யோகம், ஓராண்டுப்பயணம் – திரு

Screenshot

அன்புள்ள ஜெ 

இந்த டிசம்பர் வந்தால் நான் யோகம் செய்ய ஆரம்பித்து மூன்று வருடங்கள் முடிகிறது. திரும்பி பார்க்கையில் நீண்ட நாட்கள் போலவும் அதே சமயம் மிக குறுகியது போலவும் உள்ளது. உங்களுடனானா ஒரு பயணத்தில் நீங்கள் நான் தவறாக அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, குருஜி சௌந்தரை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஒரு வருடம் கழித்து, முழுமையறிவு வழியாக ஒருங்கிணைத்த முதல் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஆரம்பித்தது (டிசம்பர் 2022). சென்ற மாதம் என்னுடைய மகனையும் மகளையும் சத்தர்ஷனுக்கு அழைத்து சென்று யோகாவை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கும் குருஜி மற்றும் மரபார்ந்த யோகா பற்றிய அறிமுகம் செய்துவைத்தேன். அவருடனான பயணங்கள், அடிக்கடி என்னுடைய கேள்விகளை நேரடியாக கேட்டு தொடர்பு கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது பெரும் மனநிறைவை தந்துவருகிறது. யோகா முகாமை ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்திய உங்களுக்கு பாதம் பணிந்த வணக்கங்களும் அன்பும்.

இந்த மூன்று வருட பயணத்தில் நான் அடைந்த மாற்றங்களை திரும்பி பார்க்கையில் ஒரு புறம் வியப்பும், நம்முடைய மரபார்ந்த முமுழுமையான பயிற்சியை சரியான முறையில் அதே சமயம் தனிப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி, தொடர்ந்து மெருகேற்றி வரும் பீகார் யோகா பள்ளியின் பாடத்திட்டத்தை ஒரு மரபார்ந்த ஆசிரியரிடம் கற்றுகொண்டு, தொடர்ந்து அவர்களுடைய வழிகாட்டலில் இந்த மாற்றங்கள் நடக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை என்றே சொல்லவேண்டும். என்னுடைய அப்பா நான் சிறிய வயதில் இவற்றில் சிலவற்றை தானாகவே (சிரசாசனம்!) புத்தகம் படித்து செய்து வந்தது ஞாபகம் வருகிறது, சவ்வாசனம் செய்வதை நான் கிண்டல் செய்ததும் உண்டு. அவர் எவ்வளவோ சொல்லியும் சில பயிற்சிகளில் (கராத்தே, கூடைப்பந்து) ஈடுபடுத்தியும் நான் உடல் பயிற்சி சம்பந்தமான விஷயங்களில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால் 35-45 வயதில் இருத்தயலியல் அல்லது உடல் சிக்கலில் இங்கு வந்து சேரவேண்டி வந்தது.

முதல் வகுப்பு முடிந்ததுமே இந்த பந்தம் நெடுநாட்கள் வரும் என தோன்றியது, நான் உடலை பேணுவதில் உணவு வழியாக அக்கறை, முறையான பயிற்சி இல்லாமல் ராமனாஸ்ரமம் சென்று அமர்ந்து வருவது மாறி பயிற்சிகள் வழியாக உடல், மனம் மற்றும் உணர்வு நிலைகளை சரியாக நிர்வகிக்கும் மரபார்ந்த முறைக்கு என்னை அறியாமலேயே மாறியிருக்கிறேன் என்பதை இப்பொழுது எண்ணிப்பார்க்கிறேன். குருஜி என்னுடைய ஆரம்ப கட்ட கேள்விகள், அசட்டு அபிப்ராயங்களை மேல்நிலை பயிற்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே கேட்பதை மென் முறுவலுடன் ஆமோதித்து எனக்கு தக்க வகையில் பதிலளிப்பார். என்னுடைய உடல், மனம் மற்றும் உணர்வுகளை ஆயுர்வேத முறைப்படி வகைப்படுத்தி அதை சமநிலைபடுத்துவதற்கு எற்றவாறு ஆசனங்களை செய்யும் முறையை மாற்றி என்னுடைய வகைக்கு எதை  அதிகப்படியாக செய்யக்கூடாது எப்படி செய்யவேண்டும் என்று தொடர்ந்து வழிகாட்டினார். அப்பொழுது பீகார் யோகா பள்ளி பாடத்திட்டங்கள் பற்றி குருஜி சொன்னது தவிர ஒன்றுமே தெரியாது, தொடர்ந்து பயிற்சிகளை பல ஆண்டுகள் செய்ததால் தான் அதை சரியா செய்யமுடியும் முழுமையான பலனையும் தரும் என்று அவர் சொன்னாலும் என்னுடைய அதிக பிரசங்கி தனத்தினால் மேல்நிலை பயிற்சிகள் பற்றி கேட்டாலும் கடிந்துகொள்ளாமல் அதை தனக்கே உரிய பாணியில் நேரடியாக சொல்லாமல் பதிலளித்து சமாளித்துவிடுவார்

முதல் வகுப்பு முடிந்து தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்ததும் இரண்டாம் நிலை (ஏப்ரல் 2023) வகுப்பில் கலந்துகொண்டு அடுத்த கட்ட பயிற்சிகளையும் சேர்த்து செய்து வர ஆரம்பித்தோம். இதன் நடுவில் நான் பயணம் செல்லும் இடங்களில் உள்ள ஆன்மீக தலங்கள் பற்றி அவரிடம் கேட்டு அங்கு சென்று வருவதும் தொடர்ந்தது. பயிற்சிகள் தொடர்ந்து செய்ய ஆரம்பித்ததும் உடல் அளவில் ஏற்படும் இலகுத்தன்மையை உணர முடிந்தது. தொடர்ந்து அமர்ந்து படித்தல், வேலை என்று இருப்பதால் ஏற்படும் சிக்கல்களை அந்த பயிற்சிகள் பெருமளவு குறைத்தன, முழுமையாக நீங்க இன்னும் சில காலங்கள் பிடிக்கும் என்றே நினைக்கிறான், இவ்வளவு வருடங்கள் இந்த உடம்பிற்கு நான் செய்து வந்ததை இந்த குறுகிய காலத்தில் ஓரளவிற்கு அதை சரிசெய்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். பின் கீழ் முதுகு இருக்கங்களையும் கால் இருக்கங்களையும் மேலும் சரி செய்ய வேண்டியிருக்கிறது. தொடர் பயிற்சியால் கண்டிப்பாக முழுமையாக மாற்ற முடியும் என்றும் உறுதியாக சொல்ல முடியும், என்னுடைய தன்னம்பிக்கை, முயற்சி என்பதை விட, பயிற்சி திட்டங்களை அவ்வளவு கச்சிதமாக வரையறை செய்யப்பட்டுள்ளது, அதை கடைபிடிக்கும் எவருக்கும் அது சாத்தியமே.

முழுமையறிவு வகுப்பு வாட்சப் குழு வழியாக தொடர்ந்து எங்களுடைய சந்தேகங்கள், கேள்விகள், மரபார்ந்த யோக புத்தகங்கள் பற்றி உரையாடியும் வந்தோம், அவ்வப்பொழுது அடுத்த வகுப்பு எப்பொழுது என்று நாங்கள் கேட்கும் பொழுதெல்லாம், வைக்கலாம் நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என்று இரண்டாவது வருடமும் பயிற்சிகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். பயிற்சிகளை நானாக நடத்த முடியாது, ஆஸ்ரமத்திற்கு விண்ணப்பித்து முறையான அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லி, வரும் வரை தொடர்ந்து செய்யுங்கள் என்றார். இரண்டாம் வருடம் முதல் மனம் சம்பந்தமான சிக்கல்களை பிராணாயாமா மற்றும் பிரத்யாஹார பயிற்சிகள் வழியாக உணர முடிந்தது, இது வரை இது பற்றி அறியாமல் இருந்திருக்கிறோம், அடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சரி  செய்ய வேண்டும் என்ற முனைப்பும் எழுந்தது. யோகத்துடன் உங்களுடைய தத்துவ வகுப்பு, கட்டுரைகள், கட்டண உரைகள், நித்யாவிற்கும் உங்களுக்கம் ஆன உரையாடல், திருவண்ணாமலை வாசம், ரமணாஸ்ரம், விசாரம், கிருஷ்ண பிரேமியுடனான பக்தி என்று பல வழிகளில் முயன்றதும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன்

மனைவி கிருத்திகாவும் என்னுடன் கலந்துகொண்டதால் எங்களுக்குள் பேசிக்கொள்ள யோகாவும் ஒரு விஷயமாக ஆகிவிட்டது. மகனும் தொடர்ந்து செய்ய முயற்சி செய்து வருகிறான். மகள் செய்ய முயன்று வருகிறாள் என்று சொல்லலாம் !

சென்ற வருடம் அக்டோபர் மாதம் அதுவரை வெள்ளிமலை யோகா வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு வருட பயிற்சி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, 40 வகுப்புகள் வரை இருக்கும் நான் ஏற்கனவே செய்து வரும் பயிற்சிகளை செம்மைபடுத்தி, அவரவர்களுக்கான ஆசனங்களை கண்டுபிடித்து அந்த ஆசனங்களின் அடுத்த நிலைகளை பயிற்சி செய்வது தான் இந்த பாடத்திட்டத்தின் குறிக்கோள்தொடர்ந்து செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள் வருடம் முழுவதும் வரப்போகும் வார வகுப்புகளில் தொடர்ந்து கலந்து கொள்ள இயலாதவர்கள் தயவு செய்து கலந்துகொள்ள வேண்டாம், பழைய வகுப்பில் கற்றுக்கொண்டதை தொடர்ந்து செய்யுங்கள், இது அடுத்த நிலைக்கான பயிற்சி என்று மென்மையாகவும் அதே சமயம் வருடம் முழுவது நீளும் பயிற்சியின் தீவிரத்தன்மையை அறிமுக வகுப்பில் சுட்டிக்காட்டி அடுத்த கட்ட பயிற்சிகளை ஆரம்பித்தார்

எங்களை இரண்டு குழுவாக (ஒரு குழுவில் 25 பயிற்சியாளர்கள்) சனி மற்றும் ஞாயிறு பிரித்து இணைய வழியாக தொடர்ந்து பயிற்சி செய்து வந்தோம். இந்த ஒரு வருட பயிற்சி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்டது ஒரு மகிழ்வான, ஆவலுடன் எதிர்கொள்ளும் நேரம், குருஜிக்கு வெள்ளிமலை வகுப்பு அல்லது வேறு வகுப்புகளோ இல்லாமல் இருந்தால் ஏமாற்றமாக இருக்கும். முதலில் ஏற்கனவே செய்த பயிற்சிகளை செய்ய சொல்லி அவற்றை செம்மைபடுத்தினார், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதே ஆசன, பிராணாயாமா, பிரத்யாஹார பயிற்சிகளின் வேறு வடிவங்களையும், மேலும் சில புதிய பயிற்சிகளையும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்தி வந்தார். ஒவ்வொரு வாரமும் முதல் 20-30 நிமிடங்களை யோகம் சம்பந்தமானவற்றை சிறிய உரை மூலம் அறிமுகப்படுத்துவார், மரபார்ந்த பயிற்சியில் உள்ள கருத்துக்களை சொல்லி அவை எப்படி ஒரு முழுமையான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நமது முழுமையான உடல், மனம் உணர்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது என்று சொல்வார். நமது வகை என்ன (சுயம் அதிகமுள்ளவர், உணர்ச்சி பூர்வமானவர், மனம் சார்ந்தவர், அறிவு பூர்வமானவர்) எந்த வகையான யோகம் (கர்மா, பக்தி, ராஜ, ஞான) செய்யலாம், எல்லோரும் எல்லா யோகமும் கொஞ்சம் கொஞ்சம் செய்யலாம், செய்ய வேண்டிய ஐந்து வகையான யக்ஜம் (இயற்கை, சக மனிதர், மூதாதையர், குரு, கடவுள்) என்று அந்த உரைகள் மூலம் கற்றுகொண்டதும் ஏராளம். நேரடி வகுப்பு ஒன்று சென்னையில் ஒருங்கிணைத்து அது வரை கற்ற ஆசனங்களை, பயிற்சிகளை செய்ய சொல்லி மேலும் செம்மைபடுத்தினார். யோகாவின் முக்கிய குறிக்கோள் நம்மை விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றுவது என்று புரிந்துகொள்கிறேன். அதன் பிறகு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அதுவே வழிகாட்டும்.

இதற்கிடையில் அவருடன் கும்பமேளா, காசி, கன்யாகுமரி, மதுரை, சத்தர்ஷன் என்று பயணங்களில் கற்று உணர்ந்தவையும் பல. குறிப்பாக கும்பமேளா காசி பயணம் மறக்கமுடியாத ஆன்மீக பயணமாக அமைந்தது, வியாசா மாஸ்டரின் அருகாமையும், சில நிமிடங்கள் உரையாடலும் உற்சாகமளித்தன. கன்யாகுமரி யோகா கருத்தரங்கம், மதுரையில் பாரத யாத்திரை வழியாக சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி, பீகார் யோகா பள்ளி, ரிக்கியா மையம், சுவாமி சத்யானந்த சரஸ்வதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி பற்றி மேலும் அறிந்து பிரமித்தது கொண்டே இருக்கிறேன். ஒரு மனிதனாக பிறந்தவர் ஆன்மீகமாக அடையவேண்டியது என்னவோ அதை அவர்களே அறியாமல் ஆரம்ப பாடத்திடத்திலே சிறிய வகையில் அறிமுகப்படுத்தி, தொடர்ந்து அதை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி, ஒரு யோக சாதகனாக மாற்றுவது வரை திட்டமிட்டு, இந்த பயிற்சி திட்டங்களை பல ஆண்டுகள் பயிற்றுவித்து, செம்மைப்படுத்தி, அதற்கான ஆசிரியர்களை உருவாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளும்பொழுது அவர்களின் கருணையை எண்ணி மனம் நெக்குருவதை தவிர என்ன சொல்வது? சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்களின் ஆளுமையையும், அவருடைய குருவான சுவாமி சிவானந்தரின் கட்டளையை நிறைவேற்றி இன்று உலகம் முழுவதும் யோகாவை அறிமுகப்படுத்தியதில் அவருடைய பங்கை நினைக்கும் பொழுது பெரும் பிரமிப்பும், அவருடைய மாணவர் சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி அதை பின்பற்றி நடத்தி வரும் முறையும், அவருடைய மாணவரான நம்முடைய குருஜி வரை தொடர்ந்து வருவதில் பங்கு  கொண்டு அதன் பலன்களை அடைவதில் நன்றி உணர்வும் பெருமிதமும் உண்டாகிறது. நாமும் அது போல நாம் பெற்ற பயனை முடிந்தவரை மற்றவர்களுக்கு கடத்த வேண்டும் என்றும் தோன்றும். பீகார் யோகா பள்ளியின் சில ஆங்கில யோகா புத்தங்ககளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதிலும் குழுவாக ஈடுபட்டுள்ளோம்.

குழுவில் நாங்கள் சில பயிற்சிகளின் விரிவை படித்து இதையெல்லாம் ஏன் அறிமுகம் செய்வதில்லை என்று கேட்டதற்கு யாருக்கு தேவையோ அவர்கள் தேடி வருவார்கள், அவர்கள் அறிந்து கொண்டால் போதும் என்று குருஜி பதிலளிப்பார். பொதுவாக பிகார் யோக பள்ளி அறிவார்ந்த மூளை விளையாட்டுகளை, புத்தகங்களை ஊக்குவிப்பதில்லை, நம்பாதே, சரியான ஆசிரியரின் கவனிப்பில் பயிற்சியை முதலில் செய், நீயே உணர்ந்து பார் என்றே சொல்கிறது. என்னைப்போன்று மற்றவைகளையும் (அரைகுறையாக!) படித்துவிட்டு கேள்விகள் கேட்பது, அதிகப்பிரசங்கி தானமாக சொல்லிதாரத பயிற்சிகளை செய்வது பற்றி  கேட்கும்பொழுது குருஜி கடிந்துகொள்வதும் உண்டு

வரும் அக்டோபர் மாதம் எங்களில் சிலரை ஒரு வாரத்திற்கு ஜார்கண்டில் உள்ள ரிக்கியா ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல இருக்கிறார், முங்கேர் ஆஸ்ரமத்திற்கு பிறகு அதை சுவாமி சத்யானந்தர் சேவைக்கான மையமாக உருவாக்கியுள்ளார், அதை சுவாமி சத்யசங்கனாந்தா சரஸ்வதி நிர்வகிக்கிறார். அந்த ஆஸ்ரமம் பற்றி குருஜி கும்பமேளாவில் சொன்னது என்றும் நினைவில் இருக்கும்

இந்த  மாதம் (செப்டம்பர்) 6 அன்று 40 வகுப்புகள் முடிந்து கடைசியாக ஒரு வகுப்பு உண்டு என்று சொன்னர். அடுத்த ஒரு வருட பயிற்சியை அக்டோபர் மாதம் ஆரம்பிக்க இருக்கிறார். இது எங்களுக்கா என்று கேட்டதற்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இது வரை கற்றுக்கொண்டதை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், இது வெள்ளிமலையில் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு என்று சொல்லிவிட்டார்

பிரியத்துடன்

திரு

கோவை 

முந்தைய கட்டுரைவாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியா
அடுத்த கட்டுரைஉறவின் எல்லை. ஒரு கேள்வி.