அன்புள்ள ஜெமோ
நவீன அறிவியல் பற்றிய இரண்டு காணொளிகளும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தன. தமிழில் எதையும் வாசிக்காத என் பிள்ளைகளுக்கு அவற்றைப் பரிந்துரை செய்தேன். கார்ல் பாப்பர் என்ற பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள். இண்டக்ஷன் டிடக்ஷன் ஆகிய முறைகள், அனுபவவாதம், பொய்ப்பித்தல் ஆகியவற்றைப் பற்றிய முதல் அறிமுகமே இதுதான். அவர்கள் இருவருமே அறிவியல் பயிலும் கல்லூரி மாணவர்கள்.
நமக்கு இங்கே தொழில்நுட்பம்தான் அறிவியல் என்னும் எண்ணம் உள்ளது. அறிவியல் என்றால் அது வெவ்வேறு கருவிகள் என்று நினைப்பவர்களே மிகுதி. அது இந்த பிரபஞ்சத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறை என்றும் அதற்கு தனக்கான தர்க்கங்கள் உண்டு என்றும் தெரியாது. அந்த தர்க்கங்கள் இங்கே அறிமுகம் ஆவதே இல்லை.
ஆகவேதான் ஐஐடி பேராசிரியர்கள்கூட அபத்தமாக உளறுகிறார்கள். ஓர் அறிவியலுண்மை என்பது அறிவியல்சமூகத்தால் ஏற்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கு அந்த அறிவியலுண்மை பொய்ப்பித்தலுக்கு தன்னை கொடுத்து அதை வென்று நிற்கவேண்டும். இல்லையேல் அது அனுபவவாதம் மட்டுமே. தெளிவான உரை. நன்றி
கே.ராகவன்