
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஓவியப்பயிற்சி முகாமில் பங்கு கொள்ள முடிவெடுத்த போது நானும் ரஞ்சனியும் கொல்லிமலையில் இருந்தோம். மலையிறங்கி ஒரு பகல் ஊரில் கழித்துவிட்டு மீண்டும் வெள்ளிமலைக்கு ஏற வேண்டும். நண்பர் கதிரேசன் தன் அக்கா மகளுக்கு கலைகளில் ஆர்வத்தை உண்டாக்கும் பொருட்டு அவரை நாகையிலிருந்து அழைத்து வந்திருந்தார். அவரும் அக்கா மகள் திவ்யாஶ்ரீயும் ஈரோடு வந்து சேர நள்ளிரவு ஒருமணி ஆகிவிட்டது. நாங்கள் நால்வருமாக வெள்ளி அதிகாலை வெள்ளிமலைக்கு புறப்பட்டோம்.
நான் கொல்லிமலை பயணத்திலேயே மலர்களையும் வண்ணங்களையுமே அதிகம் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு பார்த்த ஒரு மலர் குறித்து ஆசிரியர் லோகமாதேவியிடம் கேட்டிருந்தேன். அவர் மலரைப் பற்றிய தகவல்களை சொன்னதுடன் கூடுதலாக ஒன்று சொன்னார். நிறமற்ற மண்ணிலிருந்து நிறம்மிக்க மலர்கள் திரண்டு வருவது குறித்தான ஆச்சர்யத்தை பகிர்ந்து கொண்டார். இந்த ஓவியப்பயிற்சி முகாமுக்கு பதிவு செய்தது முதல் என் மனதில் அவரின் வரிகள் தான் ஓடிக்கொண்டிருந்தன. இந்த எண்ணங்களின் நீட்சியாக காலை ஒளியில் பூத்து நிறைந்த மலர்களுடன் தாமரைக்குளத்தை பார்த்ததுமே முகாமுக்கான மனநிலை அமைந்துவிட்டது.
ரஞ்சனிக்கும் திவ்யாஶ்ரீக்கும் மட்டுமே நேரடி வரைகலையில் பயிற்சி இருந்தது. எனக்கும் கதிரேசனுக்கும் சுத்தம். எனவே நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தோம். ஆனால் ஒரு கலையில் ஈடுபாடு கொண்ட எவருக்கும் இன்னொரு கலையின் அடிப்படைகளை அறிந்து கொள்வது திறப்புகளை அளிக்கும் அனுபவமாகவே இருக்கும். எனவே இணைய போஸ்டர்கள் சார்ந்து ஆசிரியர் கீதாவும், கையினால் வரையும் வரைகலை குறித்து ஆசிரியர் லலிதாவும் தங்கள் கலையின் அடிப்படைகள் குறித்து விளக்கமளித்த வகுப்புகளில் ஆர்வத்துடன் பங்குகொண்டோம்.
ஆசிரியர் கீதா அவர்களை நான் இதற்கு முன்பு நேரில் சந்திதில்லை என்றாலும் தூரன் விழாவுக்கான போஸ்டர்கள் வடிவமைப்பின் போது அறிந்திருந்தேன். தகவல்கள் சார்ந்து எத்தனைமுறை திருத்தங்கள் சொன்னாலும் கடைசி நிமிடம் வரை எவ்வித சலிப்புமின்றி செய்து தருவார். அவர் குருகு மற்றும் நீலி இதழுக்கு வடிவமைத்த போஸ்டர்களைக் கொண்டு எங்களுக்கு விளக்கினார். தொடுதிரையில் கவனமின்றி தள்ளிவிட்ட படங்கள் யாவும் இப்போது கச்சிதமான வடிவமைப்புடனும் சில போஸ்டர்கள் உள்ளர்த்தங்கள் கொண்டதாகவும் தோற்றமளித்தன. சில போஸ்டர்களில் தான் செய்திருந்த பிழைகளை அவரே சுட்டிக் காட்டினார். எங்களையும் திருத்தங்கள் சொல்ல ஊக்குவித்து அனைவரையும் பங்குகொள்ள செய்தார். இலக்கிய நிகழ்வுகள், மின்னிதழ்கள், சிறப்பு கட்டுரைகள், வெண்முரசு வரிகள், கம்பராமாயணம், புத்தக அட்டைப்படங்கள் என இவர் வடிவமைத்த போஸ்டர்கள் வழியாகவே இவரின் இலக்கிய தெரிவுகளையும் பயணங்களையும் பின்தொடர முடிந்தது. இவர் வெண்முரசை குழந்தைகளுக்கான எளிய ஆங்கிலத்தில் குறைவான வரிகளுடன் படக்கதைகளாகவும் உருவாக்கி வருகிறார். படக்கதை வடிவமைப்புடன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதிலும் கீதா அவர்களின் பங்கு உள்ளது. நான் பார்த்தவரையில் இதுவொரு பெருமுயற்சி, வெற்றியடைய வேண்டும்.
ஆசிரியர் லலிதா அவர்களின் வகுப்பு கைகளால் வரையும் நேரடி வரைகலையில் ஈடுபடுவோருக்கானது. இருவரின் வகுப்புகளிலுமே படச்சட்டகம் அமைத்தல், வண்ணங்களின் ஒத்திசைவு, வண்ணங்களின் அளவு போன்றவை குறித்தான பாடங்கள் இருந்தன. லலிதா அவர்கள் குழந்தைகளின் செல்ல ஆசிரியராக இருந்தார். வகுப்பு முன்நகர்கையில் அனைவருமே குழந்தைகளாக மாறியும் விட்டிருந்தனர். ஓவியம் எப்படி அமைந்தாலும் தொடர்ச்சியாக ஈடுபாட்டை தக்கவைப்பதையும் தொடர் பயிற்சியில் ஈடுபடுவதையும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். புத்தக அட்டை வடிவமைப்பில் கைகளால் வரையப்படும் கோட்டோவியங்களின் பங்கு குறித்தும் பகிர்ந்து கொண்டார். வாழும் தமிழ் நியூயார்க் நிகழ்வில் இவரின் கோடோவியங்களுடன் இரண்டு புத்தங்கங்கள் வெளியாகியிருந்தன. “Born with the Southern Wind” மற்றும் “The Sound of the Eastern Waves” ஆகிய இரு புத்தகங்களின் அட்டைப்படங்கள். டிஜிட்டல் வடிவமைப்பும் கோட்டோவியங்களும் இணையும் புள்ளியில் அவற்றின் சாத்தியம் அதிகம் என அவற்றைப் பார்த்ததும் தோன்றியது.
ரஞ்சனி இந்த மூன்று நாட்களும் பெரும்பாலும் தனித்தமர்ந்து தான் வரையும் ஓவியங்களில் மூழ்கியிருந்தாள். அவள் தனக்கான ஆசிரியர்களை கண்டுகொண்டது நிறைவளிப்பதாய் இருந்தது. வகுப்பு முடித்த அடுத்த நாள் விஷ்ணுபுரம் வட்டத்தின் ஆஸ்தான பறவையியலாளர்களுள் ஒருவரான அன்பரசியுடன் வெள்ளிமலையைச் சுற்றி பறவை பார்க்க சென்றோம். பறவை பார்க்க கிளம்பிவிட்டால் அன்பு அவர்கள் துளியும் ஊக்கம் குன்றா தவர். உற்சாகத்துடன் எங்களுக்கு கற்பித்துக் கொண்டே வந்தார். மலர்களின் பறவைகளின் வண்ணங்களால் மீண்டும் சித்தத்தை நிரப்பிக் கொண்டோம். ரஞ்சனி வகுப்பில் தான் வரைந்த ஓவியத்தை முடிக்க மனமில்லாமல் அதில் பறவைகளையும் தாவரங்களையும் இன்னும் பலவற்றையும் சேர்த்துக் கொண்டே இருக்கிறாள். அந்த ஓவியம் முடிவில்லாமல் தொடர வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு
டி.ஏ.பாரி,
பெருந்துறை.





