
ஆலயக்கலை அறிமுகப் பயிற்சி
ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.
ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.
ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.
பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள். இடமிருப்பவை

நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி
ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.
இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.
- ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.
- இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.
நாள் நவம்பர் 28 29 மற்றும் 30
விண்ணப்பிக்க [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்
யோகப்பயிற்சி- முதல் நிலை
தாவரங்கள்- வனம்: அறிமுக வகுப்பு (குழந்தைகளுக்காகவும்)
தாவரவியல் பேராசிரியை முனைவர் லோகமாதேவி நடத்தும் தாவர அறிமுக வகுப்புகள் பெரியவர்களுக்காகவே திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நூறு தாவரங்களையாவது அறிந்திருக்கவேண்டும் என்பதே நோக்கம். அதற்கான தேவை என்ன? முதன்மையாக மூன்று.
- தாவரங்களை அறிவது சூழலுணர்வை உருவாக்கி அன்றாடவாழ்க்கையில் சிறுசிறு இன்பங்களை உருவாக்குகிறது. இன்றைய சலிப்பூட்டும் அன்றாடச்சுழற்சி கொண்ட வாழ்க்கையில் அது மிகப்பெரிய விடுதலை.
- நாம் உண்ணும் உணவு, நம் சூழல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது. அறிவியல்பூர்வமாக நம் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியக் அறிமுகம் செய்கிறது.
- யோகம், தியானம் பயில்பவர்கள் இயற்கையுடனான அன்றாட உறவைக்கொண்டிருக்கவேண்டும். அதை தாவர அறிமுகம் உருவாக்குகிறது.
ஆனால் நாங்கள் எண்ணியிராதபடி அவ்வகுப்பு குழந்தைகள் நடுவே புகழ்பெற்றது. இதுவரை நிகழ்ந்த வகுப்புகளில் குழந்தைகள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். குழந்தைகள் கலந்துகொள்வதன் அவசியம்.
- இன்றைய கணினி அடிமைத்தனம், செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை நேரடியாக இயற்கை நோக்கிக் கொண்டுவருகிறது. இயற்கையுடன் இருப்பதும், செயலாற்றுவதுமே இன்றைய ‘தகவல்தொழில்நுட்ப அடிமை’ மனநிலையில் இருந்து மீள்வதற்கான வழி.
- பறவைகளைப் பார்த்தல் இளையோருக்குரிய உயர்நிலை கல்வி- பொழுதுபோக்கு. தாவரங்களை அவதானித்தல் அதனுடன் இணைந்து செய்யப்படவேண்டியது.
- இளமையிலேயே குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய ஓர் அறிவுத்துறை அறிமுகமாகி அதில் ஈடுபாடு உருவாவது வாழ்க்கை முழுக்க உருவாகும் பல்வேறு திசைதிரும்பல்களை தவிர்க்கும்.
- இது நுணுக்கமான செய்முறைகளுடன் இணைந்த நிகழ்ச்சி. ஆகவே ஒரு விடுமுறை கொண்டாட்டமும்கூட.
வரும் டிசம்பர் விடுமுறையில் மீண்டும் லோகமாதேவியின் வகுப்புகள் நிகழ்கின்றன.
நாள் டிசம்பர் 26, 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு. கிறிஸ்துமஸுக்கு மறுநாள் முதல்)












