இஸ்லாம் இனிமை

அன்புள்ள ஜெ,

தாங்கள் நலம் என்று நம்புகிறேன்.

கடந்த மூன்று நாட்கள் வெள்ளிமலையில் நடந்த இஸ்லாமிய மெய்யியல் வகுப்பின் அனுபவங்களைப் பற்றி பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு தத்துவ வகுப்புக்கு முன்னும் நீங்கள் கற்றுக்கொடுத்தபடி அதுவரை நான் தெரிந்து கொண்ட அனைத்தையும் அகற்றி வெற்று மனமாகவே அமர்வேன். இம்முறையும் அவ்வாறே சென்றேன்

முதல் நாள் ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்களின் தோற்றமே அரபு மன நிலைக்கு என்னை கொண்டு சென்றது. தூய வெள்ளை நிற வெட்டி சட்டை கருப்பு குல்லாய் அத்தர் வாசனையுடன் முகம் நிறைய புன்னகை என்று இது வரை வெள்ளிமலை வகுப்புகளில் காணாத புது சூழலாக அமைந்தது அவர் வருகை. உண்மையில் முதல் தோற்றத்திலேயே அணுகிவிட்டார் ஆசிரியர்.

முதல் நாள் வகுப்பு முழுக்க அவர் கற்றுக்கொடுத்த மத்திய கிழக்கில் இஸ்லாம் தோற்றம் மற்றும் வளர்ச்சி வரலாறு என்பது இஸ்லாம் வரலாறாக மட்டும் அல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளின் வரலாறாகவும் இருந்ததை அன்று வகுப்பு முடிந்து ஒரு தொகுப்பாக உணர்ந்தேன். உள்ளடக்க அளவில் மிக கடினமாகவும் உட்சிக்கல் மிக கொண்டதுமாகவும் இருந்த வரலாறை ஆசிரியர் மிகவும் எளிமையாக, மைய்ய கதை(நபிகள் நாயகத்தின் வரலாறு) அதில் கிளை கதைகள் அதில் உட்கதைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரிய சித்திரத்தை வளர்த்து எடுத்தார். சற்று கடினமாக உணர்ந்தேன்.

அடுத்த இரண்டு நாள் ஒட்டு மொத்தமாக வேறொரு நிலைக்கு சென்றது வகுப்பு. முதல் நாள் அவர் காண்பித்தது கரடு முரடானா ஒரு பலா பழத்தை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் அவர் காண்பித்தது சூஃபீசம் எனும் கத்தியை கொண்டு அறுத்து அதனுள் இருக்கும் மென்மையான சுவையான சுளைகளை.

ஆசிரியர் ஒவ்வொரு முறையும் தன் கண்களை சுருக்கக் கொண்டு ஒரு ஆழமான புன்னகையோடு அடி வயிற்றில் இருந்துயா ரஸூலுல்லாஎன்று சொல்லும்போது அடுத்த முறை எப்போது சொல்வார் என்றும் காத்திருந்தேன்

மௌலானா ரூமி, குணங்குடி மஸ்தான் சாஹிப், தக்கலை பீர் முகமது என்று ஒரு பெரிய பட்டியலில் சுபீ ஞானிகள் நீண்டன. மௌலானா ரூமி வழியில் அவர் விளக்கிய ஒரு வரி மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன் அதுஅகத்தில் அடுத்த நொடி மரணிக்கத் தயாராய் இரு ஆனால் புறத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்து “. செய்யலூக்கத்தை நோக்கி தள்ளும் எத்தனை ஆற்றல் மிக்க வரி

ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு குல்லாய் அதன் வழி ஒரு வரலாறு என அனைத்து வாயில்களிலுக்கு கற்றல் மட்டுமே நிகழ்ந்த மூன்று நாட்களை எளிதில் மறக்க முடியாது. மிக மிக முக்கியமான ஒரு வகுப்பாக இந்த வகுப்பு அமைந்தது. இன்னும் எங்களுடன் தொடர்பில் இருக்கும் ஆசிரியர் அவ்வப்போது குரான் சார்பான செய்திகளையும் பதிவு செய்து வருகிறார். வகுப்பு முடிந்து வரும்போது ஆசிரியரிடம் கையெழுத்துட்ட அவரது புத்தகத்தை வாங்கி வந்தேன்.

ஆழ்ந்த அமைதியான கற்றல் மிகுந்த நாட்கள்

மிக்க நன்றி

சரவணன் சிவன்ராஜா

முந்தைய கட்டுரைவேதம், அம்பேத்கர்