
அன்பிற்குரிய ஜெ,
வணக்கம். தங்களுக்காக நான் எழுதும் முதல் கடிதம் இது. கடந்த வாரம் நான் கர்நாடக இசை அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன். அதைக் குறித்து அனுபவப் பகிர்தல் ஒன்றை எழுத வேண்டும் என்ற பெருவிருப்பம் எனக்கு. ஆனால் அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் பல்வேறு அனுபவப் பகிர்வுக் கடிதங்களை உங்கள் வலைதளத்தில் படித்து பார்த்து இப்படி ஆரம்பிக்கலாமா அப்படி தொடங்கலாமா என்ற சிந்தனையிலேயே இரண்டு நாட்கள் சென்று விட்டிருந்தது..
இன்று அதிகாலையில் மலையமாருதம் பாடல் கேட்டுக்கொண்டிருக்கையில் அக்கணம் கண் முன் விரிந்தது இதுநாள் வரையில் நான் காணாத, எம் அகம் உணர்ந்திடாத ஒரு புதிய காலைபொழுது என்று தோன்றியது.. அனுதினமும் காணும் அதே காட்சிகள் தான்… ஆனால் அதை கண்டுணரும் இந்த “நான்” வேறு.. இசையால் என்னுள் விரிந்து கொண்டிருந்த உலகோடு புறவுலகமும் இணைந்து கொண்ட தருணமது…. அக்கணம் சட்டென நிகழ்ந்த ஒரு அகவிரிவை எப்படி விளக்குவதென்று தெரியவில்லை…
அதனை எழுதி புரிந்து கொள்ளலாமென்ற முயற்சியில் இக்கடிதமும் உருவம் பெற்றது..
பெருநதி ஒன்றினில் அத்தனை அத்தனை சிற்றாறுகளும் வந்து கலப்பது போல் ஸ்வரமெனும் பூக்களால் தொடுக்கப்பட்ட ராகப் பூச்சரத்தில் பயணிக்கையில் வாழ்வின் பிரிந்துபட்ட பல தருணங்களும் அகத்தினுள் தனிச்சையாக தன்னை தொகுத்துக்கொண்டு அனுபவங்களாக உரு பெற்றுக் கொண்டே சென்றது.. சமயங்களில் பாடுபவர் மறைந்து ஸ்வரங்களே தனிச்சையாக நடனம் ஆடிக்கொண்டிருப்பது போலவும்…அவை செரிவாய் தம்மைத் தாமே ராகங்களில் கோர்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமிப்பும் எழுந்தது!.. அதற்கேற்றவாறு வாழ்வில் நிகழ்ந்தேரிய அத்துனை தருணங்களும் தனதாக்கும் சுயமின்றி அனுபவங்கள் மட்டுமாக பேரியக்கத்தின் நீட்சியில் திகழ்ந்து கொண்டிருந்ததாய் அறியாக் கணமொன்றில் உணரலானேன்…
நாம் பற்றி கொண்ட சுயத்தில் லயிக்கவே இசையின் துணை தேவையென இதுநாள்வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் சுயம் கடந்து அகம் விரித்து புதியதோர் உலகத்தில் சஞ்சரிப்பதற்கான வாயிலை திறந்து காட்டிய ஆசிரியருக்கு அகம் நிறைந்த நன்றிகள்..
ஆசிரியரின் அருகமர்ந்து அவரைத் தொடர்ந்து ஸ்வரத்தை பாடிக்கொண்டிருக்கையில் ஒரு நிலப்பரப்பிற்கு நடந்து சென்று கொண்டிருப்பது போலவும் பாதை விரிய விரிய அங்கே முன்னமே வந்திருப்பது போன்ற ஒரு பரிச்சயமும் தோன்றியது.. பிராணயாமம் செய்கையில் சென்று தொடும் இடமோ.. ஆம்… அப்போது பயணிக்கும் அதே இடம்.. ஆனால் இப்போது இங்கு வந்து சேர்ந்தது வேறொரு பாதையில்….
இசை கேட்டு அமர்ந்து கொண்டிருந்த கணங்களில் என்னுள் விரிந்த அகத்திரையில் வண்ண வண்ணமாக புதுப்புது ஓவியங்களை வரைந்து பார்த்த மகிழ்வோடு..
ஒவ்வொரு ராகத்தின் நேர்த்தியையும் மனம் உணர்ந்திடும் போதெல்லாம் வாழ்வின் நிகழ்வுகளையும் அவ்வாறே தொகுத்து அதனை செறிவேற்ற முயன்ற அற்புதமான கணங்களோடு..
கையில் எடுத்து விளையாடி மகிழ புதிய பொம்மையை பெற்ற குழந்தையைப்போல் இனி வரும் நாட்களில் இசையோடு விரியும் புதியதோர் உலகினில் வாழப் போகும் உற்சாகத்தோடு மலை இறங்கி வந்தேன்…
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வகுப்புகள்.. மழை மேகங்களும் சற்று நிதானித்து தன் தீரா மழைப் பொழிவை நிறுத்திக்கொண்டு இசை கேட்டு அப்படியே நின்றனவோ? ஆசிரியரிடம் சொல்லிட நன்றி என்பதை விட மேலான ஒரு சொல்லை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்…
அகம் கனிந்த நிறைவோடு….
–கலை கீர்த்தி












