
அன்புள்ள ஜெயமோகன்,
சவுத் பவுண்ட் இதழில் ஏ.வி. மணிகண்டன் எழுதிய நீண்ட விமர்சனக் கட்டுரையைப் படித்தேன். ஷகீனாஸ் கிஸ் என்பது மிகச் சிறிய நாவல். ஆனால், அதை மிக விரிவான ஒரு பார்வையில் அவர் அணுகியிருக்கிறார். அதன் கலாச்சாரப் பின்னணியையும், அதன் வெவ்வேறு நுட்பங்களையும் முன்வைத்துள்ளார். அது ஒரு கன்னட குடும்பக்கதை. அதை இந்திய சமகாலக் குடும்பஙளின் பிரச்சினையாக விரித்துள்ளார். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட, அந்தப் பண்பாட்டுச் சூழலில் வாழும் ஒருவரால் மட்டுமே இத்தகைய விரிவான கட்டுரையை அந்த நாவலைப் பற்றி எழுத முடியும் என்று தோன்றுகிறது.
ஆங்கிலத்தில் பொதுவாக இத்தகைய நீண்ட, ஆழமான விமர்சனக் கட்டுரைகள் வெளியாவதில்லை. மேலோட்டமான விமர்சனக் குறிப்புகளே பெரும்பாலும் வெளிவருகின்றன. உங்கள் White Elephant நாவலுக்குக்கூட, அதிலுள்ள அடிப்படையான படிமங்களையும் அவற்றின் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணிகளையும் கணக்கில் கொண்டு விரிவான வாசிப்பை முன்வைக்கும் ஒரு நல்ல கட்டுரை இதுவரை எழுதப்படவில்லை.
உதாரணமாக, தமிழகத்தின் தலித் போராட்டங்கள், அயோத்திதாசரின் பௌத்த மதமாற்றப் பயணம், பஞ்சமி நிலங்கள் உருவாக்கத்தில் தாமஸ் மன்றோ போன்ற வெள்ளையதிகாரிகளின் பங்கு, பஞ்சங்களின் பின்னணியில் உள்ள சாதியம்சங்கள் எனப் பல்வேறு விஷயங்களையும் கணக்கில் கொண்டால்தான் அந்த நாவலை இவ்வளவு விரிவாக வாசிக்க முடியும். அத்தகைய வாசிப்புக்கான ஒரு விரிவான திறப்பை ஆங்கில விமர்சன உலகம் இதுவரை உருவாக்கவில்லை.
ஷகீனாஸ் கிஸ் நாவலுக்கும் இதே நிலைதான். கன்னட மொழிக்கு வெளியே அந்த நாவலைப் பற்றிய விரிவான வாசிப்புகள் இல்லை. ஆனால், ஒரு கன்னட எழுத்தாளர் இவ்வளவு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி, அந்த நாவலைப் பெரிய அளவில் முன்வைத்திருக்கிறார்.
அதேபோல, தமிழிலிருந்தும் நமது படைப்புகளைப் பற்றி விரிவான கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்படுமானால், அவை நமது படைப்புகளுக்கான ஆழமான, விரிவான வாசிப்புகளை உலக அளவில் உருவாக்கும் என்று நினைக்கிறேன்.
கிருஷ்ணா முகுந்தன்
அன்புள்ள கிருஷ்ணா,
ஏ.வி. மணிகண்டன் தமிழ் எழுத்தாளர். கன்னடம் அவருக்கு தெரியாது என நினைக்கிறேன். அந்நூலின் இருந்து பெற்ற வாசிப்பையே அவ்வாறு விரித்து எழுதியுள்ளார். மிகச்சிறந்த கட்டுரை அது. அவ்வாறு விரிந்த நோக்கில் எழுதப்படும் விமர்சனக்கட்டுரைகளையே நான் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன். ஆனால் எளிய அறிமுகம் அளிக்கும் கட்டுரைகளும் தேவையே. அவைதான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.
ஜெ












