அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“இந்த தடவை check up ல் Insulin எடுக்கணும்னு” செல்லிவிட்டதாக சொன்ன அம்மா உடனே ” நீங்க எத்தன மாத்திரை வேண்னாலும் குடுங்க டாக்டர் ஆனா Insulin மட்டும் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றார்.
இந்தியாவில் இதுதான் பெரும்பாலான சக்கரை நோயாளிகளின் நிலைப்பாடு. ஆனால் நவீன மருத்துவ முகாமில் டாக்டர் மாரிராஜ் “சக்கரை நோயின் ஆரம்பத்திலேயே Insulin எடுத்து கொள்வதால் கணையத்தின் வேலையை பெருமளவு குறைத்து தொடர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டால் சக்கரை வியாதியை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று கூறினார். ஆனால் இதை நம் ஊரில் டாக்டர்கள் சொன்னால் யார் கேட்பார்கள். உடனே “என்ன இந்த டாக்டர் ஆரம்பத்திலேயே heavy dose எடுத்துக்க சொல்கிறார் ” என்று வசைபாட ஆரம்பித்து விடுவார்கள்.
நவீன மருத்துவம், அறிமுக முகாம் முதல் அமர்வில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோ மருத்துவ முறைகளை பற்றிய அறிமுகத்தோடு துவங்கியது.
நவீன மருத்துவ முறையில் வெவ்வேறு நாடுகளின் பங்களிப்பை காலவரிசையோடு விளக்கினார் டாக்டர். சீன மருத்துவம் தான் உலகின் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட முதல் மருத்துவ முறை. எகிப்தில் பண்டைய காலத்திலேயே specialist கள் இருந்தனர். கிரேக்க மருத்துவம் தகவல்களை தொகுத்தலின் அடிப்படையிலானது. ரோமானிய மருத்துவ முறை தனிதனியாக பிரித்து வகைபடுத்தலை முறைமையாக கொண்டது. இவ்வாறு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் மருத்துவ முறைமைகளை அவரவர் கலாச்சார பண்பாட்டு தத்துவ முறைமைகளோடு தொடர்பு படுத்தி விளக்கினார். நவீன மருத்துவ முறை எவ்வாறு தரவுகளின் அடிப்படையில் புறவயமாக தொகுக்க பட்டுள்ளது என்பதையும் கூறினார்.
உடற்கூறியலில் அமர்வில் உடல் உறுப்புக்கள் மற்றும் அதன் கட்டுமான மூலக்கூறுகளான புரதம் கொழுப்பு குளுகோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் பற்றி விரிவாக தொகுத்துரைத்தார்.
இரண்டாம் நாள் Pathology எனப்படும் நோயியல் வகுப்பில் 8 நோயறியும் முறைமைகளை பற்றி விளக்கினார். இந்த அமர்வில் சில நோய்களை உதாரணத்திற்கு எடுத்து கொண்டு எங்களை அந்நோயின் வகைமையை கண்டறிய பயிற்றுவித்தார். அநேகமாக அனைவரும் சரியாக நோயின் வகைமையை கூறி ஆசிரியரை வியப்படைய செய்தோம்.
பிறகு நோய் உண்டாக்கும் கிருமிகள் பற்றியும் அவை எவ்வாறு மனித உடலை தாக்குகின்றன என்றும் அதற்கான மருந்துகள் பற்றியும் சுவாரஸ்யமாக விளக்கினார்.
சிலர் second opinion பற்றி கேட்டு, ஒவ்வொரு டாக்டரும் வேறு வேறு விதமாக சொல்வதாக சொன்னதற்கு ” நமது கலாச்சாரம் நவீன அறிவியலுக்கு எதிரானது, நம்பிக்கை சார்ந்தது என்றும் அவரவர் நம்பும் பதில் கிடைக்கும் வரை opinion கேட்டு கொண்டே செல்வார்கள் என்றார். ஒரு காந்திய வாதியாக தான் standardization க்கு எதிரானவர் என்றும், அது வாய்ப்புகளையும் விவாதத்தையும் குறைப்பதாக கூறினார்.
இறுதி நாள் உடல்நலம் பேணுதல் பற்றிய அமர்வில் ஆரோக்யமான உணவு பழக்கம், உடற்பயிற்சி முறைமைகளை பற்றி விரிவாக கூறினார்.
விவாதங்கள் எல்லை மீறும் போது கண்டிப்பான குரலில் ” உங்கள் டாக்டரின் அறிவுரை படி நடந்து கொள்ளுங்கள்” என்றார். இறுதியாக டாக்டர்களை நம்புங்கள் “It is the faith that cures” என்று முடித்தார்.
டாக்டர் மாரிராஜ் அவர்களை விஷ்ணுபுரம் சென்னை வட்டம் வெண்முரசு விவாத கூட்டத்திலிருந்து அறிமுகம். மருத்துவம் பற்றிய உரையாடலிலும் ஆங்காங்கே வெண்முரசிலிருந்து மேற்கோள்களை கூற தவறவில்லை.
நவீன மருத்துவம் குறித்தான கல்வியை சிறப்பாக அளித்து சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவாக்கிய டாக்டர் மாரிராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மலை தங்குமிடத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த அந்தியூர் மணி அண்ணன், நல்ல உணவளித்த பாட்டி , தாத்தாவுக்கு அன்பும், வணக்கங்களும். இப்படி ஒரு சிறந்த கல்வி கற்ககும் வாய்ப்பளித்த ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி அன்பு வணக்கங்கள்.
அன்புடன்
முத்து
பம்மல்.