குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி…

அன்புள்ள ஜெயமோகன்

குரு நித்யா காவியம் பற்றிய அறிவிப்பை உங்கள் தளத்தில் பார்த்தேன். நீண்ட காலமாக இந்த இலக்கிய முகாம் நிகழ்ந்து வருவதை அறிந்தேன் .இந்த இலக்கிய முகம் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்று அறிய ஆவல் .இதில் எந்தெந்த வகையான அவர்கள் கலந்து கொள்ளலாம்

ஆர். குமார் சரவணன்

அன்புள்ள குமார்,

1992 முதல் தொடர்ச்சியாக இந்த இலக்கிய முகாம் நிகழ்ந்து வருகிறது. இதன் முதன்மை நோக்கம் இலக்கியவாதிகளுடன் வாசகர்களும் கலந்து அமர்ந்து உரையாடுவதற்கானஒரு சந்தர்ப்பம் என்பதுதான் .இந்த அமர்வுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கலந்து கொண்டவர்கள் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.அவர்களுக்கான ஒரு அடித்தளத்தை இந்த சந்திப்புகள் அமைத்து கொடுத்திருக்கின்றன.

இந்த அமர்வுகளில் எழுத்தாளர்கள் மற்றும் தீவிரமான வாசகர்கள் ஏதேனும் இலக்கியம் சார்ந்த ஒரு தலைப்பைப் பற்றி சிற்றுரை ஒன்றை நிகழ்த்துவார்கள். அதன் பிறகு அதன்மீது பொது விவாதம் நிகழும். அந்த விவாதம் தீவிரமானதாகவும் ஓரளவுக்கு மட்டுமே மட்டுறுத்தப்பட்டதாகவும் இருக்கும்.

இலக்கிய அறிமுகம் அறவே இல்லாதவர்களுக்கும் இலக்கியவாசிப்பு உடையவர்களுக்கு ஒருங்கே அது பயன்படுவதாக இருக்கும். இலக்கிய அறிமுகம் இல்லாதவர்கள் இலக்கியத்தின் வெவ்வேறு தரப்புகளை, வெவ்வேறு சிந்தனைக்ளை தெரிந்து கொள்வதற்கு அது உதவும். இலக்கிய அறிமுகமும் தொடர் வாசிப்பும் உடையவர்கள் தங்கள் கருத்துக்களை பரிசீலனை செய்து கொள்வதற்கும் அவற்றை முன் வைத்து எதிர்வினைகளை சந்திக்கவும் வழி அமைக்கும்.

இலக்கியத்தின் எல்லா பிரிவுகள் சார்ந்தும் இங்கே விவாதங்கள் நிகழ்கின்றன.நவீன க்விதை, நாவல், சிறுகதை,மரபிலக்கியம், இலக்கிய கோட்பாடுகள் என எல்லாமே பேசப்படும்.பொதுவாக சந்திப்பதும் உரையாடுவதும் மகிழ்ச்சியாக மூன்று நாட்களை கழிப்பதுமே முக்கியமானது என்பது என் எண்ண. ஆகவே தீவிரமான கசப்புகளோ, எதிர்நிலைகளோ இதில் இருக்காது.

இலக்கியத்தை ஒவ்வொருவரும் தனியாகத்தான் வாசிக்கிறார்கள். ஆனால் இப்படி ஓரிடத்தில் அமர்ந்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இலக்கியத்தை கொண்டாடுவது என்பது இலக்கிய வாசகர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு மிகுந்த புத்துணர்ச்சியை அளிப்பது.

இலக்கியவாதி என்று அடையாளத்தை நாம் விரும்பி சூட்டிக் கொள்ளவும் நமக்கு என ஒரு சிறு நட்பு சூழலை உருவாக்கிக் கொள்ளவும்  இது அவசியமானது. இலக்கியம் சார்ந்த நம் நம்பிக்கைகள் வலுப்பெறுகின்றன. இலக்கியம் சார்ந்த நமது கனவுகள் முளை விடுகின்றன .இலக்கியத்தை அவ்வாறு நாம் அவ்வப்போது கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைதத்துவம் முதல் அணி