அறிவைப்பாடுதல் – ஏ.வி.மணிகண்டனின் வகுப்புகள் பற்றி விஷால்ராஜா

ஏ.வி.மணிகண்டன்

முழுமையறிவு ஒருங்கிணைத்த நவீன காண்பியல் கலை பயிற்சி முகாமில் சென்ற வார இறுதி (30/08/24 – 01/09/24) கலந்து கொண்டு திரும்பினேன். புகைப்படக் கலைஞரும் கலை திறனாய்வாளருமான நண்பர் ஏ.வி.மணிகண்டன் பயிற்றுவித்தார். மூன்று நாட்கள் தீவிரமான உரைகள் நிகழ்த்தினார். கலந்துரையாடினார்.

இன்று இணையத்தில் சர்வதேச பல்கலைக் கழகங்களில் நடக்கிற வகுப்புகள்கலைஞர்கள்சிந்தனையாளர்கள் நிகழ்த்துகிற உரைகள்நமக்கு எளிதாக காணக் கிடைக்கின்றன. அப்படியான எந்த சர்வதேச அரங்குக்கும் குறைவில்லாத தரத்தில் இந்த நிகழ்வு நடந்தது என உறுதியாக சொல்லலாம். கவிதை பற்றிய ஆழமான பேச்சே கவிதையனுபவம் ஆவது போலகலை அறிமுகமும்  கலையனுபவம் ஆக முடியும் என்பதற்கு இந்நிகழ்வு இன்னொரு சான்று.

.வி.மணிகண்டனின் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் அவருடைய கலைக் கொள்கைகளைவிமர்சன அணுகுமுறைகளை ஏற்கனவே  அறிந்திருப்பார்கள். இந்த வகுப்பு அதன் நீட்சி போலவே அமைந்திருந்தது. அல்லது அக்கட்டுரைகள் இவ்வகுப்பின் முன்னோட்டங்கள் எனலாம். மணியின் இந்த உரைகள் வெறுமனே காண்பியல் கலைஞர்களின்கலையாக்கங்களின் அறிமுகம் மட்டும் அல்ல. மாறாக ஒட்டுமொத்த மேற்கத்திய சமூகக் கலாச்சாரத்தின்வரலாற்றின் அறிமுகம். கலை பரிணாமத்தின் அறிமுகம். கலைக்கும் கலைஞனுக்கும்கலைக்கும் சமூகத்துக்கும்கலைக்கும் தனிமனித அனுபவத்துக்குமான உறவின் நடனத்தின் அறிமுகம். இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களில் இது முக்கியமானது.

வான்கா

எந்த துறையும் தனித் தனியாகவே அறிமுகமாவதும் கற்றுத் தரப்படுவதும் இந்த காலக்கட்டத்தின் முக்கிய சவால்களில் ஒன்று. மருத்துவமனையில் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் சிறப்பு பிரிவுகள் தோன்றிக் கொண்டே போகும்போது  ஒட்டுமொத்தமாகமனிதன்என்ற உணர்வைகருத்துருவைஇழக்கிறோம். நோய் தீர்ந்தாலும் அந்த இழப்பை சரி செய்வது கடினம். சமூகம்வரலாறுமதம்தத்துவம் ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு தனியே அனுகப்படும்போது கலைஇலக்கியம் உட்படதன் இருப்பை தானே முழுமையாக உணர முடியாததாக மாறுகிறது. சுயபிரக்ஞையை இழக்கிறது. மற்றமை இல்லாமல் ஆகிறது.

“வெவ்வேறு சிந்தனா முறைமைகளால்ஒட்டுமொத்தமாய் புரிந்துகொள்ளக்கூடிய வழியில் இணைய முடியாவிட்டால்அது நம் புரிந்துகொள்ளும் முறையில் இருக்கும் பிழை[யே]” என்பார் மெரிலின் ராபின்சன். அந்த பிழையை அடிக்கோடிட்டு சுட்டிக் காட்டும்விதமாகவே மணி இவ்வமர்வுகளை திட்டமிட்டிருக்கிறார். “படிமம்என்பதை மைய இணைப்பாக பயன்படுத்தி அனைத்தையும் ஒன்றுபடுத்துகிறார். கிறிஸ்து வெவ்வேறு காலகட்டங்களில் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வைத்தே கிறிஸ்தவ மதத்தின்ஐரோப்பிய கலாச்சாரத்தின் வளர்ச்சி போக்கை அறிந்துவிட முடியும் என்பது போல. அல்லது தேவாலயங்களின் கட்டிட அமைப்பைஉயரத்தைவைத்து மனிதமைய நோக்கு எப்படி தோன்றியது என அறிந்துவிட முடியும் என்பது போல. அதன் வழியே படிமமே ஒரு நாகரீகத்தின் மையம் என்பதை நிறுவுகிறார். படிமம் என்பது மனிதர்கள் காலத்தை உணர்ந்ததன் வெளிப்பாடு. எனில் படிம வாசிப்பே உண்மையான கலாச்சார கல்வி எனவும் வலியுறுத்துகிறார்.

கலை ஒரு தனி அறிவுத் துறை. அதே நேரம் கலாச்சாரத்தில் ஒரு பகுதி. தத்துவத்தின் பரிசோதனைக் கூடம். மதக் குறியீடுகளின் உற்பத்தி நிலையம். எதிர்ப்பு வளையம்.  கோட்பாடுகளின் ஆய்வு பொருள். அரசியல் கருத்தியல்களின் உரிமைக் கோரல். சமூகப் போராட்டங்களில் அகவிசை. அல்லது பதாகை. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அந்தரங்க உரையாடல். இந்த சிக்கலான பின்னலை ஒரு தொகுப்பாக மணி விளக்குகிறார். ஒன்றைவிடுத்து மற்றொன்றை பேச முடியாது என வாதிடுகிறார். எல்லாவற்றையும் சமதூரத்திலிருந்து பார்க்க அழைப்பு விடுக்கிறார்.

காண்பியல் கலைதமிழ் அறிவுச் சூழலில் பரவலாக பேசப்படும் துறையன்று. அதனாலேயே மணியின் கட்டுரைகள் கிட்டத்தட்ட முன்மாதிரியே இல்லாத எழுத்துக்களாக உள்ளன. இந்த நிகழ்வும் அத்தகையதே. ஆனால் காண்பியல் துறையை சார்ந்தவனாக இல்லாமல் ஓர் இலக்கியவாதியாக இருந்தே அந்நிகழ்வில் பெற்றுக் கொண்டவற்றை – தனியே பேசிக் கொண்டே போகலாம்.

முதலாவதாகபடிம வாசிப்புஎன்பதை மணி வரையறுக்கும் விதம். வரையறைகளுக்கு முன்னால்நேதி ! நேதி!” என எல்லைகளையே முதலில் மணி குறிப்பிடுகிறார். மனிதர்கள் நிலமாக பிரிந்திருக்கிறோம். நம்பிக்கையாகவும் ருசியாகவும் பிரிந்திருக்கிறோம். எனில் நாம் கலாச்சார ரீதியாக எல்லைக்குட்பட்டவர்கள். வரலாற்று ரீதியாக எல்லைக்குட்பட்டவர்கள். எனவே எந்த கலையாக்கமும் குறிப்பிட்ட கலாச்சார வரலாற்று சட்டகத்தினுள்தான் அர்த்தப்படும். எனவே எந்த கலையாக்கத்தையும் முறையான அறிமுகமின்றி கல்வியின்றி மதிப்பிட இயலாது.

சொல்லும்போது சாதாரணமாக இருக்கிறது. ஒருவர் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமா இது என்றுக்கூட தோன்றுகிறது. ஆனால்பிரதி என ஒன்றில்லை. வெறும் சட்டகம்தான் இருக்கிறது” (There’s no text. Only context) என பின்நவீனத்துவவாதிகள் வந்து நிறுவுகிறவரை இது மைய உரையாடலாக இருக்கவில்லை. கலையை தனி ரசனையிலிருந்தோ சொந்த அனுபவத்தினின்றோ அணுகாமல் தத்தம் எல்லைகளை அங்கீகரிப்பதில் இருந்து தொடங்க வேண்டும் என்பது ஓர் அசாதாரண திருப்பம். இது பார்வையாளர்களிடம்வாசகர்களிடம் கூடுதல் பொறுப்பை கோருகிறது. பார்த் 1967ல் ஆசிரியரின் மரணம் பற்றி சொல்லும்போதே வாசகனின் பிறப்பு என்றுதான் சொல்கிறார். மறைமுகமாக பழைய வாசகனின் மரணமும் அதில் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆவிகள் நம்மை விட்டபாடில்லை. அரை நூற்றாண்டு கழித்தும் படைப்பூக்கம் மிக்க வாசிப்பை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறோம்.  நல்ல வாசக சூழலிலேயே நல்ல கலை இலக்கியம் பிறக்க முடியும். [சமகால தமிழ் இலக்கியத்தில் எனக்கு தெரியும் இடைவெளி என்பதும் இதுவே. சுயமான கருத்துருவாக்கம் குன்றியிருப்பது.]

இலக்கியத்தை காட்டிலும் காண்பியல் கலையில் வாசகரின் பங்கேற்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஓவியத்திலோ புகைப்படத்திலோ மொழி இல்லை. எனவே தன்னளவில் எந்த சட்டகமும் இல்லை. வண்ணம் இருக்கிறது. புலன் அனுபவம் என்றாலும் இசை போல நேரடி உணர்ச்சிகரத்தை மட்டும் முன்வைப்பதில்லை. கருத்துத்தளமும் குறியீட்டுத்தளமும் கொண்டிருக்கிறது. ஆகஅதை உள்வாங்குவதில் வாசகரின் பங்களிப்புக்கே பிரதான இடம் என்கிறார் மணி. அதனாலேயே வாசகருடைய இடம் காண்பியல் கலையில் விவாதிக்கப்பட்டபடி உள்ளது.

வெவ்வேறு கலைஞர்கள் காண்பியல் கலையில் வாசகர்களின் பங்களிப்பைஓர் உருவகமாகஎப்படியெல்லாம் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் என்பது பல உதாரணங்கள் வழியே தொடர்ந்து அமர்வுகளில் விளக்கப்பட்டது. ஜெரிகால்ட்டின் (Gளூricault) “மெடூசாவின் மிதவைஓவியத்தில் சரியாக உங்கள் பார்வைக் கோணம் அருகே மரம் உடைந்து தண்ணீர் பாய்கிறது. உங்களை நோக்கி பெருகும் அபாயத்தை உணர்கிறீர்கள். வெலஸ்காஸின் (Velநூzquez) “காத்திருக்கும் பெண்ஓவியத்தில் பார்வையாளர்கள் தாமே வரையப்படுவதாக உணர முடிகிறது. மேனே (Manet) தன்புல்வெளியில் மதிய விருந்துஓவியத்தில் முதல் முறையாக ஒரு நிர்வாண பெண்ணின் கண்களை பார்வையாளனை நோக்கி திருப்புகிறார். இச்சையும் துய்ப்பும் அங்கு சிதைகின்றன. இப்படி ஓவியத்தில் தொடங்கி பின்னர் அதன் தொடர்ச்சியாய் உருவான நவீனத்துவ பாணிகருத்துநிலை கலை (Conceptual Art), நிறுத்தற் கலை (Installation Art) இவை எல்லாவற்றிலும் பார்வையாளர்கள் கலையை ரசிப்பவர்களாக மட்டுமில்லாமல்  பங்கேற்பாளர்களாக மாறுகிறார்கள். தாமே பேசுபொருட்களாகிறார்கள்.  இந்த மாற்றம் முக்கியமானது. ஏனென்றால் கலை வடிவங்கள் மட்டுமே மாறுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் சமூகம்கலாச்சாரம்கோட்பாடுவாசிப்பு எல்லாமே சதா மாறிக் கொண்டேயிருக்கின்றன.

வெலஸ்காஸின் ஓவியத்தில் யார் வரையப்படுவது?

இலக்கியத்தை வைத்தும் இதை பேச முடியும். நாட்குறிப்புகள் எப்படி நாவலில் ஒரு பாணி ஆகிறதுபின்னர் மீபுனைவு எப்படி தோன்றியதுநவீனத்துவ காலத்தில் வாசகன் ஒரு புனைவு நூலை உண்மை போலவே படிக்க வேண்டும் என்பதற்காக நாட்குறிப்புகள் பாணி தோன்றியதென்றால் பின்நவீனத்துவ காலத்தில் வாசகன் ஒரு புனைவு நூலை உண்மை என நம்பக் கூடாது என்பதற்காக மீபுனைவு தோன்றுகிறது. எனில்இங்கே வடிவ மாற்றம் என்பது எவ்வளவு பெரிய தத்துவ மாற்றம்?

புதுமைப்பித்தனிலிருந்து அசோகமித்திரனுக்கும் அசோகமித்திரனிடமிருந்து இன்று எழுதுகிறவர்களுக்கும் நடுவே மொழி மாறியிருப்பது நமக்கு தெரிகிறது. வடிவமும் பேசுபொருளும் மாறியிருப்பது நமக்கு தெரிகிறது. ஆனால் வாசகன் எப்படி மாறியிருக்கிறான்வாசிப்பு எப்படி மாறியிருக்கிறதுதி.ஜா பற்றி பேசும்போது பயன்படுத்தும் அதே முறைமையைஅல்லது ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி பேசும் மொழியையுவன் சந்திரசேகருக்கும் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. அல்லது கோட்பாடு சார்ந்து ஒரு கருதுகோள் பிரபலம் ஆனதும் அதை அப்படியே எல்லா எழுத்துக்கள் மீதும் போர்த்துகிற வழக்கம் இருக்கிறது. இது எளிதாக இலக்கிய வாசிப்பை ஒரு பழக்கமாக மாற்றிவிடுகிறது. தேநீர் அருந்துவது போல. சிகரெட் பிடிப்பது போல. கிரிக்கெட் ஸ்கோரை இணையத்தில் பார்ப்பது போல. மணியின் இந்த அமர்வுகள் அந்த பழக்கத்தையே சிதைக்கின்றன. அது காண்பியல் கலை வழியே ஏற்படும்போது நம்முள் உண்டாகும் திடுக்கிடலோ ஒத்திசைவோ அசாதாரணமானது. ஏனென்றால் பார்ப்பதே மொழிக்கு முன்னால் நடக்கிறது.

இவை எல்லாம் கோட்பாடுகளின் வருகையை ஒட்டி, கடந்த பல பத்தாண்டுகளாக உரையாடலில் இருக்கும் கருத்துக்கள் என்பது ஒருவருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் மணி தன் அரங்குகளை வெறும் சிந்தனை அறிமுகங்களாக மட்டும் அமைக்கவில்லை. மாறாக கலை வாசிப்பாக மாற்றுகிறார். வெறுமனே தர்க்கப்பூர்வ விளக்கம் அல்ல அங்கே நடப்பது. ஓவியங்கள்புகைப்படங்கள் என்று பல நூறு கலையாக்கங்கள் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. அவர்களோடு விவாதிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கலையாக்கங்கள் திரையில் பகிரப்படுகின்றன. அவற்றின்மேல் உரையாடல் நடந்தபடியுள்ளது. மூன்று நாட்களுக்கு வெறும் கவிதைகளை உச்சாடனம் செய்வது போல.

பங்கேற்பாளர்களோடு தொடர்ந்து உரையாடுவதன் வழியேஅவர்களை அதிகமாக பேச வைப்பதன் வழியேதமக்கான மொழியை தாமே கண்டடைய தூண்டுவதன் வழியே ஒரு கூட்டு வாசிப்பையும் மணி முன்னெடுக்கிறார். அப்படியாக கலை என்பது ஒரு பதில் அல்லகேள்வி எனும் தன் கருதுகோளை நிரூபிக்கிறார். பதிலாக இல்லாமல் கேள்வியாக இருக்கும்போது கலை நிரந்தரமான ஒரு நிகழ்கால இருப்பாக மாறுகிறது. மேலும் கலையில் மாறிக் கொண்டேயிருக்கும் அழகியல் வடிவங்களைகச்சாப் பொருட்களைபேசுவதன் வழியே கலையில் மாறாதது ஏதாவது இருக்கிறதா எனும் கேள்வியும், பதில் தேடும் பயணமும் ஒருங்கே வகுப்புகளில் மேற்கொள்ளப்பட்டது. காண்ட் குறிப்பிட்ட உலகப் பொதுவான அழகியல் எனும் கருதுகோள் உண்மைதானா எனும் விசாரனையே இந்த வகுப்பு என்றுக்கூட தோராயமாக சொல்லலாம்.

மெடூசாவின் மிதவை ஒடிந்து நீர் உங்கள் காலடியில் நுழைகிறது

  ஜான் பெர்ஜரின்காண்பதன் வழிகள்ஆவணப் படத்தில் ஒரு காட்சி. கேரவாஜியோவின் (Caravaggio) ஒரு ஓவியத்தை சிறுவர்களிடம் பெர்ஜர் காண்பிக்கிறார். அதை பற்றி அவர்களை பேச தூண்டுகிறார். கூடவே அந்த ஓவியம் பற்றி ஒரு கலை விமர்சகர் எழுதிய குறிப்பையும் நமக்கு வாசித்துக் காட்டுகிறார். ஆச்சர்யகரமாக அந்த விமர்சகரின் மொழி குழப்பமானதாகவும் ஓவியத்துக்கு அன்னியமானதாகவும் இருக்கிறது. சிறுவர்களின் மொழி ஓவியத்துக்கு நெருக்கமாக இருக்கிறது. கேரவாஜியோவின் பாலியல் தேர்வை பற்றி எந்த அறிமுகமும் இல்லாமலேயேசிறுவர்களால் அந்த உருவச் சித்திரத்தில் ஒரு பாலியல் தெளிவின்மையை சுட்ட முடிகிறது

மணி தன் அமர்வுகளில் கிட்டத்தட்ட இதையே சாத்தியப்படுத்திக் காட்டினார். அதை நேரில் காண்பதும் அதன் பகுதியாக இருப்பதும் அபாரமான அனுபவங்கள். மணியின் சவால் இன்னும் கூடுதலானது. ஏனென்றால் பங்கேற்பாளர்கள் யாரும் சிறுவர்கள் இல்லை. நம் அனைத்து முன்முடிவுகளையும் பரிசோதனைக்குட்படுத்தி ரத்து செய்து சிறுவர்களின் கள்ளமின்மையை எட்டபல நூற்றாண்டுகளாக திரண்டு வந்த ஒட்டுமொத்த மேற்கத்திய கலை வரலாறே தேவைப்படுகிறது. கலை இலக்கியத்தை வாசிக்க ஒருகள்ளமின்மைஅல்லதுஅறியாமைதேவை என்றால் அதை அறிவால் மட்டுமே இன்று அடையமுடியும் என்பதே உண்மை.

ஒரு கலைஞனுக்கு அல்லது எழுத்தாளனுக்கு படிம வாசிப்பு அல்லது படிமத் தொகையின் அறிமுகம் ஏன் அவசியம்படிமம் நேரடியாக ஆழ்மனதோடு தொடர்புடையது. எனவே ஆழ்படிமங்கள் வழியாக உரையாடும்போது இயல்பாக ஓர் ஆக்கத்துக்கு பல்வேறு அடுக்குகள் தோன்றிவிடுகின்றன. லாசராவின் நாவல்களில் பெண்அம்பாள் ஆவது போல. எனில் படிமத்தை பயில்வதன் வழியே நம் ஆழ்மனக் கட்டுமானத்தையே பயில்கிறோம். படிமம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் எல்லா ஆழ்மனங்களும் ஒன்றாய் பகிர்ந்துகொள்கிற ரகசிய நம்பிக்கையேயன்றி வேறில்லை.  

இன்று படிமங்களை பயன்படுத்துவது இலக்கியத்தில் பரவலாகிவிட்டது. ஆனால் அவை தத்துவ பின்புலத்துடன் சரியாக பொருந்துகின்றவனாஅதாவது தம் நோக்கம் சார்ந்தவிளைவு சார்ந்த பிரக்ஞையைகொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி ரொம்ப முக்கியமானது.  இன்னின்ன விஷயங்கள் ஒரு கதையில் இருந்தால் நல்லது. கதாநாயகன். கதாநாயகி. ஒரு சமூக சிக்கல். அல்லது தத்துவ சிக்கல். ஒரு முரண். ஒரு படிமம். இப்படி அலங்காரத்துக்கு தேவையான பொருட்களில் ஒன்றாக படிமமோ அல்லது குறியீடோ மாறும்போது அதன் நோக்கமே தொலைந்துவிடுகிறது.  தமிழ் திரைப்படங்களில் அரிய நிலப் பரப்பில் நடனக் காட்சி படமாக்கப்படுவது போல. கலையில் ஒரு கண்டுபிடிப்புபடிமம் உட்படஎப்படி அலங்காரமாகிறது என்பதை மணி விரிவாக தன் உரைகளில் விளக்கினார். ஒரு குறிப்பிட்ட தருணத்தை மட்டும் உதாரணமாக சொல்ல விரும்புகிறேன்.  

மேற்கத்திய கட்டிட கலையை முதன்மைப்படுத்தியதாக ஓர் அமர்வு அமைந்திருந்தது. கிறிஸ்தவ தேவாலயங்களின் உருவம் எப்படி வெவ்வேறு காலக்கட்டங்களில் படிமவியல் (Iconography) சார்ந்து மாறி வந்திருக்கிறது என்று விளக்கும்போது கோதிக்மறுமலர்ச்சிபரோக் மற்றும் ரொக்கோக்கோ என்று கலை இயக்கங்கள் உருவான விதத்தை கட்டிட அமைப்புகளை முன்வைத்து விளக்கினார். சார்ட்ரஸ் கதீட்ரலில் (Chartres Cathedral) பிதாகரசுக்கு சிலை வைப்பதன் வழியே மாறாத அறிவியல் நியதி என்பது மேற்கில் ஒரு கடவுள் தரிசனமாக மாறியதை குறிப்பிட்டார்.

ராபர்ட் பிராங்கின் அமெரிக்கா

கிறிஸ்தவத்தால் அழுத்தப்பட்ட பேகன் கலாச்சாரக் கூறுகளான பிரம்மாண்டம்நுட்பமான வேலைப்பாடுநுண் தகவல்கள் போன்றவை பிற்காலத்தில் மீட்டுருவாக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே கலை இயக்கங்களும் முன் நகர்ந்துள்ளன. ரொக்கக்கோ காலக்கட்டம் வரும்போது கலையில் தத்துவ பின்புலம் வடிந்து வெறும் அலங்காரம் மட்டும் எஞ்சிவிடுகிறது. “மீபொருண்மை இல்லாத கலை வெறும் அலங்காரம்என்கிறார் மணி. [போர்ஹெ பரோக் கலை பற்றி சொல்லும்போதே அது தன்னைத் தானே திவால் செய்தது என்கிறார்]இன்று நாம் வீட்டில் அலங்கார பொருளாக பயன்படுத்துகிறபரிசளிக்கிறகுட்டி குட்டி பீங்கான் சிலைகள் யாவும் ரொக்கக்கோ அழகியற்பாற்பட்டதே. எனில் எந்த கலை வடிவமும் தன் பிரக்ஞையை இழக்கும்போது எளிதாக அலங்காரமாகவோ ஒரு அரங்க பொருளாகவோ மாறிவிடக்கூடும். நம் செய்யுளுக்கு இதுவே நடந்தது. புது கவிதை பிறந்தது. பின்னர் புது கவிதையில் தேக்கம் வருந்தோறும் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்று ஒருவர் யோசிக்கலாம்.  ஒருவகையில் மணிகாண்பியல் கலையை முன்வைத்து விளக்கிய அழகியல் மாற்றங்கள் யாவற்றையும் இலக்கியத்தில் இணைக் கோடாக யோசிக்க முடிகிறது. ஓவியர்கள் தங்களுக்குள்ளாகவே உரையாடிக் கொள்ளும் ஒரு குறுங்குழுவாக கடைசியில் மாறினார்கள் என்று அவர் சொன்னபோது நம் சிற்றிதழ் சூழலை எண்ணாமல் இருக்க முடியவில்லை.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அமர்வுகள் நடந்தன. இணைந்தும் விலகியும் பரவியும் பல்வேறு இழைகள் பேசப்பட்டன. அதில் ஒரு சித்திரத்தையேனும் வரைய வேண்டும் என்று கருதுகிறேன். படிமத்தை வாசிப்பதன் தேவைநம் வாசிப்பின் எல்லைகளை கடக்க தேவைப்படும் விழிப்புணர்வு என்று வாசிப்பையும்கலை வடிவங்களில் தோன்றுகிற மாற்றங்கள் என்று கலை பரிணாமத்தையும்படிமத்தை கலையில் பயன்படுத்துவதன் சவால்கள் என்று கலை உருவாக்கத்தையும் பற்றி மட்டும் மேலே சொல்லியிருக்கிறேன். மேலும் ஒன்றிரண்டு விஷயங்களை சேர்க்கலாம்இங்கு.கலை யாருக்கானது? – இந்த கேள்வியை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுகுகிறோம். இதில் எது சரி எது தவறு என்ற விவாதம் முடிவற்றது. ஆனால் ஒரு கலையாக்கத்தைஇலக்கிய நூல்கள் உட்படஅறிய கல்வியும் பயிற்சியும் தேவை என்றோ கோட்பாட்டு பின்புலம் தேவை என்றோ சொன்னால் அது மேட்டிமை நோக்காக கருதப்படுகிறது. உண்மையில் மேட்டிமை நோக்கு அதுவல்ல.

தன்னை தானே கலை மதிப்பீட்டாளராக நியமனம் செய்வதே மேட்டிமை நோக்கு. தனக்கு எந்த உதவியும் தேவை இல்லை என்று எண்ணுவதே மேட்டிமை நோக்கு. மணி தன் உரைகளில் அதை தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறார். வான்கா தமிழில் பிரபலமான பெயர். ஆனால் அவரை பற்றிய பெரும்பாலான கட்டுரைகள் அவருடைய சொந்த வாழ்க்கை மேல்துயர நாடகத்தின் மேல்உள்ள கற்பனாவாத மயக்கத்தையே சுட்டுகின்றன. அவர் கலையை பேசவில்லை. மேற்கத்திய கலை மரபில் நட்சத்திரம் என்பது பொதுவாக கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் மதக் குறியீடு. முதல் முறையாக நட்சத்திரத்தை தன் சொந்த மனதுடன் இணைத்த கலைஞன் வான்காதான். இப்படி பல்வேறு தகவல்கள் வழியாகவே கலை அனுபவம் நிகழ்கிறது என்றும் அதுவே கலை ரசனை என்றும் மணி வாதிடுகிறார். அதை மறுப்பது கலையை குனிந்து பார்ப்பதே.

இரண்டாவது மேட்டிமை நோக்குகலை ஒரு சாரருக்கு மட்டுமே உரியது என்றோ தன் அழகியல் தேர்வோ முடிவோ மட்டுமே இறுதியானது என்றோ நினைப்பது.  கலையின் ரகசியமானது தெய்வ சன்னிதிகளிலோ மாளிகைகளிலோ மலைகளிலோ ரகசிய குகைகளிலோ இல்லை. அது மிக அருகே உள்ளது. நம்முடைய முன் தீர்மானங்களே கலைக்கு எதிரி என்று மணி மீள மீள சொல்லிக் கொண்டே இருக்கிறார். அனுபவம்தரிசனம் போன்ற சொற்களை பிடிவாதமான அளவுகோல்களாக்கும்போது கலையின் எண்ணற்ற சாத்தியங்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். தன் உரையில் அவர் சுட்டிக் காட்டிய ராபர்ட் பிராங்க் புகைப்படம் ஒரு நல்ல உதாரணம். ஆப்பிரிக்கஅமெரிக்கர்களை பிராங்க் எடுத்த புகைப்படங்கள் ஒரு கோணத்தில் ஆவணங்கள். சமூக விமர்சனங்கள். ஆனால் அவையே அமெரிக்க சமூகத்தின் முகத்தில் மாபெரும் அறை கூவலாக நிலைக்கின்றன. நம்மை தொடர்புறுத்தும் விதத்தில் கலையாகின்றன. எனில் ஆவணம் கலையாகலாம். அன்றாடம் கலையாகலாம். அரசியல் நோக்கு கலையாகலாம். உடலோ கலகமோ கலையாகலாம்.  இதை உணராது பரிசோதிக்கப்படாத முடிவுகளை சுமக்கும்பட்சத்தில் ஒரு மூடுண்ட வெளியில் சிக்கிக் கொள்கிறோம். கலை இன்னவிதமாக மட்டுமே இருக்க முடியும் என்று சொல்வது அழகியலில் ஏகவுரிமைக் கோருவது. அழகியலில் ஏகவுரிமை நிலைக் கொள்வது ஒரு கலாச்சாரத் தற்கொலை.

உங்களையே – உங்கள் கண்களையே – பார்க்கிறேன்

மணியின் கலந்துரையாடல்களில் மேற்சொன்ன இரு மேட்டிமை நோக்குகளும் நேரெதிரே கலைவதையும் நிராகரிக்கப்படுவதையும் பார்த்தது அலாதியானது. சின்ன சின்ன வழிநடத்தல்கள். சிறு சிறு திருத்தங்கள். இவற்றை மட்டும் அரங்குகளில் மணி முன்னெடுத்தார். தொடர்ந்து திரையில் தோன்றிய ஒவ்வொரு ஓவியத்தையும் புகைப்படத்தையும் கலை நிகழ்வையும் பங்கேற்பாளர்களே சரியான அர்த்தப் பரப்புக்குள் கொண்டு வரலாயினர். கவித்துவமான வெளிப்பாடுகளை அடைந்தனர். எனில் கலை யாருக்கானது என்றால் சந்தேகமேயில்லாமல் எல்லோருக்குமானது என்று சொல்ல முடிகிறது. தான் ரசிப்பது இன்னொருவருக்கும் சுகிக்கும் என்று நம்ப முடிவதுதான் எவ்வளவு பெரிய  விடுதலை.

ஒவ்வொரு அமர்வும் ஒவ்வொரு வித்தில் படைப்பூக்கம் மிக்கதாய் இருந்தது. புகைப்படங்களில் பிற இனத்தினரை காட்சிப்படுத்துவதில் வெள்ளையர்களுக்கு இருந்த காலனிய மனோபாவம். மாஸ்டர் கலைஞர்களால்கூட தங்கள் காலகட்டத்தின் மனோபாவத்திலிருந்து விடுபட முடியாதது. புகைப்படங்களை அவற்றுக்கு நிகரான கவிதைகள் வழியே விவரித்தது. இந்திய கலை நோக்குக்கும் மேற்கத்திய கலை நோக்குக்குமான வித்தியாசத்தை பேசியது. ஓவியத்தின் வரலாற்றை குகை ஓவியத்திலிருந்து விளக்கியது. இரட்டை பரிமாணத்திலிருந்து முப்பரிமாணத்திற்கு ஓவியம் வளர்ந்ததுபார்வைக் கோணம் (Perspective) கண்டையப்பட்டதுபின்னர் மனப்பதிவுவாத காலத்தில் அந்த தொழில்நுட்பம் கைவிடப்பட்டதுபின்நவீனத்துவக் கலையில் பெண்ணிய அலை என மணி எடுத்துரைத்த விஷயங்களை எல்லாம் இப்போது சொல்லி முடிக்க முடியாது. வேறு தருணங்களில் மேலும் மேலும் எழுத வாய்ப்பு அமையும் என நினைக்கிறேன்.

பொல்லாக்கின் கோபம்

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் குகைகளில் தோன்றிய ஒவியம் பல நூற்றாண்டுகளாக தன் தீவிரத்தன்மையை தக்க வைத்திருந்தது. காண்பியல் கலையின் மையமாக இருந்தது. ஆனால் அந்த ஓவிய அலையும் இருபதாம் நூற்றாண்டில் தர்க்கப்பூர்வமாக ஒரு முடிவுக்கு (logical end) வந்தது. அதை இரண்டாம் நாள் இறுதி அமர்வில் மணி விவரித்தபோது உண்மையாகவே சொல் மறந்து கண் கலங்கிவிட்டது.

ஓவியம் தன் வளர்ச்சி போக்கில் ஒரு கட்டத்தில் தூய வடிவமாக மட்டும் எஞ்ச முயற்சிக்கிறது. பிகோசா கால கியூபிச பாணி தோன்றுகிறது. பிறகு தூய வடிவமும் முடிந்தபோது அது ஒரு இருத்தலிய இக்கட்டில் சிக்குகிறது. தன் முடிவு பகுதியை எட்டுகிறது.  ரெம்ப்ராண்டும் மோனேவும் வான்காவும் இன்னும் பல மேதைகளையும் இயங்கிய ஓவியக் கலை தன் யாத்திரையை நிறைவு செய்கிறது. அந்த கடைசி காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்று இரண்டு கலைஞர்களை மணி அறிமுகப்படுத்துகிறார். ஜேக்ஸன் பொலாக் (Jackson Pollock) மற்றும் மார்க் ராத்கோ (Mark Rathko). பொலாக் ஒரு வெறியாட்டம் போல கிறுக்கல்களை கலையாக்குகிறார். ராத்கோ வெறும் வண்ணத்தை ஓவியமாக்குகிறார். இந்த இரண்டு சாதனை கலைஞர்களுடன் ஓவிய அலைபாரம்பரிய அர்த்தத்தில்மேற்கில் நிறைவடைந்ததாக மணி குறிப்பிட்டார். அப்போது எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. பொலாக்கும் ராத்கோவும் ஒரே சிக்கலை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இரண்டு எல்லைகளில் அவர்கள் அழகியல் உள்ளது. ஒன்று துடிப்பு. இன்னொன்று சமாதானம். ஒன்று கோபம். இன்னொன்று பிரார்த்தனை. ஒன்று பறதி. இன்னொன்று சரண். ஒன்று கொடுங்கனவு. இன்னொன்று தியானம். ஒன்று அலறல். இன்னொரு மௌனம்.  ஆனால் கடைசியில் இரண்டுமே மரணம் என்பது எவ்வளவு பெரிய விந்தை? அலறல் மௌனம் இரண்டுமே எவ்வளவு பொருத்தமான விடைக்கூறல்கள்?

ராத்கோவின் தியானம்

இந்த வகுப்புக்கு கிளம்பும்போது பயணத்தில் வாசிக்கமொரலின் கண்டுபிடிப்பு” (The invention of Morel) எனும் லத்தீன் அமெரிக்க குறுநாவலை எடுத்திருந்தேன். அடோல்ஃபோ பியோ கசாரே எழுதியது. போர்ஹேவின் நல்ல முன்னுரை புத்தகத்தில் உள்ளது. இதுவொரு மிகுபுனைவு. வெனிசுலாவில் அரசால் வேட்டையாப்படும் ஒரு எழுத்தாளன் நாடோடியாகிறான். பிறகு கல்கத்தாவில் ஒரு விற்பனையாளன் வழியே மாயத் தீவொன்றை பற்றி கேள்விப்படுகிறான். அங்கு மனிதர்களால் வாழவே முடியாது என்பது தொன்மம். கதை சொல்லி கடல் வழியே அங்கே பயணித்து செல்கிறான். சில வினோதமான மனிதர்களை சந்திக்கிறான். பிற்பாடுதான் அவர்கள் மனிதர்கள் அல்ல. படிமங்கள் என்று தெரிய வருகிறது. ஒரு பெரும் இயந்திரம் அத்தீவில் உள்ளது. அது எந்த காட்சியையும் படிமமாக்கி நிரந்தரமாக்கிவிடும். முடிவற்ற காலம் வரை அந்த காட்சியில் ஒருவர் வாழ்ந்துக் கொண்டேயிருக்கலாம். அப்படி படிமமான ஒரு பெண் மேல் அவனுக்கு காதல் வருகிறது. அவளை அடையும்பொருட்டு தானும் படிமமாகிறான்.  ஆனால் படிமமாக ஒருவர் முதலில் இறக்க வேண்டும். கடைசியில் ஒவ்வொரு நகமும் உதிர்ந்து பற்கள் உதிர்ந்து தோல் மறைந்து அவன் படிமமாகிறான். ஏன் ஒருவன் தன்னை அழித்து படிமமாக மாற வேண்டும்மணியின் வகுப்பில் அதற்கு ஆழமான ஒரு பதில் கிடைத்தது.

ஏ.வி.மணிகண்டனுடன் நான் 2018ல்

பின் குறிப்பு 1 : மூன்றாவது நாள், மணியின் கடைசி அமர்வு முடிந்தபோது ஐம்பது பங்கேற்பாளர்களும் தன்னிச்சையாக எழுந்து நின்று கைத் தட்டினோம். ஒரு இசை நிகழ்வுக்கு பிறகு நடத்துநருக்கு தலை வணங்குவது போல. பிறகுமணியை தோளோடு அணைத்து விடைபெற முடிந்தது. இப்போது இதை எழுதும்போது மீண்டும் மானசீகமாக அதை செய்கிறேன். வணக்கம் தெரிவிக்கிறேன். தோளோடு அணைத்துக் கொள்கிறேன்.

பின் குறிப்பு 2 : இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முழுமையறிவு நன்றிக்குரியது. வேறெங்கும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறதாநடக்க சாத்தியமா என்று தெரியவில்லை. பிரியத்திற்குரிய நண்பர்களோடு கலந்து கொண்டதும் அவர்களோடு பேசி மகிழ்ந்ததும் கூடுதல் விசேஷங்கள்.

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவம் மூன்றாம் நிலை மீண்டும் நிகழுமா?
அடுத்த கட்டுரைபைபிள், கடிதங்கள்