யோகம், கடிதம்

அன்புள்ள குருஜி அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் துடிப்பான முகம் தற்போதும் நினைவில் உள்ளது. தாங்கள் காரில் குடும்பத்தோடு வந்தது எதிர்பாரா உவகை அளித்தது. பயிற்சியில் ஒன்றியும், மற்ற கூடுகைகளில் இயல்பாக கலந்துகொண்டதும் தங்களின் தன்முனைப்பின்மையை காட்டுகிறது. தங்களை பற்றியும் ஜெயமோகன் அவர்களை பற்றியும் வாசித்து இருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை.

யோக வகுப்புகள் அனைத்தும் நிதானமாக தொய்வில்லாமல் மனதில் நன்கு பதியும் படி அமைக்கப்பட்டு இருந்தது. யோகம் என்றால் என்ன, யோகத்தின் லட்சியம், மரபார்ந்த யோகத்தின் நோக்கம், அதற்கான் தத்துவ விளக்கம், பஞ்ச கோஷம், பஞ்ச பிராணன், ஆயுர்வேத மரபின் பார்வை போன்ற பல விளக்கங்கள் உள்ளே எளிதில் சென்றன. பல தளங்களில் செயல்படும் யோக நித்ரா, அந்தர் மௌனா, ஆசனம், பிராணாயாமம் போன்ற யோக பயிற்சிகளில், பங்கெடுப்பவர்களையும் அவர்களது வாழ்வு முறைகளையும் கருத்தில் கொண்டு செய்முறை ஆணைகளையும் விளக்கங்களையும் அளித்தது தங்களின் உழைப்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. சந்தேகங்கள் எப்படி இருப்பினும் அதற்கு தீர்க்கமாக பதில் அளித்தீர்கள்.

சில நாட்கள் பயிற்சி செய்ததில் முதுகு வலியும் கால்களில் எடை சமநிலையின்மையும் குறைந்துள்ளது. ஆனால் பொறுமையின்மையால் பல நாட்களில் செய்ய முடிவதில்லை.

யோகத்தின் மீது எனக்கு ஏளனமும் பெரு விலக்கமும் இருந்தது. தற்போது ஏளனம் நீங்கி அண்மை ஆகிவிட்டிருக்கிறது. தங்கள் அன்பிற்கும் யோக அனுபவத்திற்கும் நன்றி.

அன்புடன்

சிபி

முந்தைய கட்டுரைமேடையுரைப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைதியான வகுப்பு- அறிவிப்பு