நவீனக்கலை அறிமுகம்

 

நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி

ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.

இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.

  • ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.
  • இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.

நாள்  நவம்பர் 28 29 மற்றும் 30

விண்ணப்பிக்க [email protected]

 

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை

 

திரைப்படம் ரசனை மற்றும் உருவாக்கப்பயிற்சி.

(யூடியூப் காட்சி உருவாக்கப்பயிற்சியும்கூட)

சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம் செய்து அளிக்காது. உண்மையில் நிறைய படங்களைப் பார்ப்பது அந்தக் கலைக்கு எதிரான ஒரு செயலாகவே ஆகிவிடும். மனம்போன போக்கில்  சினிமா பார்ப்பவர் தேவையற்ற படங்களை ஏராளமாகப் பார்த்து ரசனையை இழப்பதும் சாத்தியமே

எந்தக் கலையையும்போலவே சினிமாவையும் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். சினிமக்கலையின் பெரும்படைப்புகள் என்ன, வரலாறு என்ன என்பது ஒரு வகை கல்வி. சினிமாவின் ஷாட், காட்சி, நடிப்பு படத்தொகுப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தொழில்நுட்ப அறிதல் என்பது இன்னொரு வகை அறிதல். அந்த அறிதலை முறையான ஆசிரியரிடமிருந்து முறையாகக் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல தொடக்கம். நல்ல சினிமாவை பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல நல்ல சினிமாக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கும் அவசியமான கல்வி அது.

இன்று, நாம் குறைந்த செலவில் நல்ல குறும்படங்களை உருவாக்கமுடியும். முழுநீளப்படங்களையே உருவாக்கமுடியும். சொல்லப்போனால் சிற்றிதழ் இலக்கிய இயக்கம் போலவே செலவே அற்ற சிறுசினிமா இயக்கத்தையே உருவாக்க முடியும். நமக்குத்தேவை முறையான பயிற்சி. இன்று வரும் குறும்படங்களின் சிக்கலே அவற்றில் முறையான திரைக்கலைப் பயிற்சி இன்மையின் விளைவான தேர்ச்சியின்மை தெரிகிறது என்பதுதான்.

இன்று திரைப்படக்கலை என்பது திரைப்படங்களுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. எல்லா காட்சிக்கலைகளும் திரைப்படத்தின் அழகியலும் தொழில்நுட்பமும் கொண்டவையே. ஒரு நல்ல யூடியூப் வீடியோ தயாரிப்பதற்கே அந்தக் கலைப்பயிற்சி அவசியமானது.

பல நண்பர்கள் கோரியத்ற்கிணங்க தமிழின் கலைப்பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான திரு ஹரிஹரன் அவர்கள் வகுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஏழாவது மனிதன் முதலிய படங்களின் இயக்குநர். நீண்டகாலம் திரைக்கலைப் பயிற்றுநர் ஆக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.

நாள்  நவம்பர் 21 22 மற்றும் 23

விண்ணப்பிக்க [email protected]

 

வரவிருக்கும் நிகழ்ச்சிகள்

 

ஆலயக்கலை அறிமுகப் பயிற்சி

ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.

ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.

ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.

பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7

தொடர்புக்கு [email protected]

 

யோகப்பயிற்சி- முதல் நிலை

 

சௌந்த்ர் ராஜன் தமிழ்விக்கி

எப்போது வாகனப்போக்குவரத்தும் நாற்காலியும் கண்டடையப்பட்டதோ அப்போதே சில நோய்கள் தொடங்கிவிட்டன என்பார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவான சோம்பலான வாழ்க்கைமுறை உடலை செயற்கையான நிலைகளுக்கு பழக்கப்படுத்தி பலவகையான உடற்சிக்கல்களை உருவாக்கிவிட்டது. நம் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி இயல்பாக அமைந்திருக்கவேண்டுமோ அப்படி இன்று அமைந்திருக்கவில்லை. அவற்றைச் சீரமைக்க, சரியாக இயங்கச் செய்ய யோகாவே உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான வழிமுறையாக உள்ளது. யோகா இன்று ஓர் உலகப்பேரியக்கம்.

சௌந்தர் சர்வதேச அளவில் புகழ்பெற்றுவரும் யோகப்பயிற்சியாளர். சென்ற மூன்றாண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எங்கள் அமைப்பில் யோகப்பயிற்சி அளிக்கிறார். இதன் வழியாகவே அவர் சர்வதேச அளவில் அறியப்படத் தொடங்கினார். யோகப் பயிற்சியை எவரும் பெறலாம். ஆனால் சரியான ஆசிரியருன் வழிகாட்டலில் சரியான பயிற்சியை அடைவது மிக முக்கியமானது. நமக்கான யோகமுறையை அவர் தனிப்பட்ட முறையில் அளிக்கவேண்டும். தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும்.

யோகப்பயிற்சிகளை தனியாகச் செயபவர்கள் தொடர்ந்து செய்வதில்லை. அதை தொடர்ந்து செய்வதற்கான வழிமுறை என்பது அதற்கான நண்பர்களின்குழுமத்துடன் இணைவதுதான். அவர்களுடன் நேரிடையான அறிமுகம் அடைவது. அதற்காகவே யோகப்பயிற்சிக்கான தனியான இடம், தனியான சூழல் தேவை எனப்படுகிறது. இயற்கையான அழகான மலைப்பகுதியில் நிகழும் இப்பயிற்சி பலநூறுபேரின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியுள்ளது.

நாள் டிசம்பர் 12 13 மற்றும் 14 

தொடர்புக்கு [email protected]

தாவரங்கள்- வனம்: அறிமுக வகுப்பு (குழந்தைகளுக்காகவும்)

தாவரவியல் பேராசிரியை முனைவர் லோகமாதேவி நடத்தும் தாவர அறிமுக வகுப்புகள் பெரியவர்களுக்காகவே திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நூறு தாவரங்களையாவது அறிந்திருக்கவேண்டும் என்பதே நோக்கம். அதற்கான தேவை என்ன? முதன்மையாக மூன்று.

  • தாவரங்களை அறிவது சூழலுணர்வை உருவாக்கி அன்றாடவாழ்க்கையில்  சிறுசிறு இன்பங்களை உருவாக்குகிறது. இன்றைய சலிப்பூட்டும் அன்றாடச்சுழற்சி கொண்ட வாழ்க்கையில் அது மிகப்பெரிய விடுதலை.
  • நாம் உண்ணும் உணவு, நம் சூழல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது. அறிவியல்பூர்வமாக நம் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியக் அறிமுகம் செய்கிறது.
  • யோகம், தியானம் பயில்பவர்கள் இயற்கையுடனான அன்றாட உறவைக்கொண்டிருக்கவேண்டும். அதை தாவர அறிமுகம் உருவாக்குகிறது.

ஆனால் நாங்கள் எண்ணியிராதபடி அவ்வகுப்பு குழந்தைகள் நடுவே புகழ்பெற்றது. இதுவரை நிகழ்ந்த வகுப்புகளில் குழந்தைகள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். குழந்தைகள் கலந்துகொள்வதன் அவசியம்.

  • இன்றைய கணினி அடிமைத்தனம், செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை நேரடியாக இயற்கை நோக்கிக் கொண்டுவருகிறது. இயற்கையுடன் இருப்பதும், செயலாற்றுவதுமே இன்றைய ‘தகவல்தொழில்நுட்ப அடிமை’ மனநிலையில் இருந்து மீள்வதற்கான வழி.
  • பறவைகளைப் பார்த்தல் இளையோருக்குரிய உயர்நிலை கல்வி- பொழுதுபோக்கு. தாவரங்களை அவதானித்தல் அதனுடன் இணைந்து செய்யப்படவேண்டியது.
  • இளமையிலேயே குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய ஓர் அறிவுத்துறை அறிமுகமாகி அதில் ஈடுபாடு உருவாவது வாழ்க்கை முழுக்க உருவாகும் பல்வேறு திசைதிரும்பல்களை தவிர்க்கும்.
  • இது நுணுக்கமான செய்முறைகளுடன் இணைந்த நிகழ்ச்சி. ஆகவே ஒரு விடுமுறை கொண்டாட்டமும்கூட.

வரும் டிசம்பர் விடுமுறையில் மீண்டும் லோகமாதேவியின் வகுப்புகள் நிகழ்கின்றன.

நாள் 26, 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு. கிறிஸ்துமஸுக்கு மறுநாள் முதல்)

முந்தைய கட்டுரைஇளைஞர்களுக்கான வேதாந்தம்
அடுத்த கட்டுரைஏன் காட்சிக்கலையை பயிலவேண்டும்?