தனிப்பட்ட ஆலோசனைகள், கடிதம்

 

அன்புள்ள ஜெ,

தனிப்பட்ட ஆலோசனைகளைப் பற்றிய உங்கள் ஒரு கடிதத்தை சமீபத்தில் படித்தேன். ஒருவருக்கு தனிப்பட்ட ஆலோசனைகளைச் சொல்லும் உரிமை நமக்கு இருக்கிறதா, அல்லது அதுபோன்ற ஆலோசனைகளை நிபுணர்களிடம் மட்டுமே விட்டுவிட வேண்டுமா என்று நீங்கள் அதில் விளக்கியிருந்தீர்கள். அதைப் படித்தபோது எனக்குள் சில எண்ணங்கள் தோன்றின.

தனிப்பட்ட ஆலோசனைகளை நிபுணர்கள்தான் சொல்ல வேண்டும் என்பது ஒருவகையில் நமக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாயை என்று நினைக்கிறேன். ஒரு நிபுணர் பெரும்பாலும் பலருடைய அனுபவங்களிலிருந்து உருவான ஒரு பெரிய சராசரியை அடிப்படையாகக் கொண்டுதான் ஆலோசனை சொல்கிறார். அது பொதுவான நிலையில் சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அந்தச் சராசரிக்குள் அடங்கிவிடக்கூடிய ஒன்றல்ல.

ஒரு தனிமனிதனின் மனதை, அவனுடைய இயல்பை, அவன் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிக்கலை, அவன் சொல்லாமல் மறைத்திருக்கும் தயக்கங்களையும் ஆசைகளையும் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி ஒரு வார்த்தையைச் சொல்வது வேறு வகையான திறமை. அந்தத் திறமை ஒரு தொழில்முறை நிபுணத்துவத்திலிருந்து மட்டுமே வர வேண்டியதில்லை. ஒரு மனிதனை ஆழமாகக் கவனித்து, அவனுடைய உள்ளத்துடன் உண்மையாகத் தொடர்புகொண்டு பேசக்கூடிய ஒருவரால் மிகச் சரியான தனிப்பட்ட ஆலோசனையை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

உங்களிடம் நான் இதை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். நீங்கள் எனக்குச் சொன்ன சில தனிப்பட்ட ஆலோசனைகள் வெறும் அந்த நேரத்திற்கான அறிவுரைகளாக இருக்கவில்லை. அவை என் வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய பார்வையையே மாற்றியிருக்கின்றன. நான் என்னை எப்படிப் பார்க்க வேண்டும், என்னுடைய பலவீனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதில் அவை எனக்கு ஒரு புதிய தெளிவையும் முன்னேற்றத்தையும் அளித்திருக்கின்றன.

சில சமயங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது ஒரு நீண்ட உரையோ, ஒரு பெரிய தத்துவமோ அல்ல. அவனுடைய நிலையை சரியாகப் புரிந்துகொண்ட ஒருவர், சரியான நேரத்தில் சொல்லும் ஒரு சிறிய வாக்கியமாகக்கூட இருக்கலாம். அந்த வகையில் நீங்கள் எனக்குச் சொன்ன சில வார்த்தைகள் இன்னும் என்னுடன் இருக்கின்றன.

அதனால், உங்கள் தனிப்பட்ட ஆலோசனைகளுக்கு நான் வெறுமனே நன்றி சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியாது. அவை என் வாழ்க்கையில் உண்மையான ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உருவாக்கியிருக்கின்றன. அதற்காக உங்களிடம் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
சங்கர்

முந்தைய கட்டுரைஅத்வைதம், கடிதம்.