வேதம், அம்பேத்கர்

வேதங்களின் மையம்

வேதகாலப் பெண்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு

            என உள்ளக்கிடக்கையை எப்படி உங்களிடம் வெளிப்படுத்துவேன் என்று தெரியவில்லை.சென்ற கடிதத்தில் வேதமும் பெண்களும் குறித்த என் சந்தேகத்திற்கு ஒரு ஆழ்ந்த செறிவான பதிலைத் தந்திருந்தீர்கள். உங்களின் பதிலைப் பார்த்த உடனே உண்மையில் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தேன். உங்களின் சொற்களை ஒவ்வொன்றாக எழுத்தெண்ணி வாசித்தேன். உண்மையில் நவீன இலக்கியவாதிகளில் தன் வாசகர்களோடு இந்த அளவிற்கான ஒரு பெரும் உரையாடல்களை நடத்திக்கொண்டிருப்பது நீங்களாக மட்டுமே இருக்கும்.

       உங்களின் பதில் கடிதம் எனக்கிருந்த பல முரண்பட்ட எண்ணங்களை மாற்றிவிட்டது. உங்கள் கடிதத்தை படித்த பிறகு சொல்வளர் காட்டில் சுலஃபை மைத்திரி, கார்கி போன்றவர்களின் ஆளுமையை உங்கள் சொற்களைக் கொண்டு ஒப்புநோக்கும் போது நெகிழ்வாக இருந்தது. வெண்டி போன்ற நபர்களின் ஒற்றை தரப்பிலான அல்லது தன் வாதத்தை வலுசேர்க்கின்ற தரப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை முற்றுமாகப் புறக்கணிப்பதை ஆய்வென்று ஒப்புக்கொள்ளவே முடியாது. உண்மையில் அவை நீங்கள் குறிப்பிட்டதைப் போன்றே முன்முடிவுகளோடு வைக்கப்படுகிற காழ்ப்புகளன்றி பிறிதில்லை

              உங்களின் மூலமாக மற்றைய சிலவற்றின் மூலமும் இந்திய வேத மற்றும் தத்துவ மரபு குறித்த சிறிய அறிமுகம் என்னிடமிருந்தது. உங்களின் பதில் கட்டுரை மேலும் அதனை ஆழ்ந்து கற்க வேண்டுமென்ற ஒரு அவாவையும் ஊக்கத்தையும் தந்திருக்கிறது. அவை எல்லாவற்றுக்கும் நன்றி

              தனிப்பட்ட முறையில் உங்கள் வாசகனாக ஒரு சிறு முறையீடு செய்கிறேன். மனிதர்களில் யாரை விடவும் காந்தியை எனக்கு நெருக்கமாக உணரமுடிகின்றது. அதற்கு உங்களின் எழுத்தும் ஒரு காரணம். காந்தியும் அம்பேத்கரும் குறித்த கட்டுரையை உங்களின் இரு காந்தி நூலிலும் தெளிவாக எழுதியிருந்தீர்கள். அவை எனக்கான பல திறப்புகளுக்கு  உதவியது. நான் கல்லூரியில் இரண்டாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு கல்லூரியில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். என் கட்டுரையை காந்தியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் அமைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். அதன் பொருட்டு சில வற்றை படித்துக்கொண்டுமிருக்கிறேன்.அது குறித்து வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தனிப்பட்ட முறையில் எனக்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களானால் உண்மையில் மகிழ்வேன் சார்.

               இப்படி உங்களைக் கேட்பது கூட முறையா என்று தெரியவில்லை. ஆனால் உங்களிடம் இவ்வாறு கேட்பது என் உரிமை என்று உள்ளம் ஏனோ குரல் கொடுக்கிறது. ஏனென்றால் ஜெயமோகனை நிதமும் நான் அவரின் படைப்புகளினூடே சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பல சமயங்களில் அவர்தம் புனைவுலகின் எளிய மாந்தனொருவனிடம் என் சாயலை உணர்ந்திருக்கிறேன். நான் பல சமயம் சோர்ந்தமர்கின்ற போதெல்லாம் அருகிலிருந்து தோள்களை மெல்லத் தட்டிக்கொடுப்பதும் அவர்தான். உண்மையில் வேறு எந்த நவீன எழுத்தாளரையும் வழிய சென்று அனுக வேண்டுமென் துளிகூட ஆசை இருந்ததில்லை சார் உங்களைத் தவிர. காரணம் உங்களை நிதமும் கண்டடைபவனாகவே நான் இருக்கிறேன். இவை உங்களுக்கு சொற்களாக மட்டுமே தெரியுமாயின்ஆம் சார். ஒரு மானசீக மாணவனாக என்னால் உங்களுக்கு ஆசிரிய தட்சணையாக என்னால் தர இயன்றது சொற்களும் அதற்கு மேலான அன்பும் கண்ணீரும் தான். ஏற்றுங்கொள்ளுங்கள் ஆசானேஉங்களின் சொற்கள் போதும் நான் நிரம்புவதற்கு. அனைத்திற்குமாக நன்றி

   – அன்புடன்

      மு.சாகுல் ஹமீது.

Dr. D Nagaraj

அன்புள்ள சாகுல்,

நீங்கள் ஆய்வை தொடங்குவதற்குச் சரியான நூல் டி.ஆர்.நாகராஜ் எழுதிய எரியும் பாதங்கள். (The Flaming Feet and Other Essays: The Dalit Movement in India) காந்தி- அம்பேத்கார் இருவரும் ஒருவரோடொருவர் முரண்பட்டு, விவாதித்து அதன் வழியாக ஒருவரை ஒருவர் எப்படி நெருங்கி வந்தனர் என்பதை விவரிக்கும் முக்கியமான நூல் அது. அம்பேத்கர் காந்தியின் அறவழிப்போராட்டம் நோக்கி வந்தார். காந்தி சொன்னபடி பிற சமூகங்கள் மற்றும் அரசியல்கட்சிகளுடன் இசைவுகொள்ளவேண்டுமே ஒழிய தனியரசியல் பயன் தராது என உணர்ந்தார். காந்தி வர்ணாசிரம தர்மத்தில் ஏதேனும் பயன் இருக்கலாம் என்னும் எண்ணத்தை உதறி முழுமையான சாதியொழிப்பே தேவை என்னும் புள்ளி நோக்கி வந்தார்.

இந்த நூல் பற்றி ஒரு வருத்தமான செய்தி உள்ளது. இந்திய அறிவுச்சூழல் எப்படி செயல்படுகிறது என்பதற்கான சான்று இது. இந்த நூல் காந்தி- அம்பேத்கர் இருவரையும் பற்றிய ஒப்பீட்டாய்வாக முதலில் வெளிவந்தது. ஒரு சிறிய நூல். அன்று காந்தி- அம்பேத்கர் முரண்பாட்டை இடதுசாரிகளும் தலித் செயல்பாட்டாளர்களும் தீவிரமாக முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். காந்தியை ஒரு ‘வில்லன்’ ஆக கட்டமைத்துக் கொண்டிருந்தனர். இந்நூல் அதன்மேல் ஒரு தாக்குதலை தொடுத்தது. எதிர்காலத்தில் தலித் தரப்பும் காந்தியத் தரப்பும் இலட்ச்சியவாத இணைப்பை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்றும் ஆரூடம் சொன்னார். (அவர் இந்தியாவில் இந்துத்துவ எழுச்சியை முன்னுணர்ந்திருந்தார்)

நான் இந்நூல் வெளிவந்த காலத்தில் இதை வாசித்து ஆழ்ந்த மனப்பதிவுக்கு ஆளானேன். ஒன்று, வரவிருப்பதை உணரும் ஆழம் நாகராஜிடமிருந்தது. இரண்டு, அன்றைய சூழலில் இடதுசாரி அறிவுஜீவிகளும் தலித் அறிவுஜீவிகளும் ஒப்புக்கொள்ளாத ஒன்றைச் சொல்லும் துணிவும் இருந்தது. டி.ஆர்.நாகராஜ் தலித் அல்ல. நான் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணனுடன் சென்று டி.ஆர்.நாகராஜை பெங்களூருக்குச் சென்று சந்தித்து ஒரு நீண்ட பேட்டி எடுத்தேன்.அது காலச்சுவடு இதழில் வெளியானது. காலச்சுவடு நேர்காணல்கள் என்னும் நூலில் உள்ளது.

நாகராஜ் மறைந்ததும் அவருடைய ‘நண்பர்கள்’ அந்நூலை ‘விரிவாக்கித் தொகுத்து’ அந்நூலின் மையத்தையே வெளித்தெரியாமலாக்கினர். இப்போது அதன் தலைப்பு, அட்டைக்குறிப்பு எதிலும் காந்தி இல்லை.நாகராஜ் வெவ்வேறு காலங்களில் தலித் இயக்கம் பற்றி எழுதிய சாதாரணமான பல குறிப்புகளை சேர்த்து அந்நூலை மும்மடங்காக்கி, அதில் ‘ஒரு’ கட்டுரை காந்தி- அம்பேத்கர் பற்றியது என ஆக்கிவிட்டனர். டி.ஆர்.நாகராஜ் சொன்ன அந்த கருத்தை எதிர்கொள்ளாமலேயே வெற்றிகரமாகப் புதைத்துவிட்டனர்.

நாகராஜின் நூலில் அக்கட்டுரையை வாசியுங்கள். அந்நூலில் அவர் அளிக்கும் நூலடைவை கொண்டு நீங்கள் மேலே வாசிக்கலாம். நான் காந்தி- அம்பேத்கர் பற்றிய கல்வித்துறை ஆய்வுகள், அரசியல் ஆய்வுகளை கருத்தில் கொள்ளவேண்டாம் என்பேன். சுதந்திரப்போராட்ட கால வரலாற்றுப் பதிவுகள், அக்காலத்தை விவரிக்கும் வாழ்க்கைக் குறிப்புகள், செய்திகள் மற்றும் அரசு ஆவணங்களை மட்டுமே கருத்தில்கொள்ளுங்கள். உங்கள் சொந்தப்புரிதல் நோக்கிச் செல்லுங்கள்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைவெண்முரசு நாள்