
அன்புள்ள ஜெ
வணக்கம். நவம்பர் 7,8 &9 தேதிகளில் நடைபெற்ற தியான / உளக்குவிப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் நற்பேறு கிடைத்தது.
வெகுநாட்களாக எண்ணி, தடை பட்டுக்கொண்டிருந்தது இம்முறை கிட்டியது.
கலந்து கொண்ட பெரும்பாலானோர் இள மற்றும் நடுத்தர வயதினர். வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளவர்கள். பணி ஓய்வு பெற்ற எனக்கோ அவ்வாறான பெரிய சிக்கல்கள் ஏதுமில்லை. ஆனாலும் ஒரு நிறைவின்மையும், ஏதோ தவற விடுகிறோம் என்ற அலைக்கழிப்பும் இருந்து கொண்டே இருந்தன.
வெள்ளியன்று காலை முதல் வகுப்பிலேயே ஆகா இதுதான் நாம் தேடியது என்ற எண்ணம் வந்தது.

குருநாதர் வலியுறுத்திய இரண்டு சாதனங்களை கைக் கொண்டால் இந்த அலைக்கழிப்பில் இருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
ஒன்று இந்தக் கணத்தில் வாழ்வது. இறந்த காலத்தை எண்ணாமல், எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இக்கணம் நடப்பதை அப்படியே ஏற்று வாழ்வது.
மற்றொன்று செய்யும் ஒவ்வொரு செயலையும் முழு கவனத்துடன் செய்வது. நம்மை சார்ந்த அனைவர்க்கும் நமது துண்டுபடாத முழு கவனத்தையும் வழங்குவது.
இவ்விரண்டையும் இக்கணம் முதல் செயல்படுத்த முடிவு செய்துகொண்டேன். மேலும் பயிற்சி பெற்ற மூன்று நாட்களும் யோக/ தியான முறைகளை அங்கேயே செய்ய வைத்து அவற்றின் பலன்களை அறிய வைத்தார்.
இனி பயிற்சிகளையும், அன்றாடம் எல்லா செயல்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் தவறாமல் செய்து பயன்களை தக்க வைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
குருவிற்கு வணக்கங்களும் நன்றியும். அனைவர்க்கும் இவற்றை சாத்தியமாக்கிய தங்களுக்கும், துணை புரிந்த திரு அந்தியூர் மணி அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்,
நாரா. சிதம்பரம்
புதுக்கோட்டை












