வேதகாலப் பெண்கள் பற்றிய வெண்டி டேனிகரின் கருத்தை ஒட்டி என் கருத்தை எழுதியிருந்தேன் வேதகாலப் பெண்கள்
வேதங்கள் என்பவை ஒற்றைக் கருத்துத் தரப்பு அல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் சார்ந்தவையும் அல்ல. வேதச்செய்யுள்கள் இயற்றப்பட்டு பலநூறாண்டுகளுக்குப் பின்னரே தொகுக்கப்பட்டிருக்கலாம். ரிக்வேதத்தின் தொடக்கச் செய்யுள் முதல் பத்தாம் காண்டச் செய்யுள் வரை மொழிநடையின் அடிப்படையில் அவற்றின் கால இடைவெளி ஆயிரமாண்டு இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
மேலும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னரே ரிக்வேதத்தில் இருந்து யஜுர், சாம வேதங்கள் கிளைத்து தொகுக்கப்பட்டன. மேலும் பல நூற்றாண்டுகள் கழித்து மகாபாரதத்தில்கூட வேதங்கள் இயற்றப்படுவதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகவே வேதங்கள் குறைந்தது ஆயிரமாண்டுக்காலத்தில் உருவானவை. வேதச்செய்யுள்களின் தெளிவில்லாத குறிப்புகளைக் கொண்டு ஒட்டுமொத்த வேதகாலத்தை வகுத்துரைக்க முடியாது
நமக்கு இன்று கிடைக்கும் வேதச்செய்யுள்களைக் கொண்டே ஒட்டுமொத்த வேதமும் ஒரே இறையியல் கருத்து அல்லது ஒரே வாழ்க்கைநோக்கு கொண்டவை என சொல்லமுடியாது. அது ஒரு மாபெரும் விவாதக்களமாகவே இருந்துள்ளது என்று பல்வேறு அறிஞர்கள் வகுத்துரைத்துள்ளனர்.
நாமறிந்த காலத்திலேயே வேதமதம் ஆறு துணைமதங்களாக இருந்தது. வருணனை தெய்வமாகக் கொண்ட வாருணம் இந்திரனை தெய்வமாகக் கொண்ட ஐந்திரம்,சூரியனைனை தெய்வமாகக் கொண்டசௌரம், அக்னியைத் தெய்வமாகக் கொண்டஆக்னேயம் என்பவை முதன்மை நான்கு. தமிழகத்தில் ஐந்திரமும் சௌரமும் மட்டுமே ஓங்கியிருந்தன. இன்றும் நம் ஆலயங்கள் இந்த இரு ஐந்திரம் அல்லது சௌரம் சார்ந்தவை. அந்த இரு பிரிவுகளும் பலநூறாண்டுகள் தனித்தனியாக இயங்கின.
அதர்வம் தனி மரபாக இருந்து மேலும் பல ஆண்டுகள் கழித்து வேதத்தொகுப்பில் நான்காம் வேதமாக இடம்பெற்றிருக்கலாம். அதர்வ வேதம் அடிப்படையில் பிற வேதங்களின் மனநிலை, தத்துவப்பார்வை ஆகியவற்றில் இருந்து முழுக்க வேறுபட்டது. அது இந்தியாவின் முற்றிலும் வேறுபட்ட பழங்குடி மரபில் இருந்து உருவானது. அதேசமயம் அதர்வம் தான் தொன்மையான எகிப்திய, பாபிலோனிய தொன்ம மரபுகளுடன் அணுக்கத்தையும் கொண்டுள்ளது. அதர்வ வேதமே இந்தியாவின் ஆலய மரப, வழிபாட்டு முறைகள், தாந்திரிக வழிகள் போன்றவற்றுக்குத் தொடக்கப்புள்ளி.
இந்தியாவில் ‘வேதம்’ என்னும் தகுதிகொண்ட பல தத்துவ –கவிதை மரபுகள் இருந்திருக்கலாம். அசுரர்களுக்கும் நாகர்களுக்கும் கூட வேறு வேறு வேதங்கள் இருந்திருக்கலாம். இந்த வேதங்களே பின்னாளில் அதர்வமாக ஆகியிருக்கலாம். பிற வேதங்களிலும் அவற்றின் கூறுகள் இணைந்திருக்கலாம். வேதங்களின் கிருஷ்ண சாகை (apocrypha) என்பதை அப்படித்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவை ஏற்கப்பட்ட புறவேதங்கள்.
ராவணன் போன்ற அசுரர்கள் வேதமோதியதாக தொன்மங்கள் சொல்கின்றன. ராவணன் சிவபக்தன் என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கவேண்டும். பொதுவாகவே சைவம் புறவேதங்களில் இருந்து உருவானதாக இருக்கலாம். வேதங்களில் உள்ள ருத்ரம் போன்ற பகுதிகள் பின்னர் இணைந்தவையாக இருக்கலாம். பாசுபதம் தேடி அர்ஜுனன் செல்வதும், காட்டுமிராண்டியாகிய சிவனிடமிருந்து அதைப் பெறுவதும் இப்பின்னணியிலேயே புரிந்துகொள்ளத் தக்கவை. கிராதம் நாவலில் அதை எழுதியிருக்கிறேன். பாசுபத மரபு நீண்டகாலம் இங்கே மைய வேத மரபுக்கு எதிரான வேதமரபாக கருதப்பட்டது. லகுலீச பாசுபதம் தமிழகத்தின் முதன்மை மதமாகவே பொயு ஏழாம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது.
ஆக, வேதங்கள் என்பவை மாபெரும் உரையாடல் வெளி. வேதச்சொற்களம் என்பது ஒரு பெரிய விதைப் பரப்பு போன்றது. அன்று இங்கிருந்த பல்வேறு பண்பாடுகளின் அழகியல், மெய்யியல், பிரபஞ்சவியல் ஆகியவை ஒன்றுடனொன்று முட்டிமோதி, உரையாடி, இணைவதன் காட்சியே நமக்குக் கிடைக்கிறது. அப்படி எடுத்துக்கொண்டால் மட்டுமே நம்முடைய இன்றைய மதம், ஆன்மிகம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை அமையும்.
வேதங்களின் சாராம்சமாக உள்ளது மேலை ஆய்வாளர்களும் கீழைநாட்டு அடிப்படைவாதிகளும் சொல்வதுபோல ஒரு வலுவான சுரண்டல் கருத்தியலும் அதிகார அமைப்பும் அல்ல. சிந்தனைகளின் தொடக்கங்கள் நிகழ்ந்த ஒரு தொல்காலகட்டம், ஒன்றுக்கு மேர்பட்டதொன்மையான பழங்குடிப் பண்பாடுகளின் முரணியக்கம். அதர்வத்திற்கும் ரிக்வேதத்திற்குமான முரணியக்கத்தை எவரும் காணலாம். வேதங்களின் கிருஷ்ண,சுக்ல சாகைகள் நடுவிலேயே அந்த முரணியக்கம் உண்டு.
இந்திய மெய்ஞான மரபைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒவ்வொரு முறை இப்படி வேதப்பரப்பை விரிக்க முயலுந்தோறும் ஐரோப்பிய ஆய்வாளர் சிலர் அதை குறுக்க முந்தி வருவது வழக்கம். வேதப்பரப்பை வெறும் ஆசாரவாதமாகவும் மூலநூல்வாதமாகவும் எண்ணும் பழமைவாதிகளும், மத அடிப்படைவாதிகளும் நேர் எதிர்த்திசையில் நின்று அதே குறுக்கலைச் செய்கிறார்கள்.
நம்முடைய மொத்த வேதமரபுகளையும் ஒற்றைத் தரப்பாக்கி , அந்த வேதத்தரப்பினர் இன்னின்ன வகையானவர்கள் என வகுத்து முத்திரை குத்திக்கொண்டே இருக்கின்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள். இங்குள்ள சிக்கலான தொன்மங்களும் மெய்யியல் தரிசனங்களும் அவர்களுக்கு புரிவதே இல்லை. அவை இன்றும் இங்கே தத்துவமாகவும் வாழ்க்கையாகவும் நிகழ்வதை அவர்கள் உணர்வதுமில்லை.
அவர்கள் அங்கே இருந்து கொண்டுவரும் சமூகவியல் அல்லது அரசியல் அல்லது மொழியியல் பகுப்பாய்வுகளை நாம் தரவுகளைக் கண்டடைவதற்கு அப்பால் எவ்வகையிலும் பொருட்படுத்தக் கூடாது. அவர்கள் உருவாக்கும் கருத்துக்களை நாம் பின்தொடர்ந்தோம் என்றால் அதைவிட இழிவு வேறில்லை. நம்முடைய ஆழுள்ளம் உருவாகி வந்திருக்கும் வேர்ப்பரப்பான நமது மரபைப்பற்றி நமக்கு ஒரு மேற்கத்திய ஆய்வாளர்தான் சொல்லவேண்டும் என நாம் நினைத்தோமென்றால் நாம் பரிதாபத்துக்குரியவர்கள்.
வேதங்களை, அவை உருவாகி வந்த மாபெரும் பின்னணியை விரிவான பார்வையுடன், வெவ்வேறு கேள்விகளுடன், பற்பல கோணங்களில் விவாதித்து தெளியவேண்டும். அது நம் வரலாற்றை அறிவதற்கு மட்டும் அல்ல, நம் ஆன்மிகப் பயணத்திற்கும் முக்கியமானது. ஏனென்றால் நம் ஆன்மிகம் இன்றும் வேதகாலத்தில் உருவான தொன்மங்கள் மற்றும் படிமங்கள் சார்ந்ததாகவே உள்ளது. நம் கோயில்களில் இன்றும் கிராதசிவம் (காட்டுமிராண்டி சிவன்) அமர்ந்துள்ளார்.
ஜெயமோகன்