நோயுறும் குழந்தைகள்

அன்புள்ள ஜெயமோகன்,

பறவை பார்த்தல் நிகழ்வின்போது ஒரு குழந்தைக்குக் காய்ச்சல் வந்ததைப் பற்றி எழுதப்பட்ட கடிதத்தைக் கண்டேன். இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்றைய குழந்தைகள் உடற்பயிற்சி, பயணம் என்று எதற்குச் சென்றாலும் நோய்வாய்ப்படுகிறார்கள். அதற்குக் காரணம், அவர்களின் உடல் இயற்கையான சூழல்களை எதிர்கொண்டு வளரும் வாய்ப்பு இல்லாமல் போனதுதான் என்று நினைக்கிறேன்.

வீடு, பள்ளி என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள், பிராய்லர் கோழிகளைப் போலப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படுகிறார்கள். நான் ஓர் ஆசிரியன். ஒரு குழந்தைக்குக் கேம்பிங்கின்போது காய்ச்சல் வந்துவிட்டால், இனி அதற்குக் காய்ச்சல் வந்துவிடும் என்று சொல்லி, அந்தக் குழந்தையை அதற்குப் பிறகு வீட்டுக்குள்ளேயே வைத்துவிடுவார்கள். வெளியுலகை எதிர்கொள்ளும் வாய்ப்பையே அதற்குத் தருவதில்லை.

வெளிச்சம் குறைவான சூழலில் வீட்டுக்குள் வளரும் செடிகளைப் போல நம் குழந்தைகளை வளர்க்கிறார்கள். இயற்கையின் வெயில், மழை, காற்று, மண் என எதனுடனும் நேரடியாகப் பழகாமல் வளரும் குழந்தைகள், வாழ்க்கையின் இயல்பான சவால்களைக்கூட எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிடுவார்களோ என்று தோன்றுகிறது.

குழந்தைகள் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் பெற்றோருக்கு இருக்கும் அக்கறை புரிகிறது. ஆனால், அவர்களை எல்லா அசௌகரியங்களிலிருந்தும் பாதுகாத்து வளர்ப்பதன் மூலம், இயற்கையோடும் வாழ்க்கையோடும் அவர்கள் கொள்ள வேண்டிய உறவையே நாம் துண்டித்துவிடுகிறோம்.

ஜெயராஜ்

முந்தைய கட்டுரைஇயற்கையும் குழந்தைகளும், கடிதம்