ஆசிரியருக்கு வணக்கம்!
அந்தியூரில் பேருந்தில் ஏறி, “இந்த வண்டி மடம் போகுமம்மா?” என்று கேட்க, ஒரே நேரத்தில் ஆறேழு பதில்கள் அதை உறுதி செய்தன. “சே! இந்த ஊரு ஆளுகலாம் நல்ல பிரியமா இருக்காகளே” என்று நினைத்துக்கொண்டு நானும் அப்பாவும் அமர்ந்துகொண்டோம்.
பேருந்து கிளம்பச் சற்று தாமதமாகியது. ஒரே புழுக்கம். கிளம்ப ஆரம்பித்ததும் ஒரு நிறைவு வந்து பற்றிக்கொண்டது. ஊரிலிருந்து கிளம்பியதுமே வழியெங்கும் பச்சையின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே வந்தது. வழியெங்கும் கரும்பு, வாழை, மஞ்சள் தோட்டங்கள் தோகை விரித்து, குழந்தைகளெனக் குதூகலித்துக்கொண்டிருந்தன. மலைப்பாங்காகச் செல்லும் பேருந்து, தாலாட்டும் தொனியில் அவசரமில்லாமல் சென்றது. ஊரைத் தாண்டியதும் வந்து தலைதழுவிய ஈரப்பதம் மிகுந்த காற்று உணர்வுகளைத் தழுவிச் சென்றது.
மலையின் அடர்த்தி அதிகரித்தபடியே இருந்தது. அரை பாலைவன நிலமான கோவில்பட்டி, சாத்தூர் பகுதியில் இருந்து வரும் எனக்கு இத்தனை மலைகளும், அவற்றின் மீது இத்தனை அடர்த்தியாக மரங்களும், மிகுந்த காடும் இருக்கும் என்பதே பெரிய வியப்பு. படங்களில், செல்பேசியில் எத்தனைக் காட்சிகளைக் கண்டிருந்தாலும், உணர்வை எழுப்பும் தொடுகை, மனம் நிறைக்கும் குளிர்ச்சி எல்லாமே புதிய அனுபவம்.
பல்வேறு அளவுள்ள குரங்குகள், மினுமினுத்த ஆச்சரியம் நிறைந்த சுடர் கண்களுடன் வரவேற்றன. பேருந்தின் இடதுபுறம் அமர்ந்திருந்தேன். மலையின் மீது ஏறும்தோறும் அதன் பிம்பம் பருத்துக்கொண்டே வந்தது. நீலப்பச்சை, கரும்பச்சை, பசும்பச்சை, வெளிர்பச்சை. எப்படி கூறுவதென்றே தெரியாத பசிய மலைத்தொடர்கள். சாலையின் மருங்கில் பளிச்சென மின்னும் இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் வழியெங்கும்.
மனதில் காடு நாவலின் காட்சிகளை அசைபோட்டுக்கொண்டே வந்தேன். “பல நாட்கள் காடுகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன். நாட்களை வீணாக்கிவிட்டேனோ எனவும் நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த நாட்களே காடு நாவல் எழுதப் பேருதவியாய் இருந்தது. ஒரு பயணத்தின்போது மலைத்தொடர்களைக் கண்ட பரவசத்தில் அலுவலகத்திற்குச் செல்லாமல் அப்படியே வீடு திரும்பி எழுதி முடிக்கப்பட்ட நாவல் காடு” என்று அந்த நாவலின் முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது நினைவிற்கு வந்தது. அது இதுபோன்றதொரு பூரிப்பாகத்தான் இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டேன்.
பேருந்து எங்களைத் தாமரைக்கரையில் இறக்கிவிட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள வேறு ஊருக்குச் சென்றது. அங்கிருந்த சில பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வந்து சற்று நேரம் தாமரைக்கரையில் நின்றது. அவ்விடத்தில் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த ஒரு பச்சைத் துணியின் மீதும், அடர்ந்திருந்த மரங்களின் மீதும் ஏராளமான குரங்குகள் கரணமடித்தும் தாவியும் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தன.
இரு குட்டிக் குரங்குகள் அம்மாவிடம் ஏதோ முறையிட்டன. அதில் ஒன்றை அம்மா எட்டி உதைத்தது. அது ‘குபிக்’ என்று செல்லமாக உருண்டு விழுந்தது. பக்கத்தில் இருந்த மற்றொன்று இளித்தது. மீண்டும் கம்பியின் மேலேறி மரத்தின் கிளைகளைப் பற்றிக்கொண்டு உச்சி நோக்கிச் சென்றது. அடுத்த ஆள் கையில் எதையோ வைத்து ஆராய்ந்துகொண்டிருந்தது. ஒன்று தன் தலையில் கைவைத்துக் குழம்பிய பார்வை பார்த்துக்கொண்டிருந்தது. மீண்டும் கரணம், தாவல், ஓட்டம், குதூகலம். நான் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அது கைய வச்சதெல்லாம் இரும்பு, திங்குறதெல்லாம் கரும்பு” என்று அருகிலிருந்த அம்மா கூறினார். நான் சரிதான் என்று புன்னகைத்துக்கொண்டேன்.
வண்டி கிளம்பியது. மேதி கலக்கி, வாளை குதிக்கும் தாமரைக்குளம் சிந்தையை நிறைத்தது. படிக்கட்டுப் படிக்கட்டாய் நிலங்கள். அதில் விளைச்சல். ஒவ்வொரு சிற்றூராக வந்தது. ஊருக்கு நான்கைந்து ஆட்களாக இறங்கிக்கொண்டனர்.
“வெள்ளிமலை வந்ததும் சொல்லுங்கண்ணா” என்று நடத்துனரிடம் கூறியிருந்தோம். ஆனால் அவர் எங்களைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. இப்போது பேருந்தில் அதிக ஆட்களுமில்லை. எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த அம்மாவிடம், “இதுக்கு அடுத்த ஸ்டாப் வெள்ளிமலையா மா?” என்று கேட்க, அதிலிருந்து வந்த ஒவ்வொரு நிறுத்தத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டே வந்தார்.
“உங்களுக்கு வெள்ளிமலையில சொந்தக்காரங்க இருக்காகளா?” என்றார்.
“இல்ல, கிளாஸுக்கு வந்திருக்கோம்” என்றதும் ஆச்சரியம் மிகுந்த முகத்துடன், “கிளாசுக்கா?” என்று வினாவாக விடையளித்தார். நிறுத்தம் வந்ததும், “போயிட்டு வரோமா” என்று விடைபெற்றபின் இறங்கிக்கொண்டோம்.
நாங்கள் வெள்ளிமலையை அடைந்தபோது நன்றாகவே இருட்டிவிட்டது. எதுவும் கேட்காமலேயே, “இந்த வழி” என்று சிலர் வயலின் வரப்புகளைக் காட்ட, அதில் நடந்து சென்றோம். பறவைகளா, சில்வண்டா எனத் தெரியவில்லை; ஓயாத சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு நாய் எங்களைப் பார்த்துக் குரைத்தது. அங்கு நின்றிருந்த சில இளவட்டங்கள் அதை அதட்டினர். நடந்து சென்று நித்யவன முகப்பை அடைந்தோம்.
“நித்யவனம்” – கடந்த பல நாட்களாகவே என்னை ஆட்கொண்ட பெயர். தரிசனம் கிடைத்த பக்தனின் உள்ளம் என நெகிழ்ந்தது மனம். கதவு பூட்டியிருக்கும் என்றெண்ணித் தயங்கி நின்றிருந்த வேளையில் சமையல் ஐயா வந்தார். அந்நியோன்யம் தோன்றும் புன்னகையுடன் வரவேற்று அழைத்துச் சென்றார். அவர் வழிகாட்ட, பின்பற்றி நடந்தோம். நாங்கள் இப்போது வந்திறங்கியதுதான் கடைசிப் பேருந்து எனவும், அடுத்த பேருந்து நாளை காலைதான் வரும் என்றும் கூறினார்.
நேரே சென்று மணி அண்ணாவைச் சந்தித்தோம். அவர் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். குடிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். அருமையான குடில். ஜெ. தனது பல்வேறு கதை களங்களில் வரும் மரத்தாலான தரை என்று எழுதியிருப்பதைப் போலவே இந்த அறையின் தளத்தையும் அமைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். கையில் விஷ்ணுபுரம் புத்தகமும், நானே கையால் எழுதி வைத்திருக்கும் கம்பராமாயணப் பாடல்களையும் வைத்திருந்தேன். காட்டில் புது அர்த்தம் தருமென.
உடை மாற்றி முகம் கழுவி வந்ததும், “சாப்பாடு ரெடியா” என்று கூறிவிட்டு ஓர் அண்ணா சென்றார். அப்பாவும் நானும் உணவுக்கூடத்திற்குள் சென்று தட்டைத் துவைத்து, உப்புமா வைத்துக்கொண்டு அமர்ந்தோம். சீனியும் ஊறுகாயும் அருகருகே இருந்தன. நான் ஊறுகாய் வைத்துக்கொண்டேன். அருமையான உணவு. குளிருக்கு சூடாகப் பரிமாறப்பட்டது அதன் ருசியை இன்னும் அதிகப்படுத்தியது.
சமையல்கூடத்தின் முகப்பிலேயே காந்தி படம் வைக்கப்பட்டிருந்தது. கூடத்தினுள் தேவதேவன், பக்ஷிர் எனக் கவிதை வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதில் தேவதேவனின் வரி மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
“அந்தத் தாவரத்தை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டான்.”
சமையல் செய்யும் அம்மா சமையல் பொருட்களை நேர்த்தியாக அடுக்கிவைத்திருந்த விதம் பற்றிச் சாப்பிட்டுவிட்டு குடிலுக்குச் செல்லும் வழியில் பேசிக்கொண்டு நடந்தோம். ஆர்வமே விழியாய் வெண்ணிற நாய் ஒன்று அங்கிருந்தது. அதற்கு ‘தேவதை’ என்று அப்போதுதான் பெயர் சூட்டியிருந்தேன். தேவதை ஏன் பின்னாலேயே அறைக்கு வந்தது.
அறையில் வெளியே இருந்த விளக்கை எரியவிட்டுவிட்டு, உள்ளிருந்த விளக்குகளை அணைத்துவிட்டேன். இருளாய், அதே நேரத்தில் வாசிக்க ஏதுவாயும் இருந்தது. கம்பராமாயணம். ஒன்று, இரண்டு… நான்காவது பாடல்,
“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென…”
சுகமாய் துயில் வருட, விழிகளை மூடினேன். நீலப்பச்சை, கரும்பச்சை, பசும்பச்சை… பாற்கடல்… பூசை… நக்குபு புக்கென…
விடியலின் மலை புத்துணர்ச்சி தந்தது. விலகாத திரைபனி அதன் அழகையும் பிரமாண்டத்தையும் மேலும் மிளிரச் செய்தது. காப்பி சாப்பிட்டுவிட்டு அப்பா கிளம்பினார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே ராஜஸ்ரீ வந்தார். என் அம்மாவின் முகவடிவு போன்றதே அவருடையதும். எனவே, எனக்கு அவரைப் பார்த்ததும் பிடித்தது. மிகவும் தோழமையுடன் பேசினார்.
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே ரேவதி அம்மா வந்தார். அவர் தங்களின் ஆறுநிலைத் தத்துவ வகுப்பையும் முடித்தவர் என்று கூறியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் அவர் மேல் ஒரு பயத்தையும் உண்டாக்கியது. குறைந்த வார்த்தைகளிலேயே உரையாடினார். கேட்கும் கேள்விகளுக்கு ரத்தினச் சுருக்கமாகப் பதிலளித்தார். அரிதாகவே சிரித்தார்.
பின்னர் அங்கம்மை (எ) லதா வந்தார்கள். அவர் கணவரும் வகுப்பில் கலந்துகொள்ள வந்திருந்ததாய்க் கூறினார். குளித்துக் கிளம்பி அனைவரும் சாப்பிடச் சென்றோம். ஆவி பறந்த இட்லி, தக்காளி, மல்லிச் சட்னி வயிறு நிறைத்தது.
சாப்பிட்டுவிட்டுச் சற்று உலவிக்கொண்டிருந்த வேளையில் இன்னொரு குடிலின் நான்கு பேரையும் பார்த்து எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். அனைவரும் மலையின் அழகை வியந்து கூறிக்கொண்டிருக்க, ஆண்டாள் அம்மா, “அப்டியே வைரத்தத் தூவி விட்டமாரி இந்தப் புல்லுல எல்லாம் பனித்துளி இருக்றது பாரு” என்று எனக்குக் காட்டினார். அவர் அந்த உவமையைக் கூறியது எனக்குப் பிடித்திருந்தது (உங்கள் ராதாகிருஷ்ணனை முதல் உவமை மூலம் உங்களுக்குப் பிடித்த மாதிரி).
“அம்மா, இனி நா பனியப் பாத்தா உங்களதா நினைப்பேன்” என்றேன்.
“சார படிச்சுண்டு இவ்ளோ கூட ரசிக்காட்டி நாமெல்லாம் என்ன அவா வாசகர்” என்று புன்னகைத்தார். அந்த இளவெயிலில் அவர் முகத்தைப் பார்க்க அலர்ந்த தாமரை போலிருந்தது.
“அம்மா, நீங்க பத்மினி. உங்களப் பாக்க தாமர போல இருக்கு” என்று கூறவும்,
“இனி என்னென்ன கேட்க வேண்டியிருக்கிறதோ?” என வெட்கத்துடன் கூறிப் புன்னகைத்துக்கொண்டார்.
ஏதோ பேச்சுக்களின் போது நான் வெண்முரசை முழுவதுமாக வாசித்துவிட்டேன் எனக் கூறியதும் அருணா அம்மா மிகுந்த ஆச்சரியம் கொண்டார். எனக்கு அவர் மகள் வயது என்று கூறினார். பின்னர் பேச்சுக்களின் போதெல்லாம் “பாப்பா” என்றே அழைத்தார். அவர் எதை விவரித்தாலும் முழுப் புன்னகையுடனேயே விவரிப்பார். நடந்து முடிந்த ஏதேனும் இனிய நிகழ்வுகளைப் பகிரும்போது, அது நடக்கும் சமயத்தில் அவர் கொண்டிருந்த உவகையும் நெகிழ்ச்சியும் இப்போதும் தெரியும்.
பார்த்தவர் மனதினை உடனே தன்வயமாக்கும் மோன நிலையில் இருந்தது புத்தரின் சிலை. அனைத்தும் அறிந்து கடந்த இள்சிரிப்பு கொண்டிருந்தது வாக்தேவி சிலை. இருவருக்கும் மலர் சமர்ப்பித்து, பின்னர் குரு நித்யா அரங்கம் சென்று அமர்ந்தோம். முதல் வரிசையில் அமர்ந்திருந்த பிரியா, “உனக்கு சரியா தெரியாதுல, இங்க வா” என்று தன் இருக்கையை எனக்கு அளித்துவிட்டு மூன்றாம் வரிசையில் சென்று அமர்ந்துகொண்டார்.
ஆசிரியர் ஜெயக்குமார் வந்து மேடையைத் தொட்டு வணங்கிப் பின் அமர்ந்துகொண்டார். திருநீறு அணிந்த கோலமும் அவர் உடையும் அந்த வகுப்பிற்கு மிகப் பொருத்தமாக இருந்தன. கண்களை மூடிப் பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் நாங்கள் அனைவரும் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைப்போல, ஏகாந்தத்தில், இனிமையில், இசை மட்டுமே உளதாய், எதுவுமே இல்லை என்பதாய், தன்னை மறந்து பாடினார்.
பொருள் நிறைந்த வகுப்பு. ஆசிரியர் ஆலயக் கலை தொடர்பான பல்வேறு புத்தகங்களைப் பற்றிக் கூறினார். ஐவகை நிலங்களையும் அதன் கடவுளர்களையும் பற்றிக் கூறும்போது உங்கள் கொற்றவை நாவலைப் படிக்கச் சொன்னார். அது தமிழின் ஆகச் சிறந்த நாவல் என்றார். வகுப்பு முழுவதுமே பல்வேறு இடங்களில் உங்கள் புத்தகங்களை மேற்கோள் காட்டினார்.
அன்று மதியம் வகுப்பு முடிந்து உணவுண்டபின் அனைவரும் அவரவர் குடிலுக்குச் சென்றோம். எனக்கும் ராஜஸ்ரீக்கும் உறக்கமே வரவில்லை. பேசிக்கொண்டிருக்கும்போது நான் தங்களின் இரவு நாவலை வாசிக்கச் சொன்னேன். எங்கள் உரையாடலில் லதாவும் கலந்துகொண்டார்.
ஏதோ நீல நிறம் பற்றிப் பேச, உங்கள் நீலம் நாவலின் ராதாவை நான் வர்ணிக்கத் தொடங்கிவிட்டேன். பின்னர் கிராதம், இருட்கனி, வெய்யோன், எங்கள் எட்டயபுரம் கிருஷ்ணன் கோவில், பாரதியாரின் கண்ணன் பாடலைப் படித்து எனக்கு மனம் நிறைந்து அழுகை வந்தது என ஒரு பயணம் சென்று வந்து, பின்னர் உங்கள் புறப்பாடு பேசப்பட்டது.
ஜெ. எல்லா விதமான எழுத்துகளையும் வெவ்வேறு பெயர்களில் எழுதினாராம். ஆன்மிகம், துப்பறியும் கதைகள். ஒரே ஒருமுறை ஒரு பாலியல் புத்தகம் கூட எழுதியதாய்க் கூறியிருக்கிறார். அவர் இந்தியாவின் அனைத்து இருளையும் மாசையும் கண்டவர். மும்பையின் தகரப் பெட்டி வீடுகளிலும், கர்நாடக மலைப்பாதை வேலையிலும், ஹரித்துவாரிலும், காசியிலும் அலைந்து திரிந்து அனுபவம் மூலம் தன்னை, தன் எழுத்தை மெருகேற்றியவர் என்றேன். லதாவின் கணவரும் இதையெல்லாம் கூறியதாய் லதா சொன்னார்.
மீண்டும் நீலத்திற்கே வந்தோம். கிரிதரன், நீலியின் பெயர் பொருத்தமாக இல்லை என்றெண்ணிப் பல பெயர் வைக்க அவனே முயற்சி செய்து, இப்படித்தான் லலிதாவிற்கும் ஆயிரம் நாமம் சூட்டியிருப்பார்களோ என வியந்து, பின் சிகர உச்சியில் நின்று மலையெல்லாம் நீலமாய் மாறிக் காட்சியளிப்பதைக் கண்டு உவகை பொங்க, “நீலி” என்பதைத் தவிர வேறு பெயரே அவளுக்குப் பொருந்தாது எனும் முடிவிற்கு வரும் உவகைக் கணம் எனக்கும் இம்மலைகளைக் கண்டபோது ஏற்பட்டது என்று கூறினேன். ஆனால் அது அவர்களுக்கு நீல நிறமாகத் தெரியவே இல்லையாம்!
மீண்டும் மாலை வகுப்புகள். சிலைகளின் கை முத்திரைகள் பற்றிய ஆசிரியர் கூறும்போது செய்தும் காட்டினார். அது அவருக்கு நடனத்திலும் நல்ல அறிவுப் புலம் இருக்கும் என்பதைக் காட்டியது. நளினமாக அவர் முத்திரைகள் பிடித்துக் காட்டியதைப் பற்றி அனைவரும் வியந்து கூறிக்கொண்டனர். தாந்த்ரீக மரபைப் பற்றி அவர் கூறும்போது இரவு நாவலின் தாந்திரிக பூஜையையும் உங்கள் ஹரித்துவார் அனுபவங்களையும் நினைத்துக்கொண்டேன்.
அன்றிரவு உணவு முடித்து நாங்கள் எல்லோரும் ஒரு குடிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஆண்டாள் அம்மா ராமானுஜரைப் பற்றியும் ஸ்ரீரங்கம் பற்றியும் பஞ்ச சம்ஸ்காரம் பற்றியும் கூறினார். லதா பழனிமலைக்குக் காவடி எடுக்கும் மரபில் அவர்கள் குடும்பத்திற்கு நீண்ட உறவு இருப்பதாகக் கூறினார்.
பிறகு ஆழ்வார் பாடல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் “பச்சை மா மலை போல்” பாடலில்,
“காரொளி வண்ணனே கண்ணனே நான் கதறுகிறேன்…”
என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூற, “இது சாரோட வெண்முரசுலயும் இருக்றது” என்றார் அம்மா.
நான் பிரலம்பன் கூறும்,
“கால்கள் இத்தனை அழகு கொள்ளுமா? இந்தப் பாதங்கள் மண்ணை மிதிக்கவும் கூடுமோ?… விண் எழில் கொண்ட பீலியை அறிய நான் மீண்டும் பிறந்தெழுவேன்.”
என்ற முழு வசனத்தையும் மெய்ப்பாடு தோன்றக் கூறிக்காட்டினேன்.
“ஆனா அதை அறிய முடியாதுனு தெரிஞ்சுகிறது தான் ஞானம்” என்று அவர் கூற, விஷ்ணுபுரத்தில் திருவடி கூறும், “ஞானம் ஒரு மூட்டை போல அதை முதுகிலே சுமந்துகொண்டு நாம் அலைகிறோம்” என்று நான் சற்று முன் வாசித்ததைச் சொன்னேன்.
“மையோ மரகதமோ” பாடலைப் பற்றிப் பேசும்போது, “அந்தப் பாட்டோட பியூட்டியே அந்த ‘ஐயோ’லதான் இருக்கறது” என்றார் ஆண்டாள் அம்மா. பின்னர் சில ஆண்டாள் பாடல்கள், புறப்பாடு நூலில் வரும் மதுரம் பகுதியின் நிகழ்வுகளைப் பேசிக்கொண்டோம்.
ஒரு கட்டத்தில் ரங்கநாதரைப் பற்றி ஆண்டாள் அம்மா, “அவருதான் அங்க ராஜா… அவருக்குத்தான்… எல்லாமே…” என்று கூற,
“ராஜ ராஜ ராஜ ராஜ ராஜ சேகரா
ரங்க ராஜ தேவ ராஜ ராஜ சுந்தரா”
என்று மனதிற்குள் பாடிக்கொண்டே படுக்கைக்குச் சென்றேன்.
இப்படியாக நித்யவனத்தில் முதல் நாள் முடிந்தது.
அடுத்த நாள் பிரியாவைக் கையில் தொலைநோக்கியுடன் கண்டேன். அவர் இதற்கு முந்தைய பறவை நோக்குதல் வகுப்பில் கலந்துகொண்டவர். இமாலயப் பொறுமை மிக்கவர். எதையும் கூர்ந்து கவனித்து, அமைதி காத்து, கலைக்காமல் ரசிக்கும் அசாத்தியப் பொறுமை. சரண்யா சிறுமியின் உற்சாகத்துடனும் துள்ளலுடனும் இருப்பார். இருவருமே எங்களுக்குப் பறவைகளைப் பிரித்தறியக் கற்றுத்தந்தனர்.
நான் வந்ததிலிருந்தே ரேவதி அம்மாவிடமும் அருணா அம்மாவிடமும் அவர்கள் பங்கேற்ற தங்களின் தத்துவ வகுப்புகளைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தேன். நாங்கள் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ரேவதி அம்மா வரவே, அவரிடம் சென்று பேசினேன்.
தத்துவம் கற்றதால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டதா என்று கேட்க, “எதுவுமே சட்டை செய்யுமளவிற்கு முக்கியமானதல்ல என்று தோன்றுகிறது. நீங்கள் சிலாகித்துப் பேசும் இலக்கியங்கள் கூட சாதாரணமானவையாகத்தான் தோன்றுகின்றன” என்றார்.
ஆனால் ஆறுநிலைத் தத்துவ வகுப்புகளையும் முடித்த அருணா அம்மா, யானையை ரசிக்கும் குழந்தையைப்போல வெண்முரசை ரசித்தார்.
“நீங்க சுகரோட கண்ணாடி போட்டுருக்கீங்க போல, அருணா அம்மாவிற்கு வியாசரின் கண்ணாடி” என்றேன். ரேவதி அம்மா சிரித்தார். சிரிக்கும்போது அழகாக இருந்தார். அதை அவரிடம் சொல்ல, சற்று வெட்கம் கொண்டு சிரிக்கும்போது உதட்டின் கீழிருந்த பெரிய மச்சம் அவரை மேலும் பேரழகாக்கியது.
இந்த இடைவெளியில் உதிக்கும் சூரியன் பின்னிருக்க, ஒளிரும் பசும்புல்வெளி முன்னிருக்க, சுற்றி வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துப் பறக்க, கையில் தொலைநோக்கியும் இதழில் புன்னகையுமாய் பிரியா நடந்து வந்தார். அந்த ஒளியும் சூழலும் அவரை ஏதோ ஓவியத்திலிருந்து நடந்து வருபவர் போலாக்கியது.
அருணா அம்மா அதை என்னிடம் காட்ட, “ஹீரோயின் இண்ட்ரோடக்ஷன் மாதிரி இருக்கு! பி.ஜி.எம். மட்டும் தான் இல்ல” என்றேன். அதை பிரியாவிடம் கூற, “இவ எல்லாரையும் ஹீரோயின் ஆக்கிடுவா” என்றார்.
வகுப்பிற்கு நடந்து செல்லும்போது வட்டவடிவ இளஞ்சிவப்பு நிறப் பூ இருந்தது. அதைப் பார்க்கும்போது சில நாட்களுக்கு முன் உங்கள் வலைத்தளத்தில் பட்டாம்பூச்சி தேன்குடிக்கும் நிகழ்வை ஒரு பிரபஞ்ச லீலை முடிந்தது என்று எழுதியிருந்த பதிவு ஞாபகம் வந்தது.
ரேவதி அம்மாவும், “நாங்க பிலோஸோபி கிளாஸ் வந்தப்ப சார் ஒரு எறும்புக் கூட்டத்தைப் போட்டோ எடுத்தாங்க. அது அடுத்த ரெண்டு நாள்ல கட்டுரையா எழுதியிருந்தாங்க” என்றார்.
ஆக, இந்த இரு நாட்களிலுமே நான் கவனித்த ஒன்று: எங்களால் உங்கள் எழுத்துகளை ஒரு மணி நேரம்கூட நினைவுகூறாமல் இருக்க இயலவில்லை. ஏதோ ஒன்று உங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. வகுப்பெடுத்த ஆசிரியருக்கும் எங்களுக்கும் சரி, ஒரு இணைப்புக்கோடு உங்கள் எழுத்தும் இந்த இலக்கியமும் தான்.
இச்சமூகத்திற்கு நீங்கள் ஒரு பெரும் படிமம். வெண்முரசின் ஒரு காட்சியில், முதியவரிடம் இளைய யாதவர் இல்லை என்று கூற, அவர் இல்லாமல் இருக்கவே இயலாது; நான் அழைத்தால் இப்போதே இங்கு வருவார் என்று உணர்ச்சிததும்பக் கூறுவார். அதேபோல்தான் நீங்களும். காலந்தோறும் உங்களுக்கு மறைவென்பதே இல்லை. வகுப்பில் ஆசிரியர் சிரஞ்சீவிகள் பட்டியலைக் கூறும்போது, அடுத்த எண் போட்டு அதில் ஜெ. பெயரையும் சேர்த்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
மூன்றாம் நாள் வகுப்பு முடிந்து குழுப் புகைப்படம் எடுத்துவிட்டு, சமையல் அம்மா, ஐயா ஆகியோரிடமும் சொல்லி விடைபெற்று வரும்போது, தேவதையும் வாசல்வரை வந்து வழியனுப்பியது.
வீடு திரும்பும்போது வாகனத்தின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அடுத்த முதல் நிலைத் தத்துவ வகுப்பிற்கு கண்டிப்பாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டேன். பசிய தாழ் கிளைகளை நீட்டி ஏன் தலை உரசி ஆசீர்வதித்தன மரங்கள்.
அன்புடன்,
கீர்த்தி













