உறவின் எல்லை. ஒரு கேள்வி.

ரவி மோகனின் பிரோ கோட். ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ

நீங்கள் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலை வாசித்தேன்.

அந்தக் கேள்வியை கேட்டவன் நான் என்று வைத்துக்கொள்வோம். என் பிரச்சினை அது என்று வைத்துக்கொள்வோம். அந்த பெண்ணை நான் விவாகரத்து செய்ய நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? அந்த மனிதருக்கு ஏன் நீங்கள் அந்த ஆலோசனையைச் சொல்லவில்லை?

அன்புள்ள க,

முதல் கேள்வி நீங்கள் யார் என்பதே.

அந்த கடிதத்தை எழுதிய ‘அ’ தன்னை கூர்ந்த ரசனை, அறிவுத்தேடல், அகப்பயணம் கொண்ட ஒருவராகச் சொல்லவில்லை. அவர் சாமானிய தளத்தைவிட கொஞ்சம் மேலான ரசனை கொண்டவர். அவர் மனைவி சாமானிய ரசனை கொண்டவர். இவ்வளவுதான் வேறுபாடு. அதன்பொருட்டு உறவை பிரியலாமா என்ன? பிரிந்தால் அவருக்கு உடனே அந்த ரசனையை விட மனைவியும் குடும்பமும் பெரிதாக தோன்ற ஆரம்பித்துவிடும். வாழ்க்கை துயரம் மிக்கதாக ஆகிவிடும். அவருக்கு உண்மையில் அந்த மனைவி அளிக்கும் குடும்பச்சூழலும் காமமும் எல்லாம் முக்கியம். ஆனால் அதன்பொருட்டு ரசனையை சமரசம் செய்துகொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது, அவ்வளவுதான். அது பெரிய பிரச்சினை அல்ல. ஒருவர் அப்படி ரசனையை இழந்து சாமானியராக ஆனாலும் பெரிய இழப்பு இல்லை.

ஆனால் ஓர் அறிவியக்கவாதி, அகப்பயணம் கொண்டவர், உண்மையான சாதனைகளைச் செய்யும் ஆற்றலும் வாய்ப்பும் கொண்டவர் அவ்வாறு அழிந்தால் அது இழப்பு. அவருக்கும் சமூகத்துக்கும். ஒருவரின் அறிவுச்செயல்பாடும் அகப்பயணமும்தான் அவர். அதை எந்நிலையிலும் இழக்கலாகாது, இழப்பது சாவுக்கு நிகர்தான். அத்தகைய ஒருவர் நீங்கள் என்றால் அந்த மனைவியிடம் தெளிவாக நீங்கள் இருக்கும் நிலையை கூறிப்புரியவைக்க முயலவேண்டும். திட்டவட்டமாக உங்கள் உறுதியை தெரிவிக்கவேண்டும். பலசமயம் ஆண்களுக்கு அந்த தெளிவும் உறுதியும் இருக்காது. ஆகவே அவர்கள் மென்று முழுங்குவார்கள். அந்த ஊசலாட்டத்தையே மனைவியர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உறுதியான ஒருவரை எவரும் தன்னை நோக்கி இழுக்க முடியாது. நான் சமரசம் செய்துகொள்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அதன் பொருள் நான் உறுதியாக இல்லை என்பதே.

அவ்வாறு உறுதியாக உரைத்தபின்னரும் அப்பெண் அப்படித்தான் இருப்பார் என்றால் பிரிவதுதான் ஒரே வழி. ஏனென்றால் ஆணோ பென்ணோ ஒருவர் தன் ஆன்மாவை இழந்து எதையும் அடைவதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரையோகம், ஓராண்டுப்பயணம் – திரு
அடுத்த கட்டுரைஎன் போத்தலில் சில்லரைகள் நிரம்ப ஆரம்பித்திருக்கின்றன!