வனத்தில் ஒரு தவம் – பறவை பார்த்தல் வகுப்பு அனுபவ பதிவு

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு ,

வணக்கம். சில மாதங்களுக்கு முன் வீட்டின் முன்னால் உள்ள நெல்லி மரத்தில் ஒரு பறவை வந்து உட்கார்ந்திருந்தது. அது என்ன பறவை என்று கேட்ட என் மகளிடம் ஏதோ ஒரு குருவி என்ற பதிலை தவிர மேலே சொல்ல முடியவில்லை. பறவை பார்த்தல் வகுப்பிற்கு பிறகு அது செம்மீசைச் சின்னான்  (red whiskered bulbul) இருக்க கூடும் என்று இப்போது தோன்றுகிறது .

பறவை பார்த்தல் (Oct  11,12,13) நிகழ்வுக்கு நான் என் குழந்தைகள்   (வயது 7, 11) மற்றும் என் தங்கை குழந்தைகளுடன் (வயது 6, 12) வந்திருந்தேன்.  இதுவரை மலை தங்குமிடத்தின்  வகுப்புக்களுக்கு நான் சென்று  திரும்பும் போதெல்லாம் ஒரு வித களிப்போடு வருவதை  குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள்.  இம்முறை அவர்களும் வருவதால் பயண தயாரிப்பின் போது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள்.  உங்கள் வார்த்தையில் சொல்வதென்றால் மற்ற சுற்றுலா தலங்கள் எல்லாம் மிகை நுகர்வோருக்கு சமைத்து பரிமாறப்படுபவை, அதில் கற்றல் இல்லை. மாறாக பறவை நோக்குதல் நிகழ்வுக்கு இருந்த உற்சாகத்துக்கு காரணம்  நாம் கற்றுக்கொள்ள போகிறோம் என்ற ஆனந்தம்.

குழந்தைகளுக்கான நிகழ்வாக இது முன்வைக்கப்பட்டாலும் இது எல்லா வயதினரும் பங்கு கொள்ள வேண்டியது. குழந்தைகளுக்கு நிகராக பெரியவர்கள் அனைவரும் படு உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். மற்ற விஷ்ணுபுரம் நிகழ்வுகளை போலவே மிக மிக நன்றாக திட்டமிட்டபடி இருந்தது. வகுப்பு ஆசிரியர்கள் விஜய பாரதி, ஈஸ்வரமூர்த்தி இருவரின் பறவை ஆர்வம், தீவிரமும் எல்லோருக்கும்  உடனே தொற்றிக்கொண்டது. ஆசிரியரின் கூட அமர்ந்து பயில்வதால் சிறப்பு இந்த உடனடி உத்வேகம் தான்.  

வகுப்புகள்

பள்ளி வகுப்புகளை போல் அல்லாமல்  உரையாடல் மிகுந்த, வினாடி வினா, கதை சொல்லல் என்று வகுப்பு ஆசிரியர்கள் முன் தயாரிப்பில் இருந்த உழைப்பு தெரிந்தது. இப்படியான பாடத்திட்டம் பறவைகள் பற்றிய வெறும் தகவல்களை பகிராமல், சிந்தனை மற்றும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்தது. மேலும் பறவை பார்த்தல் முன்னோடிகள், அவர்களுடைய வாழ்க்கை பயணம், தற்போதைய  பறவை ஆர்வலர்கள்,  என்று ஒரு முழுமை பார்வை கிடைத்தது. பறவைகளின் உணர்ச்சிகள் பற்றி விளக்கும்போது  எப்படி Behavioural  evidence (நடத்தை சான்று), Anatomical evidence (உடற்கூறு சான்று), Anecdotal  evidence (கதை / தொன்ம சான்று) என்ற பகுப்பாய்வின் மூலம் பறவைகளின் உணர்ச்சிகளை அறிவியல் உலகம் வரையறை செய்தது  என்ற விளக்கம் மிக சிறப்பு. இப்படியாக ஒரு புது விஷயத்தை கற்பதன் மூலம் நாம் செய்யும் மற்ற செயல்களில் ஒரு புதிய பார்வை கிடைப்பதை உணர்கிறேன்.

பறவை பார்த்தல்  களப்பயணம்

நான்கு முறை பறவை நோக்குதல்-க்கு நாங்கள்  சென்ற களப்பயணம் (field  visit) வாழ்க்கையின் பேரானந்தத் தருணங்கள். விளக்க முடியாத வண்ணங்களில் பற்பல பறவைகள். மலை தங்குமிடத்திற்கு பலமுறை வந்திருந்தாலும் இந்த அதிசய உலகம் கவனித்ததில்லை. மழையை  பொருட்படுத்தாமல், அதிகாலை ஐந்து மணி என்று எல்லோரும் ஒரு வித களிப்போடு கலந்து கொண்டோம். ஆசிரியர்கள் பறவை பார்த்தால் களப் பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் முழுமையாக சொல்லிய பிறகே கூட்டி சென்றார்கள்.

முழுக்க அமைதியாக தியானம் என்ற ஒரு நடை கணத்தில் பறவைகளின் உலகத்திற்கு இழுத்து சென்றதுவகை வகையான கரிச்சான்கருவாச்சி  இருவாச்சி (ஒரு நாள் முழுக்க பார்த்துக்கொண்டிருக்கலாம்), மஞ்சள் காலுடைய பச்சைப் புறாவால்  காக்கை, செம்மார்புக் குக்குறுவான், வெள்ளை மீன்கொத்தி , கருந்தோள் பருந்து, இனிய ஒலியோடு மழை கொண்டு வரும் செண்பக பறவை என்று  சில மணி நேரங்கள் நாங்கள் வனத்தில், வானத்தில் பறந்து திரிந்தோம்

ஆசிரியர் ஈஸ்வர மூர்த்தியின் இராணுவ கட்டுப்பாட்டு அமைதியில் எப்படியாவது துடுப்பு வால் கரிச்சானை  பார்த்து விடலாம் என்ற எங்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது  சற்று வருத்தம் தான்.

பறவைகளை அடையாளம் காணுதல்

பறவைகளின் ஒலியை கொண்டு என்ன பறவை என்று கண்டுபிப்பது, எப்படி நாம் பார்த்த பறவைகள் பட்டியல் போடுவது, பார்த்த பறவைகளின் தோற்றம், வண்ணம், நடத்தை  வைத்து எப்படி என்ன பறவை என்று அறிவது என்று பல  விஷயங்களை கற்று கொண்டோம். பறவைகளை அடையாளம் காணுதல்  இருக்கும் முக்கியமான தவிர்க்க வேண்டிய பிழையாக   ஆசிரியர் விஜய பாரதி சொன்னது  எப்படியாவது ஒரு சரியான   பெயரை சொல்ல வேண்டும் என்று அவசரத்தை தவிர்ப்பது. விவரங்களை குறித்து வைத்து, விவாதித்து பின் ஒரு முடிவுக்கு வருவது. அடையாளம் தெரியவில்லை என்றால்  தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டு மேலும் பயில்வது. இந்த கற்றல் பறவைகளின் அடையாளம் மட்டும் அல்லாமல் எல்லா செயல்பாட்டிற்கும் பொருந்துவது.

வகுப்புக்கு பின்பு இரவு கூடுகையில் ஆசிரியர் ஈஸ்வரமூர்த்தி, மணி அண்ணா இருவரின்  மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உறவு பற்றிய உரையாடல் சைவ சித்தாந்தம் நோக்கி சென்று கொண்டிருக்க, குழந்தைகள் ஒரு புரம் அவர்கள் விவாதத்தை நடத்தி கொண்டிருந்தார்கள். மெய்யாகவே வாழும் நாட்கள்.

குழந்தைகளுக்கு ஒரு கற்றல் உள்ள ஒரு பொழுதுபோக்கை அறிமுக படுத்தி விட்டோம் என்ற சந்தோசம் இருந்தாலும், மத்திம வயதில் இருக்கும் நான் இவ்வளவு வருடங்கள் இப்படியான ஒரு பேரானந்த செயல்பாட்டில் எடுபடவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

இது அனைத்தும் கிடைக்க செய்த உங்களுக்கு பணிவான நன்றிகளும், வணக்கங்களும் ஆசானே

இப்படிக்கு

பிரவின்

பெங்களூரு 

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவம், ஓர் உரை
அடுத்த கட்டுரைதத்துவம்- நகரங்களில் உள்ளறை வகுப்புகள்