அன்புள்ள ஆசானுக்கு,
பறவைகள் பார்ப்பதில் எனக்கும் என் கணவருக்கும் (பொன்ராஜ்) ஆசிரியர் எங்கள் மகன் (பொன் முகேஷ்) தான். வெள்ளிமலைக்கு பல வகுப்புகளுக்கு நான் வந்துள்ளேன். என் கணவரும், மகனும் கூட பல வகுப்புகள் வந்துள்ளனர். முதல் முறையாக என் மகன் செல்ல விரும்பிய வகுப்பு பறவைகள் பார்க்கும் வகுப்பு. சில காரணங்களால் எங்கள் இருவராலும் வர முடியாத காரணத்தால், முன்பே விஷ்ணுபுரம் விழாக்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டதால் ஆசிரியர் விஜய் பாரதி அவர்களுடன் சென்ற ஜனவரி மாத வகுப்பிற்கு அனுப்பி வைத்தோம்.
அதன் பிறகு ஆசிரியர் விஜய் அவர்கள் சென்னையில் ஏற்பாடு செய்யும் பறவைகள் பார்க்கும் இடங்களுக்கு அவனை அழைத்து செல்ல ஆரம்பித்தோம். மெது மெதுவாக எங்கள் மகன் எங்களுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தான். எவ்வாறு பைனாகுலர் உபயோகிக்க வேண்டும் என்று. நானும் என் கணவரும் கற்று கொள்ள ஆரம்பித்தோம். வெளியில் செல்லும் போது மெல்ல மெல்ல எங்கள் கண்கள், வெளியே மரங்களையும் கரண்ட் கம்பிக்கைளையும் பார்க்க ஆரம்பித்தது. பறவைகளை நானும் என் மகனும் கண்டு கொள்ள ஆரம்பித்து, தற்போது என் கணவரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
முதன் முதலில் ஆசிரியர் அவர்கள் சென்னை நன்மங்கலம் ஏரி கரையில் தான் பறைவைகள் பார்த்தலுக்கு அழைத்து சென்றார். அப்போது அவன் பறவைகளின் பெயர்களை எனக்கு சொல்ல ஆரம்பித்தான். இது heron, நீண்ட நேரம் இறைக்காக காத்திருக்கும். இது glossy ibis, இது black headed ibis இவ்வாறு ஒவ்வொரு பெயராக. அப்படியே அன்று பார்த்த அனைத்து பறவைகளின் பெயர்களையும் சொல்ல ஆரம்பித்தான். அதுவே அவன் வெள்ளிமலை வகுப்பிற்கு பிறகு பறவைகள் பார்க்க சென்ற முதல் தருணம். நான் அவனிடம் எப்படி இவ்வளவு பறவைகள் பெயர் உனக்கு தெரியும் என்று கேட்டேன். அவன் அதற்கு வகுப்பில் சொல்லி கொடுத்ததாக சொன்னான். வகுப்பிற்க்கு சென்று மூன்று மாதங்களுக்கு பிறகு கூட அவனுக்கு இவ்வளவு ஞாபகம் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு முறை அவனுக்கு ஒரு பறவையின் பெயர் தெரியவில்லை. உடனே ஆசிரியருக்கு கேட்க என் mobile இல் இருந்து செய்தி அனுப்பி கேட்டான். அவன் பொதுவாக யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டான். அவன் தன் நண்பர்கள், எங்கள் இருவரிடம் மட்டுமே அதிகம் பேசுபவன். அவன் அதிகம் எங்களையும் அவன் வட்டத்தையும் தாண்டி பேசும் நபர்கள் என்றால் அது இரண்டு பறவை ஆசிரியர்களிடம் மட்டுமே.
வேலூர் பயணம்
முதல் முறை வேலூரில் ஒரு காட்டிற்குள் சென்று துடுப்பு வால் கரிச்சானுக்காக (Greater racket-tailed drongo) காத்திருந்தோம். எங்களால் பார்க்கவே முடியவில்லை. அதற்கு பதிலாக செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith barbet) பார்க்க முடிந்தது. ஆசிரியரின் ஸ்கோப்பில் அந்த பறைவையை பார்ப்பதற்கு அவ்வளவு அழகு.
அதன் பிறகு தற்செயலாக ஒரு குரல் கேட்டு ஆசிரியர் சொன்னார் இது துடுப்பு வால் கரிச்சான் என்று. வெற்றிகரமாக நாங்கள் அதை ஸ்கோப்பில் பார்த்து விட்டோம். மேலும் மேலும் குரல் எழுப்பிய வண்ணமே இருந்தது. பின்பு வேறு ஒரு குரல். அப்போது தான் ஆசிரியர் சொன்னார் அது இருபது வித்தியசமான குரல்களை எழுப்பும் என்று. நாங்கள் அங்கு இருந்த நேரத்தில் மட்டும் எட்டு விதமனை குரல் ஒலிகளை கேட்டோம். மறுநாள் மற்றுமொரு இடத்திற்கு சென்றோம் (Chittoor – Katpadi Road) அங்கு கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch) பறவையை பார்த்தோம் புதர்களுக்குள். ஒரு இடத்தில் அமர வில்லை. அதை எங்களால் பைனாகுலரில் மட்டுமே பார்க்க முடிந்தது.
இரண்டாம் முறை வேலூர் பயணம் இன்னும் சிறப்பாக இருந்தது. இந்த முறை இருபது பேர் கொண்ட குழு. ஆசிரியர் விஜய் மற்றும் அவர்கள் குடும்பம், வெங்கட், திரு மற்றும் அவர் மனைவி காயத்ரி, கார்த்திக் அவர்களின் இரண்டு குழந்தைகள், அன்பரசி, ஆசிரியர் ஈஸ்வர், பாரி, தாமரை கண்ணன் அவரின் மகள் மற்றும் தங்கை மகேஸ்வரி அவரின் மகன், ஜோதி, சென்னையில் இருந்து பிரியா மற்றும் அவரின் குடும்பம், லக்ஷ்மிகாந்த், விஷ்ணு, ஜெயராம்.
அனைவரும் இரண்டு நாள்கள் முழுவதும் நான்கு முறை நான்கு காடுகளுக்கு சென்றோம். முதல் காட்டுக்கு (Gudipapla, Chittapara, Near Katpadi) என்னால் செல்ல முடியவில்லை, அங்கு தான் மான்களையும், வேதிவால் குருவிகளையும் (Paradise flycatcher). அதன் கூடுகளையும் பார்த்துள்ளார்கள் (Gudipapla, Chittapara, Near Katpadi).

இரண்டாம் நாள் (Naganadhi waterfalls, Vellore) தேடி சென்றது துடுப்பு வால் கரிச்சானை. ஆனால், காட்டில் நாங்கள் சோலை பாடியின் (White-rumped Shama) குரலை கேட்டு அதற்காக தேடி அலைந்தோம். அது எங்கள் கண்களுக்கு கிடைக்கவே இல்லை. ஆனால், ஒரு கிளையில் பிரமாண்டமாக பாம்புத்தின்னி கொண்டைக் கருடன் (Crested serpent eagle) பார்த்தோம்.

அத்தனை பெரிய பறவையை அவ்வளவு அருகில் நான் பார்ப்பது அதுவே முதல் முறை. அதுவும் காரில் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு செல்லும் போது கண்ணில் பட்டது. நானும் என் மகனும் கணவரும் அப்படியே ஆனந்தமாகி விட்டோம். அதன் பெரிய உருவமும், அது கிளையில் அமர்ந்திருந்த தோரணையும் வியப்பாக இருந்தது. அந்த காட்டு வழியில் நம் நண்பர்கள் தவிர எந்த நடமாட்டமும் இல்லை.
பயணத்தை முடித்து திரும்பலாம் என்ற நேரத்தில் ஈஸ்வர் சார் அங்கு கீழ் ஒரு பெரிய புளிய மரம் உள்ளது சென்று அமரலாம் என்று சொன்னார். அனைவரும் திரும்பவும் காட்டிற்குள் சென்றோம். கொஞ்சம் இறங்கி செல்லும்படி இருந்தது. குழந்தைகள் அனைவரும் குதூகலமாக வந்தார்கள். அந்த புளிய மர கிளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து ஊஞ்சல் ஆடினார்கள்.
நாங்கள் அனைவரும் பறவை பார்க்கிறோம் என்று மேலே வானத்தை பார்த்து நடந்து வந்தோம். ஆனால், ஆறு குழந்தைகளும் மண்ணில் விளையாடுவது, வீடு கட்டுவது, திருநீர் செய்வது என்று அவர்கள் உலகில் அவர்கள் இருந்தார்கள். ஒரு குழந்தை கூட பசிக்கிறது, என்னை தூக்கு, எனக்கு போர் அடிக்குது என்று பெத்தவர்கள் அருகில் கூட வரவில்லை. ஆளுக்கு ஒரு குச்சியும் கம்புமாக அவர்கள் பாட்டுக்கு அழைத்து திரிந்தார்கள். அவர்களுக்குள் பேசியும் சிரித்தும்.
. அந்த காடுகளில் மழை பெய்யும் போது மட்டும் ஓடும் சிறு ஓடம் செல்லும் வழி தடங்கள் இருந்தது. சுற்றிலும் மூங்கில் மரங்கள். உடைந்த மூங்கில் முட்களும், மூங்கில் சருகுகளும். வேலூரின் சுட்டெரிக்கும் வெயில் அங்கு தெரியவேயில்லை. எங்கும் சத்தமே இல்லை. காற்றில் மூங்கில் கிளைகள் எழுப்பிய சத்தம் மட்டுமே கறக் கறக் என்று கேட்டு கொண்டு இருந்தது.
முன்னாள் சென்ற ஈஸ்வர் சார் சற்று மெதுவாக வர சொன்னார். அங்கு சென்று நாங்கள் பார்த்து விட்டோம் அன்று தேடி வந்தவரை. காட்டுக்குள் ஒரு மரக்கிளையில் துடுப்பு வால் கரிச்சான். அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி ஆனால், சத்தமே போடாமல் சந்தோஷபட்டோம். எந்த பறவையை பார்த்தாலும் உடனே என் மகன் பார்த்தாயா என்பது போல் என்னை பார்த்து கேட்பான். உனக்கு தெரிஞ்சுதா என்று கேட்டு உறுதி செய்துகொள்வான்.

ஆனால் எங்களால் சோலை பாடியை பார்க்க முடியவில்லை. காட்டில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து சற்று ஓய்வெடுத்து விட்டு திரும்பவும். மாலை கிளம்பினோம். இது வேறு ஒரு காடு. குழுவில் பாதி பேர் மதிய உணவிற்கு பிறகு திரும்பி விட்டார்கள். பாதி பேர் மட்டுமே மாலை சென்றோம். செல்லும் வழியிலேயே என் மகன் இரண்டு பனை காடைகளை காண்பித்து கொண்டே வந்தான். காரில் செல்லும் போதே திடிரென்று அங்கே பாரு இந்த பறவை என்று அவன் சொல்லி முடிப்பான், நான் என் பங்கிற்கு வேறு ஒரு பறவையை காண்பிப்பேன்.
மாலை வேறு ஒரு காடு (Sivanathapuram waterfalls, Vellore). காரை அனைவரும் நிறுத்தி விட்டு இறங்கி நடக்கும் போதே ஓரத்தில் ஒரு அசைவை பார்த்து விட்டோம். அனைவருக்கும் அது சோலை பாடி போல் பட்டது. அருகில் மெதுவாக செல்ல வேண்டும் என்றும், சத்தம் கேட்டால் அது பறந்து விடும் என்பதாலும் மிக மிக மெதுவாக தூங்கும் கைகுழந்தையின் வீட்டில் நடப்பது போல அரவமே இல்லாமல் நடந்து மெதுவாக சென்று ஒரு திண்டில் அமர்ந்து கொண்டோம். மெதுவாக எங்களுக்காகவே வந்து அமர்ந்தது சோலை பாடி. ஆசிரியர் விஜய் ஸ்கோப்பை அமைத்து விட்டு மெல்லமாக எங்களை வந்து பார்க்க சொன்னார். அதில் சோலை பாடியின் ஆரஞ்சு வண்ணமும் வெள்ளை வண்ணமும் தெளிவாக தெரிந்தது. நாங்கள் அனைவரும் அமைதியாக அந்த இடத்தில் உட்கார்ந்து அதை பார்த்து கொண்டு இருந்தோம். அது பாட்டுக்கு அங்கும் இங்கும் பறந்தும் குதித்தும் தன் அலகால் மூங்கில் சருகுகளை கொத்தி கொண்டு இருந்தது. நாங்கள் சற்று தொலைவில் இருந்தோம். பைனாகுலரில் அதை பார்க்கும் தொலைவில்.
நாங்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்து இருந்தோம் அந்த ஒற்றை பறவை மட்டும் பறந்தும் குதித்தும் எங்கள் முன்னால் விளையாடி கொண்டு இருந்தது. ஒரு சத்தமும் இல்லை மூங்கில் கிளைகளின் சத்தமும் சருகுகள் சத்தமும் மட்டுமே. ஒரு இனிமையான சூழல் அது. அவ்வளவு அமைதி. விஜய் சார் இங்கேயே இருக்க வேண்டும் போல் இருக்கிறது என்று சொன்னார். நங்கள் அனைவரும் அதே மன நிலையில் இருப்பது அப்போது தான் தெரிந்தது. ஒரு இருபது நிமிடங்கள் சோலை பாடி எங்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு பறந்து சென்று விட்டது. நாங்கள் அப்படியே ஒவ்வொருவராக மேதுவாக நடக்க ஆரம்பித்தோம்.
நான் மட்டும் சற்று முன்னே சென்றேன். செல்லும் வழியில் என் தலை மேல் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்தது இரண்டு நீலக்கண்ணிகள் (blue-faced malkoha). கண்களை சுற்றி நீல வண்ணங்கள், வாலில் சற்று வெள்ளை நிறம். நானே முதல் முதலில் பார்த்த பறவை. இதுவரை மத்தவர்கள் சொல்லி மட்டுமே பறவைகளை நான் பார்த்துள்ளேன். அது தான் நானே முதல் முதலில் பார்த்த பறவை. யாரும் என் அருகில் இல்லை. நான் மட்டும் தனியாக நின்று அதை பார்த்தேன். ரம்மியமான அமைதியான காட்டிற்குள் கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் யாருமே இல்லை. சற்று நேரத்திற்கு நானும் அந்த இரண்டு நீலக்கண்ணிகள் மட்டும் இருந்தோம்.
கடைசியில் அங்கிருந்து கிளம்பும் போதும் ஒரு குரல். உடனே அதை விஜய் சாரின் மகள் அகல்யா கண்டு பிடித்து விட்டாள் மச்ச மர ஆந்தை (Mottled Wood-Owl). அதன் குரல் மட்டுமே எதிரொலித்தது அந்த காட்டில். அகல்யாவின் கண்களில் இருந்தும் காதுகளில் இருந்தும் எந்த பறவையும் தப்பிக்கவே முடியாது.
சென்ற ஜனவரி மாதம் நடந்த பறவைகள் வகுப்பிற்கு வந்ததிலிருந்து ஆர்வமாக என் மகன் செய்யும் செயல்களில் ஓன்று பறவைகள் பார்ப்பது. பதினான்கு வயது அவனுக்கு. இரண்டு வருடங்கள் வரை ஒட்டி ஒட்டி விளையாடிய குணம் மாறி கொஞ்சம் எங்களை விட்டு தனித்தது இருக்க ஆரம்பித்தான். இந்த முழு பயணத்திலும் நங்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்து வியந்து இருந்தோம். தாங்கள் சொல்வது போல பொதுவான விஷயங்கள் பேசும் போது குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வருகிறார்கள். பறவைகள் பார்க்க செல்லும் போதும், அதை பற்றி பேசும் போதும் எங்களுடன் வந்து இணைந்து கொள்கிறான். எங்கள் மூவருக்கும் பொதுவாக பேச கிடைத்த ஒரு விஷயமாக வீட்டில் உள்ளது.
அன்புடன்
ஈஸ்வரி










