திரைக்கல்வி எவருக்காக?

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் திரைப்பட ரசனைப்பயிற்சி பற்றிய அறிவிப்பை கண்டு ஆச்சரியமடைந்தேன். மொத்தத் தமிழகமே திரைப்படம்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றான விஷயங்களைப் பேசுவதாகவே உங்கள் இணையதளம் உள்ளது. இங்கும் சினிமாவா என்னும் அசதி ஏற்பட்டது. இன்றையசூழலில் சினிமா பற்றிய கல்விக்கு என்ன தேவை இருக்க முடியும்? நான் ஒரு சாதாரண அரசூழியன். எனக்கு சினிமாக்கல்வியால் என்ன பயன்?

எம்.ஆர். பிரபு ராஜா

*

அன்புள்ள பிரபு,

நான் சினிமா என்பதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்பவன். சினிமா இன்று எனக்கு அது தொழிலாகவே உள்ளது. நான் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய வணிக சினிமாவின் உலகம்ஆனால் நான் பார்க்கும், ரசிக்கும் சினிமா என்பது வேறு. என் பிரியத்துக்குரிய சினிமாக்கள் பற்றிய குறிப்புகள் இந்த தளத்திலேயே நிறைய உண்டு.

நாம் ஏன் சினிமாவை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும்? சினிமாவைக் கற்றுக்கொள்ள பல அமைப்புகள் உள்ளன. அவற்றில் சேர்ந்து முழுநேரமாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அது அனைவர்க்கும் இயல்வது அல்ல. அவ்வாய்ப்பு அமையாதவர்களுக்கான முகாம்கள் இவை.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சில முகாம்கள் வழியாக சினிமா என்னும் கலைதொழில்நுட்பம் ஆகியவற்றுடன் எளிமையான ஓர் அறிமுகத்தைச் செய்துகொள்ளலாம். அதன்பின் இணைய ஊடகம் அளிக்கும் தொடர்புகள் வழியாக தேவையான சினிமாக்களை தொடர்ந்து பார்த்தால் சினிமா என்னும் கலையை – தொழில்நுட்பத்தை மேலும் நுணுக்கமாகப் புரிந்துகொள்ளலாம். 

இங்கு சினிமா பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் சினிமாக்களின் அரசியல் பற்றியவை. அல்லது உள்ளடக்கம் பற்றியவை. ஆனால் சினிமாவை தெரிந்துகொள்வதென்பது சினிமா என்னும் கலையை தெரிந்துகொள்வதுதான். நாம் நமக்குரிய உள்ளடக்கத்தை நாமே தேடி அடையவேண்டும். அதற்கு பரிந்துரைகளோ கல்வியோ தேவையில்லை.

இந்த வாய்ப்பு முந்தைய தலைமுறையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படக் கல்லூரிகளில் ஏராளமான சினிமாக்களைப் பார்க்க வைப்பதை மட்டுமே செய்தார்கள். அங்குள்ள பாடத்திட்டம் இது. சினிமாக்கலை பற்றிய ஓர் அறிமுகம், என்னென்ன சினிமாக்களை பார்க்கவேண்டும் என்னும் பரிந்துரை, சினிமாக்களை திரையிடல் ஆகிய மூன்றுமே. இன்று முதலிரண்டையும் மட்டும் முகாம்கள் வழியாகச் செய்தால் போதும் என்னும் நிலை உருவாகி வந்துள்ளது.

இருவகையினர் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்று, சினிமா பார்க்கும் ஆர்வம் கொண்டவர்கள். சினிமாவை எப்படி கூர்ந்து பார்க்கலாம், புரிந்துகொள்ளலாம் என இங்கே பயிலலாம். 

கோவிட் காலத்தில் சினிமா பார்க்க ஆரம்பித்த பலர் சினிமா பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். ஏனென்றால் புகழ்பெற்ற ஹாலிவுட், கொரிய படங்களை ஐம்பது படங்கள் பார்த்தபின்பு ரசிக்க முடியாது. அவை ஒரே அமைப்பும், ஒரே உள்ளடக்கமும் கொண்டவையாகத் தோன்றும். இருபது நிமிடங்களில் அவை சலிப்பூட்டும். சலிப்பூட்டாதவை கொடிய உள்ளடக்கம் கொண்ட படங்கள். அவை உள்ளத்தை இருட்டால் நிறைப்பவை.

அந்தச் சலிப்பு கொண்டிருப்பவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும். சினிமாக்களில் கிளாஸிக்குகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவுக்கே உரிய மகத்தான சினிமாக்கள் உள்ளன.  அவற்றுள் நுழைந்தால் இன்னொரு பெரிய உலகம் திறக்கும். அது எல்லா அகவையினருக்கும் மிகப்பெரிய தொடக்கமே.

ஆனால் என்னென்ன படங்களைப் பார்க்கவேண்டும், எப்படி பார்க்கவேண்டும் என ஒரு சின்ன பயிற்சி இல்லாமல் ஒருவர் கலைப்படங்களின் உள்ளே நுழைய  முடியாது. அப்பயிற்சியை சென்ற தலைமுறையில் திரைப்படச் சங்கங்கள் அளித்தன. அதை இன்று அளிப்பவை இத்தகைய முகாம்கள்

இன்னொரு சாரார் திரைப்பட உருவாக்கத்தைக் கற்க விரும்புபவர்கள். சினிமாவின் இலக்கணத்தை அறிமுகம் செய்துகொண்டால் மேற்கொண்டு சுயமாகவே கற்கமுடியும். ஆனால் அந்த அறிமுகம் இல்லாமல் சுயமாக கற்க முடியாது. இதுவே உண்மை.

அந்த அறிமுகத்தை வணிகச் சினிமாவின் ஆளுமைகள் அளிக்க முடியாது. அவர்கள் வேறொரு உலகைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உண்மையில் எதையுமே கற்றுக்கொடுக்க மாட்டார்கள் என நான் நன்கு அறிவேன். சினிமா பற்றிய கல்வியை மாற்று சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அளிக்க முடியும். மிகச்சிறிய அளவில் சினிமாவை உருவாக்குவது எப்படி என்பதே அப்பயிற்சியின் அடிப்படை. வணிக சினிமாவை உருவாக்குவதற்குக் கூட இந்தப் பயிற்சியே அடிப்படைத்தேவை.

அந்த அடிப்படையை கற்றுக்கொள்ளும் ஒருவர் அதேபோன்ற சிலருடன் இணைந்து செல்போனையும் மடிகணினியையும் கொண்டே நல்ல படங்களை உருவாக்க முடியும். யூடியூப் போன்ற வெளியீட்டு வசதிகளும் இன்று பல உள்ளன. நம் வாழ்க்கையின் சொல்லப்படாத எவ்வளவோ பகுதிகளை நாம் சினிமாவாக ஆக்கமுடியும். சிற்றிதழ்ச்சூழலில் கதைகள் எழுதுவதுபோலவே சினிமாக்களும் உருவாக முடியும். அது ஓர் இயக்கமாக ஆகமுடியும். எண்ணிப்பாருங்கள் அரிய சிறுகதைகளும் நாவல்களும் சில ஆயிரம் ரூபாய்ச் செலவில் சிறிய சினிமாக்களாக வெளிவரும் ஒரு சூழல் உருவாகுமென்றால் எப்படி இருக்கும்!

அதற்கு பெரும் ரசிகக்கூட்டம் உருவாகவில்லை என்றாலும்கூட அவற்றை உருவாக்குவதே ஒரு பெரிய விடுதலை. ஒரு பெரிய கொண்டாட்டம். நம் வாழ்க்கையின் சலிப்பிலிருந்து வெளியேறும் ஒரு வழி. அதற்குரிய வழிகளை ஏன் ஆராயக்கூடாது?

எல்லாமே சாத்தியங்கள்தான். வாய்ப்புகள் இல்லை என்னும் நிலை வரக்கூடாது. அதுவே இந்த முகாம்களை அமைப்பதன் நோக்கம். பயன்படுத்திக்கொள்பவர்கள் மிகச் சிலரே என எனக்கே தெரியும். அவநம்பிக்கைகளும் தயக்கங்களுமே நம் சூழலில் மிகுதி. ஆனால் அதைக் களைந்து முன்வருபவர்களையே நான் எப்போதும் நம்புகிறேன்.

ஜெ 

முந்தைய கட்டுரைஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைஇலங்கை யோக முகாம்