
நாட்கள் செப்டெம்பர் 11, 12 மற்றும் 13 வெள்ளி சனி ஞாயிறு
தொடர்புக்கு [email protected]
அன்புள்ள ஜெயமோகன்,
சௌத் பௌண்டு இதழின் முதல் ஆர்வலர் கூட்டம் நடைபெறவிருப்பதாக நீங்கள் அறிவித்திருந்த செய்தியைப் பார்த்தேன். அதில் மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, பிறருக்குக் கட்டணம் உண்டு என்று பொருள். எனக்கு அது சற்று வியப்பாக இருந்தது.
ஒரு இதழைத் தொடங்கும்போது, அதில் உணர்ச்சிகரமாகவும் தீவிரமாகவும் ஈடுபட விரும்பும் ஆர்வலர்களிடம் கட்டணம் கேட்பது சரியாக இருக்குமா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
எனக்கும் இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளது. நான் இளைய தலைமுறையைச் சேர்ந்தவன் அல்ல; நடு வயதைக் கடந்தவன்தான். ஆனால் இந்த முயற்சியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கட்டணம் இருப்பது என்னைத் தடுக்கிறது.
சிவகுரு
அன்புள்ள சிவகுரு,
கட்டணம் வைத்திருப்பதே உங்களைப் போன்றவர்களைத் தடுப்பதற்காகத்தான். ஏனெனில் இது ஒரு வணிக அமைப்பல்ல; பெரும் முதலீட்டைக் கொண்ட அமைப்பும் அல்ல. இதில் பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடையதைக் கொடுத்தும், தியாகம் செய்தும், இதை முன்னெடுக்க வேண்டியிருக்கும். ஏதோ ஒரு வகையில் தங்களுடையதைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்களை மட்டுமே நாங்கள் எங்களுடன் இணைக்க விரும்புகிறோம்.
மாணவர்கள் இன்னும் பணம் சம்பாதிக்காதவர்கள். ஆகவே, அவர்களின் செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் பிறர் இதில் இலவசமாகப் பங்கேற்க வேண்டும் என்று விரும்பும்போதே, இந்த இதழ் முன்வைக்கும் மனநிலைக்கும் அதன் இலட்சியங்களுக்கும் ஒவ்வாத ஒரு அணுகுமுறை கொண்டவர் என்பது தெளிவாகிறது. அத்தகையவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் செயல்பட முடியாது.
தங்களுடைய உழைப்பையும் பணத்தையும் செலவழித்து, தங்கள் பங்காக ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே எங்களுடன் இருந்தால் போதும்.
எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் இரண்டு அம்சங்களை நீங்கள் பார்க்கலாம்.
ஒன்று, எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான செலவிலேயே நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதனால்தான் அவற்றை நீண்ட காலமாகத் தொடர்ந்து நடத்த முடிகிறது. இலவசமாகக் கிடைக்கும் திருமண மண்டபத்தில்தான் தூரன் விழா இதுவரை நடைபெற்று வருகிறது. எல்லா நிகழ்வுகளும் பெரும்பாலும் நண்பர்களின் உதவியின் வழியாகவே நடைபெறுகின்றன. அந்த உதவிகளைக்கூட எந்த வகையிலும் ஆடம்பரமாகச் செலவிடுவதில்லை.எங்களுடைய எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரை அதிகமான டாக்சிகளை ஏற்பாடு செய்ததில்லை. பெரும்பாலும் நண்பர்களின் வண்டிகள்தான் ஓடிக்கொண்டிருக்கும்.
அதேபோல, இத்தகைய தன்னார்வ மனநிலை அற்றவர்கள், தங்களுடைய செலவுகளை அமைப்பே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உள்ளே வராதபடி ஒரு ‘தீ வேலி’யை வைத்திருக்கிறோம். எங்களுடைய இலட்சியத்துக்கு ஒவ்வாதவர்களைத் தடுப்பதன் மூலமாகத்தான் நாங்கள் எங்களைத் தீவிரமாகவும் நீண்ட காலத்துக்கும் செயல்படக்கூடிய அமைப்பாக வைத்திருக்க முடிகிறது. சௌத் பௌண்டும் அவ்வாறே செயல்படும்.
ஜெ











