இந்திய தத்துவம் மூன்றாம்நிலையை மீண்டும் நடத்தும்படி சிலர் கோரினர். அவ்வகுப்பு ஏற்கனவே சிலமுறை நடந்துள்ளது. அதில் பங்குகொள்ள தவறிய சிலரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்காக மட்டும் வகுப்பு நடத்துவது இயல்வது அல்ல. போதுமான எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் அமைந்தாகவேண்டும். இப்போது முதல்நிலையில் பயில்பவர்கள் மூன்றாம்நிலைக்கு வரும்போது அவ்வகுப்பு மீண்டும் நடத்தப்படும்.அப்போது பங்கு கொள்ளலாம்.
பொதுவாக வகுப்புகளை தனிப்பட்ட காரணங்களால் தவிர்ப்பவர்களுக்கு சிலசமயம் மீண்டும் வாய்ப்பு அமைவது நீண்டநாட்கள் தள்ளிப்போகலாம். அது அவர்களின் கல்வியில் தேக்கத்தை உருவாக்கலாம். அல்லது மீண்டும் ஒரு வகுப்பு அமையாமலும் போகலாம். உண்மையான, தீவிர ஈடுபாடுள்ளவர்களுக்காக மட்டுமே இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன. அவர்கள் தங்கள் சிறு தனிப்பட்ட வாழ்க்கைநிகழ்வுகளை விட தத்துவக்கல்வியை முதன்மையாகக் கருதுபவர்கள்.
குறைவான ஆர்வத்துடன் வகுப்புகளை தவிர்ப்பவர்களை தவிர்க்கவே நாங்களும் முயல்கிறோம். ஏனென்றால் தத்துவக் கல்வி நம் பொதுக்கல்வியில் இருந்து வேறுபட்டது. பொதுக்கல்வி ஒவ்வொருவரையும் எப்படியாவது உள்ளிழுத்து, தேற்றிஎடுக்க முயல்வது. நாம் அதற்குப் பழகிவிட்டிருப்பதனால் கல்வி நம்மை தேடிவரவேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் தத்துவக்கல்வியின் வழிமுறை என்பது ஆர்வமற்றவர்கள், பின்தங்குபவர்கள் தவிர்க்கப்பட்டு முன்னகர்வதே.
அறிவிப்பின் கீழே வரவிருக்கும் நிகழ்வுகள் என்னும் பகுதியில் மூன்றுமாதம் முன்னரே நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அப்போதே பதிவுசெய்யலாம். பல வகுப்புகள் அங்கேயே இடங்கள் நிறைவுற்று முதன்மை அறிவிப்பாக வெளிவருவதே இல்லை