வாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியா

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு,

கடந்த வாரம் (செப்டம்பர் 5,6,7 அன்று) நடந்த வாசிப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இலக்கிய வாசிப்பு இருந்தால் கூட அபுனைவு வாசிப்பு என்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்துள்ளது. நண்பர் ராஜேஷ் மூலம் இந்த வகுப்பை பற்றிய முன் அறிவிப்பு ஏற்கனவே தெரிந்திருந்தேன். இருப்பினும் வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த தத்துவ வகுப்பு முதல் நிலை அறிவிக்கப்படலாம் என்ற எண்ணம், இந்த வகுப்பிற்கு கலந்து கொள்ளும் மன நிலையை தள்ளி போட வைத்தது. இறுதியாக தளத்தில் இந்த வகுப்பிற்கான அறிவிப்பு வந்த உடன் தத்துவ வகுப்பு வந்தால் அதிலும் பங்கு கொள்வோம் வாசிப்பு வகுப்பிற்கும் போவோம் என்ற என் கணவரின் உந்துதலுடனே வகுப்பிற்கு பதிவு செய்தேன். என் கணவர் (பொன்ராஜ்) மற்றும் என் மகன் (பொன் முகேஷ்) மூவருமே வகுப்பில் கலந்து கொண்டோம்

இதுவரை சில அபுனைவு புத்தகங்கள் வாசித்து இருந்தாலும் சமீபத்தில் வாசித்த Guns, germs and steel, இன்றைய காந்தி புத்தகமும் அதிக நேரம் எடுத்துக்கொண்ட புத்தகங்கள். இன்றைய காந்தி புத்தகம் வாசிக்கும் பொழுது எனக்கு தெரிந்த முறையில் குறிப்பு எடுத்து வைத்தே வாசித்தேன். இருந்தாலும் முழுவதுமாக தொகுத்துக் கொள்ள முடிய வில்லைஅதனாலேயே இந்த வகுப்பிற்கு வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது

வெள்ளிகாலை முதல் வகுப்பிலேயே, வாசிப்பு என்பது கண் மற்றும் மூளையின் ஒத்த செயாலாகும்போதே வாசிப்பு முழுமையை அடையும் என்றதில் இருந்தே வாசிப்பில் செய்யும் தவறுகள் விளங்க ஆரம்பித்தது. அடுத்தாக தொடர்ந்து வாசிப்பில் இருப்பதற்கான விதிமுறைகள், நான் எவ்வாறு வாசிக்கிறேன், எங்கே தவறு செய்கிறேன் அதை எவ்வாறு திருத்தி கொள்ள வேண்டும் என்ற வழிகளை எனக்கு விளக்கியது. ஒரு கடினமான வாசிப்புடன் ஒரு எளிதான வாசிப்பு எவ்வாறு நம் கடினமான வாசிப்பை தடை இல்லாமல் செலுத்தும் என்பதும், மற்றும் ஒத்த இலக்கிய தொகுப்புகள் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய தங்கள் விளக்கமும் ஒரு பெரிய திறப்பாகவே இருந்தது.

அடுத்தாக சனி இரவு வரை, கட்டுரைகளுக்கு சுருக்கம் எழுதுவதற்கான பயிற்சி. மொத்தமாக ஒரு எட்டு கட்டுரைகள் வரை பயிற்சி எடுத்து கொண்டோம். ஒவ்வொரு கட்டுரையிலும் எவ்வாறு edges கண்டுபிடிப்பது, வகைப்படுத்தி தலைப்பு கொடுப்பது சுருக்கி எழுதுவது என்ற பயிற்சி. இனி எப்பொழுது ஒரு கட்டுரையை வாசித்தாலும் இந்த பழக்கம் வந்து விடும்,  அவ்வளவு செறிவான வகுப்பு. 

ஒவ்வொரு கட்டுரையை நாங்கள் செய்தாலும் தாங்களும் எங்களுக்காக மறுமுறை செய்து அதை விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என் தவறுகளை திருத்தி கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. என்னுடைய சில கட்டுரை சுருக்கம் தாங்கள் அளித்த சுருக்கத்துடன் ஒத்து போன பொழுது அவ்வளவு உவகை மனதிற்குள், சிறு குழந்தைபோல

அடுத்த நாள் புனைவு வாசிப்பு பற்றிய வகுப்பு சிறுகதையின் வடிவம், நாவலின் வடிவம், அணிகளின் விளக்கம் அதில் இருந்து கவிதையின் படிமம் பற்றிய விளக்கம் எனக்கு ஒரு பெரிய திறப்பாகவே அமைந்தது. கவிதையின் படிமத்தையே முதலில் பார்க்க வேண்டும் என்றும், எவ்வாறு கவி உருவகம் நீள் கவிதைகளுக்குள் வரும் என்பதன் விளக்கமும் என் கவிதை வாசிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

வகுப்பில் எவ்வாறு ஒரு நாவல் நம்மை நிலை குலைய வைத்து நம்மை மீண்டும் கட்ட அமைக்க உதவும் என்று நீங்கள், தங்களை கட்டமைத்துக்கொள்ள war and peace எவ்வாறு உதவியது என்று விளக்கினீர்கள். என் மனதிற்குள் ஓடிய புத்தகம் விஷ்ணுபுரம் மட்டுமே. என்னை, என் நம்பிக்கையின் மீது கேள்வி எழுப்பி என்னை உடைத்து மீண்டும் கட்ட அமைக்க உதவியது, என்றும் உதவும் வாசிப்பு விஷ்ணுபுரம் மட்டுமே.

இவ்வாறாக ஒவ்வொரு விளக்கத்திலும் என்னை எவ்வாறு இன்னும் சீராக்கிக் கொள்ள வேண்டும் என்ற முறையில் இந்த வகுப்பு எனக்கு கிடைத்த வரப்பிரசாதமே. எனக்கு மட்டும் அல்லாமல் என் மகன் Pon Mukesh க்கும் அவனின் academic வகையிலும் மிக உதவியாக இந்த வகுப்பு அமைந்தது. அவன் எவ்வாறு வகுப்பில் கவனிப்பான் என்ற சந்தேகம் எப்போதும் உண்டு எனக்கு. என்னை விட மிக நேர்த்தியான கட்டுரை சுருக்கங்களை அவன் எழுதி இருந்தது மிகுந்த சந்தோஷம் அளித்தது எனக்கு

தாங்கள்  சொல்வது போல் தேடி தேடி சென்று கற்கும் இன்பத்திற்கு ஈடு எங்கும் கிடைப்பதில்லை வெள்ளிமலை வகுப்புகளை தவிர. இவை அனைத்திற்கும் காரணமான தங்களுக்கு மனம் கனிந்த நன்றிகள்

இந்த வகுப்பிற்க்காக கூடுதல் முயற்சி எடுத்து இந்த வகுப்பு நடப்பதற்கு காரணமாக அமைந்த நண்பர் Rajesh ற்கு நன்றிகள். மூன்று நாள்களும் நல்ல உணவு அளித்த சரஸ்வதி அம்மாவிற்கும், என்றும் னைத்து வசதிகளையும் பார்த்து கொள்ளும் மணி அண்ணாவிற்கும் நன்றிகள்

அன்புடன் 

ஈஸ்வரி

முந்தைய கட்டுரைதொல்பாறைகளின் தொடுகை
அடுத்த கட்டுரையோகம், ஓராண்டுப்பயணம் – திரு