ஓவியம், வாழ்க்கை.

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,

அக்டோபர் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களும் நடைபெற்ற ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்த அனுபவமாக அமைந்தது.

லலிதா மாஸ்டர் அவர்கள் ஓவியம் வரைவதற்கான அடிப்படைகளை மிகவும் எளிமையாகக் கற்றுக்கொடுத்தார். புள்ளிகள், கோடுகள், குறுக்குக் கோடுகள், நிழலிடும் கோடுகள், கிறுக்கல்கள், வண்ணத் திட்டுகள் எனத் தொடங்கி, சிறிய இலைகள், பூக்கள், பூந்தொட்டி என்று படிப்படியாகப் பயிற்சி அளித்தார். இவ்வாறு எளிய பயிற்சிகளின் வழியாக ஓவியம் வரைவதற்கான நம்பிக்கை எங்களுக்குள் உருவானது. தொடர்ந்து, அழகான கேரளத்து வீட்டை வாட்டர் கலரில் வரையும் பயிற்சியும் நடைபெற்றது.

மாஸ்டர் அவர்கள் இயற்கைக் காட்சியை வரைந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வண்ணங்களைக் கலந்து, தூரிகையை இயல்பாகவும் வேகமாகவும் கையாண்டு, ஒவ்வொரு தூரிகைத் தடத்திலும் அழகை உருவாக்கிய விதம் வியப்பளித்தது. ஒரு காட்சியை உற்றுக் கவனித்து, அதை வண்ணங்களின் வழியாக ஓவியமாக மாற்றும் அனுபவத்தை நேரில் காண்பது தனித்துவமான மகிழ்ச்சியை அளித்தது.

இது நான் கலந்துகொண்ட இரண்டாவது ஓவியப் பயிற்சி வகுப்பு. இதற்கு முன்பு, மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் வகுப்பிலும் கலந்துகொண்டிருந்தேன். இரண்டு வகுப்புகளிலும் வயது, பதவி, தகுதி போன்ற வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஓவியம் வரைந்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. 

லலிதா மாஸ்டர் அவர்களை நேரில் சந்தித்து, ஓவியங்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான உபகரணங்கள் குறித்து உரையாடியதும் மகிழ்ச்சியளித்தது. அவரிடமிருந்து பெற்ற ஆலோசனைகள், தொடர்ந்து ஓவியம் வரைவதற்கான ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளித்தன.

என்னுடைய முதல் வாட்டர் கலர் ஓவியத்தையும் தற்போதைய ஓவியத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது. தொடர்ந்து பயிற்சி செய்வதும், நான் வரைந்த ஓவியங்களை வாட்ஸ்அப் குழுவில் பகிரும்போது லலிதா மாஸ்டர் அவர்கள் வழங்கும் ஆலோசனைகளும் இந்த முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கின்றன. 

நான் 42 வயதில் வாட்டர் கலர் ஓவியம் வரையத் தொடங்கியிருக்கிறேன். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட சில குழந்தைகளோ நான்கு வயதிலேயே ஓவியப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு இளம் வயதிலேயே லலிதா மாஸ்டர் போன்ற ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

 முதல் வகுப்பில் கலந்துகொண்டதுதான் என் ஓவியப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அன்றாட வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகி, வண்ணங்களுடனும் கோடுகளுடனும் சில மணிநேரங்கள் செலவிடுவது மனதிற்கு ஒருவிதமான அமைதியையும் நிறைவையும் அளிக்கிறது.

இத்தகைய  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும், ஓவியர் லலிதா ராகவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரபாகரன்

முந்தைய கட்டுரைபறவைகளை அறிதல்…