கருத்துக்களை தாங்கள் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.
சந்தோஷ்குமார்
அன்புள்ள சந்தோஷ்குமார்
தனிப்பட்ட உளவியல் சிக்கல்கள், பல்வேறு உடல்சார்ந்த பிரச்சினைகள், அடிமைத்தனம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு மாற்று வழிகளாக யோகம், தியானம், கலைப் பயிற்சிகள் ஆகியவற்றை நான் முன்வைக்கிறேன்.முழுமையறிவின் நோக்கங்களில் அதுவும் உண்டு
ஆனால், இந்தப் பயிற்சிகள் குறித்து எனக்கு ஓர் அடிப்படையான தெளிவு உண்டு. தீவிரமான பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு (chronically affected) இவை தீர்வாக அமைந்துவிட முடியாது.
யோகம் முதலிய அகவயப் பயிற்சிகள் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்றோ, எந்த நோயிலிருந்தும் ஒருவரை மீட்டுவிடும் என்றோ நாங்கள் ஒருபோதும் வாக்குறுதி அளிப்பதில்லை. அத்தகைய மிகையான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு எதிரான மனநிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன்.
தன்னுடைய வாழ்க்கையை ஓரளவுக்குத் தானே கையாளக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்காகவே இந்தப் பயிற்சிகள் முன்வைக்கப்படுகின்றன. தன்னுடைய உடல்நிலை, மனநிலை, வாழ்க்கைமுறை ஆகியவற்றில் தானே சில மாற்றங்களைச் செய்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர்களுக்கு இவை உதவக்கூடும். ஆனால், அந்த ஆற்றலே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முறையான மருத்துவ உதவியை நாடுவதுதான் முதன்மையான வழி. அத்தகைய சூழலில் அறிவியல் அடிப்படையிலான மருத்துவத்தின் வழிகாட்டுதலே அவசியம்.
இன்றைய உலகில் பல்வேறு உடல்சார்ந்த சிக்கல்களால் பாதிக்கப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். நவீன மருத்துவம் அவர்களில் பலருக்கு உதவுகிறது. ஆனால் நவீன மருத்துவத்திலேயேகூட பத்தில் ஒருவருக்கே பயன் அளிக்கிறது. ஏனென்றால் நோயாளி மருத்துவ ஆலோசனையை புறக்கணிப்பது, மருத்துவத்துக்கு எதிரான உளநிலையை உருவாக்கிக்கொள்வது, வெவ்வேறு மருத்துவமுறைகள் மற்றும் மருத்துவர்களை மாறிமாறி நாடுவது என பல சிக்கல்கள் அதிலும் உள்ளன.
எனவே, அனைவருகும் யோகம், தியானம் போன்ற பயிற்சிகள் மருத்துவத்துக்கு மாற்றாக அமையும் என்று நான் கூறுவதில்லை. தன்னுடைய உடல்நிலையைத் தானே கையாள முடியாத அளவுக்குத் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட ஒருவர், இத்தகைய பயிற்சிகளை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது.
மருத்துவ உதவியைப் பெற்றுக்கொண்ட ஒருவர், தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையையும் மாற்றியமைத்துக்கொள்ளாவிட்டால், அவருக்கு நீடித்த பயன் கிடைப்பது கடினமாக இருக்கலாம். இங்கேதான் யோகம், தியானம், கலைப் பயிற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இவை மருத்துவத்துடன் இணைந்து, வாழ்க்கைமுறையை மறுசீரமைப்பதற்கும், உடலையும் மனத்தையும் பேணுவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவதற்கும் உதவக்கூடும்.
இத்தகைய உதவிகள் பல உள்ளன. பல்வேறு உடல்சார்ந்த பாதிப்புகளால் அவதிப்பட்டு, மருத்துவ உதவியின் மூலம் மீண்ட பிறகு, யோகம், தியானம், கலைப் பயிற்சிகள் ஆகியவற்றை நாடி, அவற்றின் வழியாகத் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மறுசீரமைத்துக்கொண்டு நலமாக வாழ்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகைய அனுபவங்கள் இந்தப் பயிற்சிகளின் பயனை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால், இந்தப் பயிற்சிகள் அனைத்தும் உதவிகள்தான். அவை ஒருவருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கின்றன; ஒரு வழியைக் காட்டுகின்றன. அந்த உதவிகளைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்வது அந்தந்த மனிதரின் பொறுப்பாகும்.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை மீட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் முயற்சியையும் கைவிட்டுவிட்டால், அவருக்காக எவராலும் எதையும் செய்துவிட முடியாது. தன்னைத் தானே கைவிட்டுவிடுகிற ஒருவரைக் காப்பாற்றுவது எளிதல்ல.
யோகம், தியானம், கலைப் பயிற்சிகள் ஆகியவற்றின் உண்மையான இடம் இதுதான். அவை மருத்துவத்துக்கு மாற்றானவை அல்ல; வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், தன்னைத்தானே மறுசீரமைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்வை நோக்கி நகரவும் உதவும் வழிகள். அவற்றின் எல்லைகளை உணர்ந்துகொண்டு பயன்படுத்தும்போதுதான் அவற்றின் உண்மையான பயனை நாம் அடைய முடியும்.
ஜெ












