முழுமையறிவு அனைத்துக் காணொளிகளும்
ஜெமோ
உங்களுடைய ‘சுயமுன்னேற்ற’ காணொளிகளை பார்த்துவருகிறேன். இந்த போதனைகளை எல்லாம் நான் ஒரு கேலியுடன் மட்டுமே பார்க்கிறேன். இப்படி போதனை செய்து எவரையும் மாற்றிவிடமுடியாது. இந்தப் போதனை செய்பவருக்கு வேண்டுமென்றால் ஒரு திருப்தி இருக்கலாம். அவர் தன்னை ஒரு பெரிய ஆளாக எண்ணிக்கொள்ளலாம். மற்றபடி இந்தப் போதனைகள் எல்லாம் வேறும் கேலிக்கூத்துதான். நான் உங்களுடைய காணொளிகளைப் பார்ப்பதுண்டு. வெடித்துச் சிரிப்பதற்காக மட்டும்.
ராம்சந்தர்
அன்புள்ள ராம்சந்தர்
வாழ்க்கையில் சிறந்த சாதனைகளைப் புரிந்து, அந்த நிமிர்வில் அமர்ந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களுடைய சாதனைகளை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவை கண்டிப்பாக மானுட குலத்துக்கு பயன்படுபவையாகவும் வியப்புக்குரியவையாகவும் இருக்கும் என நினைக்கிறேன். நம்பிக்கை, நேர்நிலைப்பார்வை, தொடர்ச்சியான முயற்சி ஆகியவை இல்லாமல் சாதனைகள் சாத்தியமில்லை.ஆகவே நீங்கள் அந்த மனநிலை கொண்டவர். நேர்நிலை மனநிலையுடன் இந்தக் காணொளிகளைப் பார்த்து அவற்றை ஒரு கேளிக்கையாக எடுத்துக் கொள்கிறீர்கள் என புரிந்துகொள்கிறேன். சிறப்பு. அவை அப்படி உங்களுக்கு பொருள்படுவது இயல்புதான். ஆனால் வேறு பலருக்கும் அவை உண்மையில் பயன்படுகின்றன. அப்படி பலர் சொல்லியிருக்கிறார்கள். பசி நீங்கியவருக்கு உணவு சலிப்பூட்டும். பசிப்பவருக்கு அது இனியது.
ஜெ