அன்புள்ள திரு.ஜெ சார் அவர்களுக்கு
நான் தனலட்சுமி. 24.12.2024 முதல் 26.12.2024 முடிய வெள்ளிமலை ஆலயக்கலை வகுப்பில் மகள் மற்றும் பேத்தியுடன் கலந்து கொண்டேன். இது எனது முதல் வகுப்பு.
பழனி சிவகுமார் அவர்களின் ஆலயக்கலை வகுப்பு குறித்த கடிதம் படித்தேன்ஆலயம் – கடிதம்
அவருக்கு ஒரு அனுபவம் என்றால் எனக்கு வேறுமாதியான அனுபவம். நான் வழக்கமாக அமாவாசை, பிரதோஷம் போன்ற நாட்களில் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆலயக்கலை வகுப்பிற்கு பிறகு பிரதோஷத்திற்கு எங்கள் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கும், அமாவாசை அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கும் சென்றேன். கோவிலுக்கு செல்லும் போது தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி கொண்டும் படிகளில் தொட்டு கும்பிட்டு கொண்டும் செல்வேன். ஆனால் தற்போது கோவிலுக்கு சென்றதும் ஸ்லோகமும் வரவில்லை. சிலைகளை கண்கள் தேடுகின்றன. என்ன ஹஸ்தம், என்ன ஸ்தானகம் என கண்கள் அலைபாய்கின்றன. சில உடனே ஞாபகத்திற்கு வந்தன. சில வரவில்லை . ஆனால் என்னை மறந்து நின்று விட்டேன் என்பதே உண்மை. அப்போதுதான் இதுவரை நீங்கள் கோவிலுக்கு சென்றீர்கள். இனிமேல் கோவில் உங்களுக்குள் வரும் என J.K. Sir கூறியது புரிந்தது.
வெள்ளிமலையில் அருமையான இயற்கை சூழலில் இதுபோன்ற ஒரு வகுப்பை ஏற்பாடு செய்தது மிகவும் பொருத்தம். தங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
அந்தியூர் மணி அவர்களின் கண்டிப்புடன் கூடிய நேர்த்தியான மேற்பார்வை அருமை.
தனலட்சுமி,
ஈரோடு.
அன்புள்ள தனலட்சுமி,
சிற்பங்கள், கலைகள், தத்துவங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் தொடக்கநிலையில் நம பக்தியில் இருந்து விலகிச்செல்கிறோமா என்னும் எண்ணம் உருவாகும். அது இயல்பே. ஆனால் அது ஒரு தற்காலிகமான மனநிலை மட்டுமே.
பக்தியில் ஒரு சிக்கல் உண்டு, அது மிகச்சிறிய ஒரு பரப்பு. மிக எளிய உணர்வுகளால் ஆனது. நம் உள்ளமும் நம் எண்ணமும் பெரியவை. ஆகவே நாம் மிக எளிதில் அதிலிருந்து வெளியே சென்றுவிடுவோம். நமக்கு பக்தி சலிப்பு தட்ட ஆரம்பிக்கும். ஆகவே மிக அரிதாக மட்டுமே ஆலயங்களுக்குச் செல்வோம். அப்போது மட்டும் பக்தியுணர்ச்சி இருக்கும். எஞ்சிய நேரங்களில் நாம் எளிய அன்றாடங்களில் ஈடுபட்டிருப்போம். இன்னும் பலர் ஏதேனும் நெருக்கடி வந்தால் மட்டுமே பக்திக்குள் வருவார்கள்.
ஆகவேதான் பக்தியை அறிவாலும், கலையாலும் பெருக்கிக்கொள்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் வாரந்தோறும் பேருரைகள் நிகழ்வது அதனால்தான். அவ்வளவு பெரிய இசையுலகம் அவர்களுக்கு அதனால்தான் தேவையாகிறது. இந்துக்களில் பெரும்பாலானவர்கள் அவ்வண்ணம் இந்து நூல்களுக்குள் நுழைவதில்லை. இந்துக் கலைகளும் அவர்களுக்குத் தெரிவதில்லை. இதன் விளைவாக அவர்களின் பக்தி மிகச்சிறிய அளவிலானதாக உள்ளது. கூடவே ஐயமும் எதிருணர்வும் கலந்திருக்கும்.
சிற்பங்கள், கலைகள், தத்துவங்கள் ஆகியவற்றில் ஈடுபடும்போது நாம் பக்திக்குள் முழுமையாக வாழ முடிகிறது. சிற்பங்களை முதலில் அவற்றின் கலையிலக்கணம் சார்ந்தே அணுகுவீர்கள். மெல்ல மெல்ல ரசிக்க ஆரம்பிப்பீர்கள். அதன் பின் அவை உங்கள் ஆழ்மனமாக, கனவாக ஆகும். அவை உங்களை ஆட்கொள்ளும். அந்நிலையிலேயே நீங்கள் மேலும் தீவிரமான பக்திக்குள் செல்கிறீர்கள். ‘எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று பாடிய நாவுக்கரரசர் அவ்வண்ணம் சிற்பக்கலையினூடாகச் சிவனை அணுகியவர்தான்
ஜெ