சாக்லேட்டும் மருத்துவமும், கடிதம்

வணக்கம் ஜெ

 ‘உடலை அறிந்து கொள்ளுதல் சிக்கலைத்  தீர்ப்பதற்கான பாதைஎன்று கூறி யோகா குரு சௌந்தர் நவீன மருத்துவ அறிமுக வகுப்பை பரிந்துரைத்திருந்தார். குரு சௌந்தர் அவர்கள் கற்றுக்கொடுத்த யோகா பயிற்சிகள் பலனளித்து வருகின்றன. ஆகவே அவர் பரிந்துரைகளை தவற விடுவதாய் இல்லை. ஏப்ரல் 5,6,7 தேதிகளில் நித்யவனத்தில் நடந்த முதல் நவீன மருத்துவ அறிமுக முகாமில் பங்குபெற்றேன்.

மரு. மாரிராஜ் மருத்துவத்தின் வரலாற்றிலிருந்து வகுப்பை தொடங்கினார். நம்பிக்கைகளின் அடிப்படையிலான பண்டைய கலாச்சாரங்களின் மருத்துவ முறைகள் முதல் கேள்விகளின் அடிப்படையிலான நவீன மருத்துவத்தின் பிறப்பு வரையுள்ள பயணத்தை காணும்போதே நவீன மருத்துவத்தின் தேவை தெளிவாகியது. உடலைப்பற்றி விளக்க ஆரம்பிக்கையில் உடலின் அடிப்படையான ஒற்றை செல்லிலிருந்து தொடங்கி உடலின் அனைத்து மண்டலங்களையும் விளக்கினார். பல இடங்களில் உடலின் இயக்கத்தை புரிந்து கொள்வதற்காக வேதியல், இயற்பியல் கருத்துக்களும் விளக்கப்பட்டன. உடலின் கட்டமைப்பை புரிந்து கொள்ள கார்பனின் இணைத்திரனிலிருந்து ஆரம்பிக்கிறார். இத்தனை ஆழமான வகுப்புகளை மூன்று நாட்களுக்குள் அளித்தது வியப்பாக இருக்கிறது.

வகுப்பு இத்தனை அருமையாக அமைந்ததற்கு மாணவர்களும் காரணம் என்று தான் சொல்ல வேண்டும். நவீன மருத்துவத்திற்கு இது முதல் வகுப்பு என்பதால் இது தொடர்பாக பணி புரிபவர்கள், கற்றவர்கள், பேரார்வம் உடையவர்கள் என போட்டி போட்டு பங்கு பெற்றதால் ஒரு ரசிகர் மன்ற காட்சி போல அமைந்தது. வந்த மாணவர்களில் சிலர்சித்த மருத்துவர், உயிரி தொழில்நுட்பம் கற்றவர், மருந்தாளர், சோதனைக்கூடங்களை அமைப்பவர், அறிவியல் ஆர்வலர், பள்ளி ஆசிரியர். இவர்களிடமிருந்து எழுந்த கேள்விகளும் பதில்களும் என்னை ஆச்சரியமடைய செய்தன. சில நேரங்களில் பொதுவான கேள்விகளால் வகுப்பு விலகி செல்லும் போது நம் ரசிகர் மன்றம் கறாராக இருந்து வகுப்பை மைய்யப்பாதைக்கு திருப்பியது.

மரு.மாரிராஜ் ஆரம்பம் முதலே கேள்வி பதில்களுடன் கூடிய ஒரு உயிர்ப்புமிக்க வகுப்பாகவே வழிநடத்தி சென்றார். கேள்விகளை குறைத்துக்கொள்ளலாமா என மாணவர்களே கேட்டபோது கூட அவர் கேள்விகளை மேலும் வரவேற்பதாகவே பதிலளித்தார். அதே நேரம் வகுப்புக்கு அப்பாற்பட்ட கேள்விகளை உரிய காரணத்தோடு தவிர்க்கவும் செய்தார். இந்த வகுப்பு புரிதலுக்கான வகுப்பு மட்டுமே; சுய மருத்துவத்துக்கானது அல்ல என்பதில் மிக கவனமாக இருந்தார். பிரம்பும் கையுமாக வகுப்புக்கு வரும் வாத்தியாரைத் தான் பார்த்திருக்கிறோம். இவர் ஒரு கூடை சாக்லேட்டுடன் வருகிறார். சிறந்த பதில்கள், கேள்விகளுக்கு சாக்லேட் பரிசு. என் சக மாணவர்கள் சாக்லேட் மழையில் நனைந்தனர். அதில் ஒன்று கிடைத்திருந்தால் கூட பெருமையோடு என் குழந்தைகளுக்கு எடுத்து வந்திருப்பேன். (தருமி பாணியில்) எனக்கில்லை.. எனக்கில்லை. உடலைப்பற்றிய அடிப்படைகளை புரிந்து கொண்டதும், நவீன மருத்துவ துரை வல்லுனர்களின் மாபெரும் பங்களிப்புகளை நன்றியோடு உணர்ந்து கொண்டதும், இப்படி ஒரு அறிவுக்கூட்டத்தோடு தோளுரசியதுமே எனக்கான சாக்லேட்கள்.

மரு. மாரிராஜ் உயிர்களின் பரிணாம வளர்ச்சி கடலில் இருந்து தொடங்கியதை விளக்கும்போதுகடலில் மிதக்கும் ஒற்றை செல் தன்னுள் ஒரு கடலை வைத்திருக்கிறதுஎன்றார். இது புரிதலுக்கு ஒரு திறப்பாக இருந்தது. இரவு நேர உரையாடலில் அந்த வாக்கியம் முன்னரே தயாரிக்கப்பட்ட ஒன்று அல்ல, அந்த நேரத்தில் தோன்றியது என்றார். தன்னறம் உணர்ந்தவரிடம் கற்றது மகிழ்ச்சி.

நன்றி

பாபநாச கார்த்திக்  

முந்தைய கட்டுரைகுருகுலமும் கல்வியும்
அடுத்த கட்டுரைமருத்துவமுகாம், கடிதம்