ஒரு ஆசிரியரின் உண்மையான விஸ்வரூப தரிசனம் இந்த வகுப்பில் கிடைக்கப் பெற்றோம் எல்லோரும்.முற்றிலும் வெவ்வேறு மனநிலையும் வயதும் கொண்ட மாணவர்கள் அந்த ஆசிரியரின் சொற்களால் கட்டி போடப்பட்டு இருந்தோம்.
வாசிப்பில் கற்றலில் ஒரு தேக்க நிலையில் இருந்த எனக்கு ஒரு பாய்ச்சல் கொண்ட புலியின் அருகமர்ந்து பாடம் படித்து கொள்ளும் வாய்ப்பு. தன் துறை சார்ந்து ஆசிரியர் மாரிராஜ் அவர்களுக்கு நிறை அறிவும் அனுபவமும் இருக்கின்றது. நவீன மருத்துவத்தின் வரலாற்றில் தொடங்கி தனி மனித நலனில் முடித்தார்.
என் ஒருவருக்கு மட்டுமே அந்த வகுப்பில் உடல் திருகி கொண்டே இருந்தது என்று நினைக்கிறேன்,சமனிலையில் அமர முடியவில்லை, வெகு நாள் கவனக்குவிப்புடன் தொடர்ந்து அறிவு செயல்பாட்டில் ஈடுபடாததன் விளைவு என்று நினைக்கிறேன்.தொடர் வாசிப்பினை துவங்க வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டேன்.
வகுப்பில் கவனம் குவித்து குறிப்பு எடுக்கத் துவங்கியவுடன் மெது மெதுவாக சோர்வு நீங்கி உற்சாகம் தொற்றிக்கொண்டது.இந்த ஆசிரியர் மாணவர்களை குதூகலப்படுத்த கடின கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு சாக்லெட் பரிசளித்தார். என்னால் ஒன்று கூட வாங்க முடியவில்லை, சில கேள்விகளுக்கு என்னுள் என்னை அறியாமல் சரியான பதிலும் புரிதலும் வந்த போது ரொம்ப மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உணர்ந்தேன்.
இத்தனை அறிவை தூக்கி சுமந்த ஆசிரியர் ஒரு எடையற்ற மலர் போல இருந்தார், தன் வண்ணத்தினால் வாசத்தினால் கற்றலுக்கான பல புதிய திறப்புகளை அளித்து கொண்டே இருந்தார்.
என் போன்ற துவக்கப்புள்ளிக்கும் இதில் ஆசியரை மகிழ்விக்கும் வகையில் கற்றலும் புரிதலும் ஆழ்ந்த அறிவும் கலைச்சொற்கள் அதிகமாக அறிந்துகொண்ட பலரும் இந்த வகுப்பில் இருந்தனர். தொடர் கேள்விக்கனைளை எய்து கொண்டு இருந்தனர் . வகுப்பு, இடைவேளை உணவு வேளை எல்லாம் கேள்வி மட்டுமே, அவரும் சலைக்காமல் அதே நேரத்தில் எங்களுகள் தேவையற்ற பயத்தை வர விடாமல் பதில் அளித்தார். ஒரு முறை கூட நிதானம் தப்பவில்லை அவருக்கு பதில் தெரியாத கேள்வி இல்லை. ஆனால் எங்களுள் ஒருவராகவே எங்களுக்குள் சகஜமாக இருந்தார்.
என் உடல் இத்தனை அறிவியல் பூர்வமானது அதனுள் இருக்கும் செயல்பாடும் ஒருங்கிணைவும் மகத்தானது. ஓட்டு மொத்த மானுட அறிவும் சேர்ந்து நவீன அறிவியலை வளர்த்தெடுத்து உள்ளது. அத்தனை ஆராய்சியாளர் கண்டுபிடிப்பாளர்கள் பற்றி சொல்ல சொல்ல வியப்பு ஒரு பக்கம் உளமார அவர்களை வணங்கி கொண்டேன்.
தாயின் வயிற்றில் கரு உருவான 55 நாட்களுக்குள் ஒட்டு மொத்த உடல் உறுப்புகளும் குழந்தைக்கு கிடைத்து விடும் என்று சொன்னதும் சிலிர்த்து போனோம். பல பொதுவான மயக்கஙகளில் இருந்து இந்த மருத்துவர் தெளிவு அளித்ததம் உடல் மன நலம் குறித்து தீர்க்கமான புரிதல்களை ஏற்படுத்தினார்.
உடல் உள் உறுப்புகள் அதன் செயல்பாடுகள், கிருமி, நோய், நோய் அறிதல் முறைகள்,மருந்து அதை தயாரிக்கும் விதம்,அவற்றினை பரிசோதிக்கும் விதம் அவற்றின் standardization,இன்று நவீன மருத்துவம் வளர்ந்து நிற்கும் தளம் என பரந்துபட்ட விதத்தில் அறிதலுக்கான வாய்ப்பாக வகுப்பு அமைந்தது.
நித்ய வனத்தில் நல்ல ஒரு மேய்ப்பராக இருந்து அந்தியூர் மணி அண்ணா இந்த மூன்று நாட்கள் எங்களை பார்த்து கொண்டார்.உணவு,தங்குமிடம் எல்லாவற்றையும் சீராக கவனித்து கொண்டதுடன் வகுப்பிலும் வந்து கலந்து கொண்டார்.
ஒட்டு மொத்த வகுப்பும் நேர்மறையான உணர்வும் செயல்பாடும் கொண்டதாக இருந்தது,அதிக உளக் கொதிப்பிற்கும் எதிர் மறை விவாதத்திற்கும் வாய்ப்பு இருந்த வகுப்பு ஆனால் ஆசிரியர் பக்குவமாக கையாண்டார்.அங்கு வந்திருந்த ஒவ்வொருவரு பங்கேற்பாளர்கள் ஏதேனும் ஒரு அறிவு செயல்பாட்டில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டவர்கள் அல்லது அதை நோக்கி ஆர்வத்துடன் இருக்கிறவர்கள் எனவே கூடிக்கூடி அறிவு அமிர்தம் எல்லோரும் பகிர்ந்து கொண்டோம்.
காந்தியின் வாசகத்தை சொல்லி வகுப்பினை முடித்தார் ஆசிரியர்.
அருண்மொழி அக்கா பார்த்தும் ஒட்டு மொத்த வகுப்பில் அவர்கள் உடன் இருந்ததும் மகிழ்ச்சி அளித்தது,
பேரன்பு நிறைந்த ஆசிரியர் மாரிராஜ் அவர்களை கொண்டு இந்த வகுப்பினை அமைத்து கொடுத்தமைக்கு அதில் எங்களுக்கு ஒரு வாய்ப்பினை அளித்த உங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
ஸ்டாலின் கள்ளிப்பட்டி
புகைப்படங்கள் : கார்த்திக்