கற்றலும் , அதில் முன்னகர்தலும் , முழுமைகொள்தலும் நம் மரபில், நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியரிடமிருந்து அறிவெனப்பெருவது கால்பங்கு .பெற்ற அறிவை தன்னில் நிறைத்து தெளிவை அடைவது கால்பங்கு.’சகா‘ என அமைந்த அதே கல்வித் தோழனுடன் உரையாடி அடைவது கால்பங்கு. மீதியிக்கும் கால்பங்கோ காலத்தால், ஞானமென கனிவது.
கடந்த 14 மாத யோக முகாம்களின் மூலம் அடைந்த நண்பர்களும் , அவர்களுடைய தொடர்ந்த மற்றும் தீவிர சாதனாவும் மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பயிற்சிகளையும், யோகம் சார்ந்த வாசிப்பையும் விரிவாகியுள்ளனர். அதை ஒவ்வொருநாளும் யாராவது ஒரு நண்பர் அரைமணி நேரமாவது தொலைபேசியில் அழைத்து பேசிவிடுவார். மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகளின் மூலம் தங்களுடைய பயிற்சி பற்றிய தன்னிலை விளக்கத்தையும் , அது சார்ந்த கேள்விகளையும் கேட்கும் நண்பர்களும் அநேகம். இது நாம் எதிர்பார்க்காத நிறைவான ஒரு பயணம்.
இதில், பாதிபேர் அடிப்படை தயக்கத்தினாலும், உடல் ,மனம் ஒத்துழையாமையினாலும் , வேறு வேறு காரணங்களாலும் பயிற்சிகளை சரிவர தொடர முடியாமல் இருப்பதையும் அவர்களிடமிருந்து வரும் செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
மேலும், பயிற்சிகளை செய்துகொண்டிருப்பவர்கள், சில சந்தேகங்களுடனும், தயக்கத்துடனும், நம்மை தொடர்பு கொள்ளாமல் இருப்பதையும் கவனிக்க முடிகிறது.
ஆகவே நமது ”மே மாத யோக முகாம்‘ ஒரு மறு கூடுகையாக இருக்கட்டும் என திட்டமிட்டுள்ளோம்.
இதில்,
1} ஏற்கனவே கலந்து கொண்ட அனைவரும் மீண்டும் கலந்து கொண்டு தங்களுடைய பயிற்சிகளை மேலும் கூர் தீட்டிக்கொள்ளலாம்.
2} பயிற்சிகளை இடையில் நிறுத்திவிட்டவர்கள் , தங்களுக்கான குறைந்தபட்ச பயிற்சி அட்டவணை ஒன்றை பெற்றுக்கொள்ளலாம். { YOGA SADHANA CAPSULE}
3}மீண்டும் அனைத்து பயிற்சிகளும் அதன் செய்முறை விளக்கங்களும் தரப்படும்.
4} தேவைப்படின் புதிதாக சில பயிற்சிகளை அறிமுகம் செய்யலாம்.
5} தொடர் பயிற்சியாளர்கள் தங்களுடைய அனுபவ பகிர்தல்களை முன்வைக்க தனியாக சில அமர்வுகள் அமைக்கப்படும்.
6}பிரத்யாஹாரம் , தியானம் போன்ற பயிற்சிகளில் உள்ள நடைமுறை சவால்களை எதிர்கொள்ள மாற்று முறைமைகள் வழங்கப்படும்.
7} மரபார்ந்த யோகநூல்களின் அறிமுகமும் , கூட்டு வாசிப்பும் , அதன்மீது கலந்துரையாடலும் நிகழும்.
யோகமரபில் ‘ காலநிர்ணயம் ‘ என்று சொல்லப்படும் , ஒரு சாதகனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன நிகழ்கிறது என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. முதல் ஒரு வருடம் முதல் மூன்றுவருடம் ‘சாதனா‘ செய்தல் இன்னின்ன மாற்றங்கள் நிகழும் , பின்னர் மூன்று வருடம், ஐந்து வருடம் , ஏழு வருடம் , பன்னிரண்டு வருடம், என துல்லியமான காலவரையரையும் , பலனும், பாதையும் வகுக்கப்பட்டுள்ளது. இவற்றை விரிவாக விளங்கிக்கொள்ள இவ்வகை சம்மேளனங்கள் பயன்பட்டுள்ளன. இதை ஒருவகையில் ‘யோகமரபின் கும்பமேளா ‘ எனலாம்.
அப்படி ஒரு முயற்சியாகத்தான் இதை நாம் முன்னெடுக்கிறோம், இந்த கூடுகையில் இதுவரை முகாம்களில் கலந்து கொண்ட அனைவரும் வரட்டும், மேலே சொன்னது போல நான்கு நிலை கற்றல் அமையட்டும்.
அன்புடன்
சௌந்தர்