பெண்கள் யோக முகாம், கடிதங்கள்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

சென்ற வார இறுதியில் நடந்த பெண்களுக்கான யோகப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன்.  கடந்த இரு மாதங்களாக ஆயுர்வேதம், ஆலயக்கலை,ஆனைக்கட்டி முகாம் என எனக்கு ஆர்வமுள்ள வகுப்புகள் பற்றிய அறிவிப்புகள் வந்தும், கலந்து கொள்வதற்கான சூழ்நிலை அமையவவில்லை. பெண்களுக்கான யோக முகாம், குழந்தைகளின் காலாண்டு விடுமுறையை ஒட்டி வந்தவுடன் இதைத் தவற விடவே கூடாது என்று உடன் பதிவு செய்து விட்டேன்.

பயிற்சியில் இருந்த மூன்று நாட்களும் மனம் அமைதியாக, சலனமின்றி, துல்லியமாக கற்கும் மனநிலையுடன் இருந்தது. மனதிற்க்கினிய இயற்கையான குருகுலச் சூழல் கற்றலில் எவ்வளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

சுமார் 40 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டோம்.   கல்லூரி மாணவிகள், அம்மாமகள் இணை, பாட்டிஅம்மாமகள், அக்காதங்கை, கணவர் உடன் வந்து தங்கி குழந்தைகளை கவனித்துக்கொள்ளபயிற்சியில் கலந்து கொண்ட மனைவிகள், வயதான தாய் தந்தையருடன் வந்திருந்த தோழி என ஆச்சர்யங்கள் பல.  ‘அம்மா வீட்டுக்கு வந்தது போல் உள்ளதுஎன்றெல்லாம் சில தோழியர் கூறக் கேட்டேன். சிரிப்பும், கொண்டாட்டமுமாக இருந்த சக தோழியரை கண்டபொழுது, தங்களதுஈரட்டிச் சிரிப்புஎன்ற பழைய பதிவு பலமுறை நினைவில் வந்து சென்றது, ‘smiles are contagious’ என்பது எவ்வளவு உண்மை !

முத்தாய்ப்பாக, குரு சௌந்தர்.  என்னைநமஸ்காரம்மாஎன்று முகம் நிறைய புன்னகையுடன் முதலில் வரவேற்றவரும் அவரே! முதல் வகுப்பை ஆரம்பிக்கும் பொழுது கற்றல் பற்றிய குரு நித்ய சைதன்ய யதியின் மேற்கோளுடன் ஆரம்பித்தார், அது போலவே மூன்று நாட்கள் நடந்த 11 அமர்வுகளும் இனியதொரு கற்றல் அனுபவமாக அமைந்தது.   யோகப் பயிற்சிகள் அனைத்து வயதினரும் செய்யக் கூடியதாக இருந்தது. பயிற்சிகளுக்கு முன்பும் , பின்பும் யோகம்,ஆயுர்வேதம், உபநிஷத்துக்கள், தத்துவம் என்று பல்வேறு தளங்களைத் தொட்டு அவர் கொடுத்த விளக்கங்கள் தெளிவாக இருந்தது.

கற்றுக் கொள்வதுடன் நின்று விடாமல், தொடர் பயிற்சி (யோக சாதனா) செய்வதன்  மூலமே சரியான பலனை  அறிய முடியும் என்பதை வலியுறுத்தியபடியே இருந்தார்.  மாறாத புன்னகையுடன், பொறுமையாக அனைத்து கேள்விகளுக்கும்   பதிலளித்தார்.  குரு சௌந்தர் போன்ற நேர்மறையான எண்ணங்களை கொண்ட, நட்புடன் பழகக்கூடிய ஆசிரியரை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.

உடன் தங்கியிருந்த கல்லூரி மாணவிகள் மூலம் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் மாணவர்களுக்காக நடத்தி வரும் தொடர் வகுப்புகள் பற்றி அறிந்தேன். ஈரோடு கிருஷ்ணன் மற்றும் விஷ்ணுபுரம் நண்பர்கள் மீதான மரியாதை இன்னும் கூடியது.

இதுவரை யோகம் () உடற்பயிற்சி  சார்ந்த எந்தவொரு வகுப்பிலும் கலந்து கொள்ளாத எனக்கு, முதல் முறை அமையப்பெற்ற  வாய்ப்பே முழுமையான, நிறைவான அனுபவமாக இருந்தது எனது நல்லூழ் என்றே நினைக்கிறேன். இதனை சாத்தியப்படுத்திய உங்களுக்கும்,  குரு சௌந்தர்  அவர்களுக்கும், அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட செய்த அந்தியூர் மணி அவர்களுக்கும், விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் எனது நன்றியும் அன்பும்.

அன்புடன்,

கவிப்ரியா 

மதிப்பிற்குரிய ஆசான் ஜெ

மகளிருக்கான யோகா வகுப்பு ஒன்றை தொடங்கியதற்கு முதலில் மிக்க நன்றி. தேங்கி இருந்த எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி.. பல நாட்களாக மலைத்தங்குமிடம் வரவேண்டும். இலக்கிய விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்னும் பேராவல் உண்டு. ஆனால் அதற்கான  அனுமதியும்  சூழ்நிலையும் ஒருங்கே கிடைத்த பெண்களில் நானும்  ஒருத்தி. ஆரோக்கியத்திற்கு யோகா, தாய் வீடு போல்  ஓர் உணர்வு.

நான் மலை தங்கும் இடம் வந்ததற்கு மிக முக்கிய காரணம் உங்களின் ஒரு பதில் கடிதம் தேவையானதை தேடி வர வேண்டும் என்று கூறி இருந்தீர்கள். அந்த பதிலே என்னை இந்த யோகா முகாமிற்கு வர வைத்தது.

நான் இலக்கியம் பேசும் தோழிகள் யாரும் வாய்க்கப் பெறாதவள் எனவே அப்படிப்பட்ட சில நட்பு வட்டத்தை தேடியே என் பயணம் தொடங்கியது. ஆரோக்கியமான யோகாவுடன் இலக்கணமும் பேசிக்கொண்டோம் வெண்முரசு படித்தவரை பகிர்ந்து கொண்டோம்பல நல்ல நூல்கள் பகிரப்பட்டன. நல்ல உணவு செரிமானம் அடைந்ததை போல் ஒரு நல்ல உணர்வுபதினோராம் வகுப்பில் யானை டாக்டர் பாடம் மூலமாகவே உங்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தோம் நானும் என் மகன்களும்.

இந்த வகுப்பிற்கு பல தடைகளை தாண்டி தான் வந்தேன் என நான் நினைத்தேன் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன் பலரும் அவ்வாறே வந்துள்ளனர். குருஜி சௌந்தர் சிறப்பான முறையில் வகுப்பை நடத்தி முடித்தார் அவர் மனைவி சாரதாவுடன் இருந்தது பலருக்கும் பலவகையில் நம்பிக்கை அளித்ததுஅந்தியூர் மணி அண்ணாவின் வழிகாட்டுதல் மற்றும் அன்பு எங்களை நெகிழ வைத்தது.

இது என் திருமணத்திற்குப் பிறகு சொந்த ஊர் அல்லாத இடத்திற்கு தனித்து நான் சென்ற  முதல் பயணம் . வழியில் பல நண்பர்கள் பல நல்ல உள்ளங்களின் உதவியால் வகுப்பை இனிமையாய் நிறைவு செய்தோம். மகளிர்க்கன வகுப்பு வைத்தால் கண்டிப்பாக பெண்கள் வருவார்கள் என்னும் உங்கள் நம்பிக்கையே நாங்கள் மலை தங்கும் இடம் வருவதற்கு காரணம். இதில் பல பெண்களுக்கு என்னை போல் இதுதான் முதல் பயணம் கண்டிப்பாக எங்கள் பயணங்கள் தொடரும் அதை தொடங்கி வைத்த ஆசானுக்கு  கலந்துகொண்ட அனைவரின் சார்பாகவும் நன்றிகள் பல.

.வடிவாம்பாள், சென்னை.

முந்தைய கட்டுரைஇலங்கை யோக முகாம்
அடுத்த கட்டுரைஓவியங்களை அறிதல்- கடிதம்