அன்புள்ள ஆசிரியருக்கு,
கிருஷ்ணன் ஒரு முறை அறக்கல்வி மாணவர்கள் எல்லாம் ஒன்றாக இருக்கும் போது, ஜெயமோகன் நடத்தும் தத்துவ வகுப்பில் இப்போது கலந்து கொண்டால் பெரிதும் புரியாது பின்னர் கலந்து கொள்வது நல்லது என்று சொல்லியிருந்தார். சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் முதல் நிலை அறிவிக்கப்பட்ட போது எனக்கு அந்த சமயத்தில் கலந்து கொண்டால் புரியாதோ என்ற பயத்தில் கலந்து கொள்ளவில்லை. மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கும் என்று நினைத்தேன். இனிமேல் முதல் நிலை வகுப்பு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அடுத்த வாரம் நடக்கும் இரண்டாம் நிலை வகுப்போடு அந்த வகுப்பும் இனிமேல் நடக்காது என்று அறிவித்து விட்டீர்கள். மூன்றாம் நிலை வகுப்பும் இறுதியாக நடக்கப் போகிறது. எனக்கு இப்போது தத்துவத்தின் மேல் பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெரிய வாய்ப்பை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
முதல் நிலை வகுப்பில் இந்திய தத்துவம் குறித்த அறிமுகம் மட்டும் தான் இருக்கும். அடுத்தடுத்த வகுப்புகளில் தான் அது விரிந்து செல்லும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நேராக இரண்டாம் நிலை வகுப்பில் கலந்து கொண்டாலும் நமக்கு பிடி கிடைத்துவிடும் என்று சபரீஷ் சொன்னான். கிருஷ்ணன் சாரிடம் முதல் நிலை வகுப்பில் நீங்கள் நடத்தும் பாடத்தை அவர் எனக்கு நடத்த முடியுமா என்று கேட்டிருந்தேன். அவர் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால் உங்களிடம் நான் தான் அனுமதி பெற வேண்டும் என்று சொன்னார். கிருஷ்ணன் நடத்தும் முதல் நிலை வகுப்பில் நான் கலந்து கொண்டுவிட்டு நேராக அடுத்த வாரம் உங்களுடைய இரண்டாம் நிலை வகுப்பில் நான் கலந்து கொள்ளலாமா? மீண்டும் இதை தவற விட்டு விடக்கூடாது என்று நினைக்கிறேன்.
இன்று ஸ்ரீவித்யா என்கிற அறக்கல்வி அந்தியூர் மணி அவர்களிடம் கேட்ட போது தத்துவ வகுப்பு மீண்டும் மே மாதம் நடக்கும் என்று சொன்னாராம். ஆவாறு மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதா?
அவ்வாறு இனிமேல் நிகழ வாய்ப்பே இல்லை என்றால் இந்த இறுதி வாய்ப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சிபி
அன்புள்ள சிபி
முதல் வகுப்பை முடித்தவர்களுக்கு இறுதியாக நிகழும் இரண்டு மூன்றாம் வகுப்புகள் என்றுதான் அந்தக் குறிப்பில் சொல்லியிருந்தேன். மீண்டும் முதல் வகுப்பு எப்படியானாலும் நடத்தவேண்டியிருக்கும். அனேகமாக மே மாதம் முதல் வகுப்பு மீண்டும் நிகழும். இந்த வகுப்புகளுக்கு ஓர் ஒழுக்கும் கட்டமைப்பும் உள்ளது. அதை முறையாகக் கற்பதே சிறப்பு.
ஜெ