
புதுவை வெண்முரசு வாசகர் வட்டம் (24.04.26) அன்று நிகழ்த்திய கவிஞர் வி.சங்கர் அவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும், மாதாந்திர கூடுகை நிகழ்வும் இரு அமர்வுகளாக நண்பர் அரிகிருஷ்ணன் இல்லத்தில் ‘ஜெயகாந்தன் அரங்கில்’ நடைபெற்றது. இதற்கு ‘மண்குழித்து கண்வளர்த்து மஞ்சஞ் சேர்த்த’ பெருமைக்குரியோர் அரிகிருஷ்ணனும், கடலுார் சீனு அவர்களும். .புதுவை வெண்முரசுக் கூடுகை வாசகர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு இது. இரா.விஜயன் வரவேற்புரை நல்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளரான சித்ரா விருந்தினர்களை மேடைக்கு அழைத்ததும் சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது. முதல் அமர்வில் இசைப்பள்ளி மாணவர்கள் சூர்யா ஸ்ரீ (வாய்ப்பாட்டு), வாசகர் முத்துக்குமரனின் புதல்வர் மு.விவேகானந்தன் (மிருதங்கம்) பண்ணிசையுடன் நிகழ்வு தொடங்கியது
சரவணன் அவர்கள் தன் நோக்கவுரையில் புதுவை வெண்முரசுக் கூடுகையின் பத்தாண்டு கால வளர்ச்சியையும் 2024ல் திரு .அரிசங்கர் 2025ல் திரு.வளவ.துரையன் ஆகியோர்க்கு கூடுகை சிறப்பு செய்ததையும் நினைவுகூர்ந்தார். விருதாளர் வி. சங்கரையும், அவரது ‘சூது பவளம் கண்டேன் அல்லேன்’ நுாலையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர், இனி வருங்காலங்களில் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் மூத்த ஆளுமைகளையும், வளர்ந்து வரும் இளம் ஆளுமைகளையும் சிறப்பு செய்யும் பொருட்டு பாராட்டுப் பத்திரம் மற்றும் இருபத்தைந்தாயிரம் ரொக்க விருது என்று அறிவித்து கூடுகை இன்னும் கொஞ்சம் முன்னேறியுள்ளது’ என்றார். நிதிநல்கிய அமுர்தவல்லி, விஜயன், உள்ளிட்ட புதுவைக் கூடுகையின் வாசகர்கள் அனைவருக்கும் கூடுகையின் சார்பாக அன்பையும், நன்றியையும் கூறினார் .மேலும் ‘படைப்பாளன் வாசகனுக்குத் தரும் படைப்பிற்கும், வாசிப்பின்பத்திற்கும் தன் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தி சிறப்பு செய்வதே இந்நிகழ்வின் நோக்கம். மேலும் இது படைப்பாளனும் வாசகனும் ஒன்றிணையும் தருணம்!’ என்றார். இக்கவிதைத் தொகுப்பில், தனக்குப் பிடித்த ‘’அம்ம! பைதல் பசுஞ்சுடர்” என்ற கவிதையை ‘மண் குழித்து கண் வளர்த்து மஞ்சஞ் சேர்த்த கதலிக் கன்று பைதல் பசுஞ்சுடர் ஏற்றி வானோக்கியது’ என்று கொண்டுகூட்டி பொருளுரைத்தார். ‘என் முதுகில் முடியடர்ந்த வால் வேண்டும் ஒருமுறையேனும் நானதை ஆட்டிப்பார்க்க வேண்டும்’ ‘நாயே அதைத் தாயேன்’ என்று செல்லங் கொஞ்சினார். மாணிக்கவாசகர்க்கு அடுத்து நாயை பல பாடல்களில் வைத்தவர் இவராகத்தான் இருப்பார் என்று கூறி அவையை நகைப்பிலாழ்த்தினார். ‘சூது பவளமேனி சுடர்ந்தெரியக் கண்டேன்’ என்ற கவிதையின் பொருளாக, அசோகவனத்துச் சீதை, சொல்லின்செல்வன், சீதையின் மனஊஞ்சலை ஆட்டும் இராகவனாகப் புரிந்துகொண்டேன்’ என்றார்

அடுத்து நுால் மதிப்புரையாற்ற வந்தார் எங்கள் கூடுகையின் ‘உரைகாரர்’ கடலுாா் சீனு. தமிழின் கலை, இலக்கியம், பண்பாடு எனும் நெடிய மரபில் இக்கவிதைத் தொகுப்பின் பங்களிப்பு என்ன என்பதை பிரஞ்சுப் புரட்சியின் போர் மரபில் வந்த (AVANT GARDE) என்ற சொல்லாட்சியின் மூலமாக விளக்கினார். வழமையான மரபுகளைக் கட்டுடைத்து புதிய சோதனை முயற்சியில் கருத்துகளை கலைப்படைப்பில் முன்வைப்பவர் என்றும், தமிழில் மரபைக் கட்டுடைத்து ‘சோதிமிக்க நவகவிதை’யைத் தந்த பாரதியை இதன்
.முன்னோடி எனவும் குறிப்பிட்டார். எது கவிதை என்ற கேள்வி காலந்தோறும் கேட்கப்டுவதையும் காலந்தோறும் விளக்கங்கள் மாறுவதையும் சுட்டினார். கவிதை மொழிக்கு ஆற்றும் பங்களிப்பு, அதற்கும் நிகழ்வாழ்க்கைக்குமான தொடர்பு, அர்த்த சாத்தியங்கள், கற்பனை சாத்தியங்கள், அவை கொடுக்கும் அழகியல், விழுமியங்கள் என்பதை விளக்கி, இரண்டு நிமிட வாழ்க்கை (shorts) வாழ்கிற மனிதரிடையே நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வதைவிட உன்னிடம் என்ன இல்லை என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது இக்கவிதைத் தொகுப்பு. இரண்டு நிமிடகாலத்தில் உன்னிடம் இல்லாத ஒன்றை உனக்கு நினைவுபடுத்துவதே இக்கவிதைத் தொகுப்பின் நோக்கமாக அமைந்துள்ளது’..
புழங்கு மொழியாக, நாட்டார் மொழியாக, உரைநடைமொழியாக இருக்கும் மொழி, செறிவான கவிதைமொழியாக, இருக்கும் மொழி, குழந்தை மொழியாக ஆவதையும், அம்மொழி அக்கணத்தில் நிகழ்வதை உணர்வுத் தருணமாக ஆக்குவதையும் சுட்டிக்காட்டினார்
‘சிமிழ்கணம்
ஒளி பூத்த விதையெல்லாம்
ஓடித் தடுத்து விளைப்பன
வானில் கனிந்து தொங்கும் நான்’
‘மண்ணில்
நான் நின்றவிடத்திலிருந்து
வானோக்கி
வன்னஞ் சிலம்பின சிறுநதிக்கூட்டம்’
நாம் பார்க்கும் ஓவியத்திலோ, சிற்பத்திலோ உணரும் காட்சி இக்கவிதைகளில் உள்ள கவிதைமொழியால் எவ்வாறு அகம் உணரும் தன்மையாகிறது என்றும், தென்பெண்ணையாற்றில் கால் வைத்தால் அந்த நதிநீர் சிதம்பரம் பக்கத்திலோ, கர்நாடகா பக்கத்திலோ கடலில் கலப்பதுபோல வாழ்க்கை என்பது அறுபடாத காலம் போன்றது. அதில் இருக்கிற ஒரு துளியை இக்கவிதை தொட்டு எடுத்தால் கூட ஒட்டுமொத்த மானுட வாழ்க்கை உய்யும்’ என்றும்,
‘கவிதையின் அருவமான ஒன்று மொழிவழியாக உணர்வில் கலப்பதை ‘சக்கையாக இனித்துக் கிடந்தது ஓர் உடல்‘ என்ற கவிதை எவ்வாறு தனித்துவமாகச் சொல்கிறது, ‘மேலிருந்து ஆன்டனாவைத் திருப்புவது எப்படி’ என்ற கவிதை, வெளிப்பாட்டுத் தன்மையுடன் fine tune செய்யப்பட்டு அது வாழ்வின் மேன்மைகளையும், அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. இறுதியாக, கவிதைக்கலையின் உண்மையான சவால் நாம் அனுபவிக்காத எத்தனையோ விஷயங்களை நம் அகம் உணரச் செய்வது. நாம் நம்மை முழுமையாக இழந்து கவிதைக்குள் குதித்தால் மட்டுமே அதனோடு மனம் ஒன்றி பயணிக்கமுடியும்’ என்று உரையை முடித்தார்.

அடுத்து புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் கவிஞருக்கு விருதளித்துப் பாராட்டிப் பேசினார். ‘இன்று நெருங்கிய உறவினரின் திருமணத்திற்குச் செல்ல இருந்தேன். ஜெயமோகனா? திருமணமா? என்றபோது இங்கு வந்துவிட்டேன். இலக்கிய உலகிற்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். பலரும் கள்ளமௌனம் சாதித்து கடந்து சென்றபோது என் உழைப்பை, பங்களிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஜெயமோகன் அவர்கள். அவரை வணங்கி மகிழ்கிறேன். ‘சூது பவளம்’ கவிதைத் தொகுப்பை வாசித்தேன். பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்தவரால்தான் இப்படிப்பட்ட கவிதைகளைத் தரமுடியும். நேரச் சிக்கனம் கருதி எனக்குப்பிடித்த ஒரு கவிதையைச் சொல்கிறேன்.
‘இத்தனை ஆயிரம் நாவுகளால்
நக்கி விடுகிறது மரம்.
துவட்டிக் கொள்ள
மற்றுமொரு மரத்திடம்
ஓடிச் செல்கிறது காற்று’
மரபிலும், நவீனத்திலும் ஆழங்காற்பட்டவராலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுத முடியும் என நினைக்கிறேன். இவரை எங்கள் கல்லுாரிக்கு அழைத்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறித் தான் தொகுத்த ‘இசைத்தமிழ் கலைஞர்கள்’ எனும் நுாலைப் பரிசளித்தார்.
முதல் அமர்வின் இறுதியாக கவிஞர் வி. சங்கர் தன் ஏற்புரையை (ஜெ.தளத்தில் காண்க) வழங்கினார். தன் உரையில் நிகமானந்தாவின் கனவை நனவாக்கப் பாடுபடும், ஊர்க்கிணறு புணரமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் மதுமஞ்சரிக்கு இவ்விருதுத் தொகையை அளிப்பதாக அறிவித்தார். எங்கள் அனைவருக்கும் உளம் நெகிழ்ந்த, உடல் மெய்ப்புக் கொண்ட தருணம் அது! தேநீர் இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது.
இரண்டாம் அமர்வில் பன்னிரு படைக்களத்தின் பேசுபகுதி ‘ஆவணி’ முதன்மைப் பேச்சாளர் சிலம்பரசன். அவரை அடுத்து மற்ற நால்வரும் பேசியதும் கவிஞர் தானும் ஒரு வெண்முரசு வாசகனாக பேச விழைந்தார். தன் பேச்சில், ‘வெண்முரசு இந்திய மலைத்தொடருக்கு நிகரானது. வேதாந்த மையம் கொண்டது. என் நண்பர்கள் ‘நீ ஒரு கவிஞன். கவிமனம் கொண்ட ஒருவன் ஏன் எப்பவும் ஜெயமோகன் மாதிரியான காவியகர்த்தனிடம் போக வேண்டும்?’ என்றார்கள். நான் பொன் கீரி கதையைக் கூறி ‘தயைக்காக’ என்றேன். வேதாந்தம் என்று சொல்லக்கூடிய மணிமுடி ஒரு தயை. அதை தரிசிக்க வேண்டுமென்றால் ஒருவன் அந்த காவியகர்த்தன் முன் அமரவேண்டியிருக்கும். நான் வெண்முரசு வழியாகக் கண்டு கொண்டது அதைத்தான். அந்த தயை நம்மைக் காக்கட்டும்!’ என்று உரையை முடித்தார். என்னுடனான தனிப்பேச்சில் “ஆதிகாலத்தில் மனிதர்கள் ஒன்றுகூடி நெருப்புமூட்டி தோளோடு தோள் சேர்த்து பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இன்று வெண்முரசு என்ற காவியத்தின் பொருட்டு அனைவரும் கூடி தோளோடு தோள் நின்று கொண்டாட்டமாக இதை நிகழ்த்தும்போது அது நினைவுக்கு வருகிறது. மையம்தான் மாறியிருக்கிறது, மனநிலை ஒன்றுதானே! இங்கு ஒவ்வொருவரும் ‘நான் துரியோதனன் ஆள், நான் கர்ணன் ஆள்’ என்று பேசுவதைக் கேட்கும்போது கூடுகையில் மட்டுமன்றி வீட்டிலும் அவர்களுடன்தான் வாழ்க்கை போலிருக்கிறது” என்றார். இறுதியாக முத்துக்குமரன் நன்றி நவின்றார் 5.30க்கு துவங்கிய விழா 10 மணிக்கு நிறைவுற்றது.
இரவு வீட்டுக்கு வந்தும் மனம் அலையடித்துக் கொண்டிருந்தது. படுத்தால் துாக்கம் வரவில்லை. கவிஞரின் கவிதைத் தொகுப்பைப் புரட்டினேன்.
‘குறுந்தொகையோ! கண்டேன் அல்லேன்!
மாணிக்கவாசகமோ! கண்டேன் அல்லேன்!
பிள்ளைத்தமிழோ! கண்டேன் அல்லேன்!
ஆண்டாள் பாசுரமோ! கண்டேன் அல்லேன்!
பாரதியோ! கண்டேன் அல்லேன்!
நீலமோ! கண்டேன் அல்லேன்!’
அதுவா இதுவா?
இதுவா அதுவா?
எதுதான் இது?!
என்று என் மதி மயங்கியது. நேரம் இரவு 1 மணி!
வாசிப்பு ஒரு வேள்வி. அரிகிருஷ்ணன் அவர்கள் அவ்வேள்வியின் மையவிசையாக நின்று அனைவரையும் ஒருங்கிணைத்து திட்டமிட்டு பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தார். செயல்வீரர்களாகிய நாங்கள் தான் அவரது பலம். திட்டமிடலும் நேர மேலாண்மையும் அவரது சிறப்புப் பண்புகள். அனைவரது கூட்டுமுயற்சியாலும் விருது விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
இளைய யாதவர் திரௌபதியிடம் “நமக்கு கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன அரசி! செல்வம் என்பது எதை வாங்குகிறதோ அதனால் தன்பொருள் கொள்வது” என்றார் – வெண்முரசு
இராச. மணிமேகலை











