ஓரிடத்தில் குவிதல்…

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பவன் நான். கடந்த சில காலமாக ஏராளமான காணொளிகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில், “இவ்வளவு காணொளிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனவே” என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது.

ஆனால், இன்னொரு கோணத்தில் யோசித்தபோது, இன்றைய ஊடகச் சூழலில் ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால்தான் அவர் நம்முடைய கவனத்தில் நிலைத்திருக்க முடியும் என்று தோன்றியது.

இன்று பலரையும் நாம் கவனிக்கிறோம். அவர்களுடைய காணொளிகளுக்கு ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பார்வைகள் கிடைக்கின்றன. ஆனால், நாம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருப்பதால், ஒவ்வொருவரைப் பற்றியும் நமக்குள் உருவாகுவது ஒரு மங்கலான, பொதுவான சித்திரம்தான். யாரைப் பற்றிக் கேட்டாலும், “அவர் இப்படிப்பட்டவர்; இப்படித்தான் பேசுவார்” என்று ஒரு மேலோட்டமான மதிப்பீட்டைச் சொல்லிவிட முடிகிறது. ஆனால் அவருடைய சிந்தனை என்ன, அதன் பின்னால் இருக்கும் அனுபவம் என்ன, அவர் எதை நோக்கிப் பேசுகிறார் என்பவற்றைப் பற்றிய துல்லியமான புரிதல் பெரும்பாலும் நமக்கு இருப்பதில்லை.

ஒரு எழுத்தாளராக இருந்தாலும், சிந்தனையாளராக இருந்தாலும், சினிமா நடிகராக இருந்தாலும் இதே நிலைதான். ஒருவரைப் பற்றி நாம் அறிந்திருப்பது மிக அதிகமாகத் தோன்றலாம்; ஆனால் அவரைப் பற்றிய முழுமையான புரிதல் நமக்கு உருவாகியிருக்காது. இன்றைய மீடியா சூழலே அதற்கு இடமளிப்பதில்லை.

தொடர்ந்து நம்மை நோக்கி வந்து விழும் எண்ணற்ற தகவல்களில், தற்செயலாக நம் மனதில் தங்கிவிடுபவைகள்தான் நம்முடைய நினைவாகவும் கருத்தாகவும் மாறுகின்றன. நாம் எதையாவது பார்த்துவிட்டோம் என்பதாலேயே அதை உண்மையில் புரிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்ல முடியாது.

இந்தச் சூழலில், ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும்போதுதான் அவருடைய சிந்தனை உலகத்துக்குள் நாம் மெதுவாக நுழைய முடிகிறது. ஒரு கருத்தைத் தனியாகக் கேட்பதல்ல; பல்வேறு தருணங்களில், பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசுவதைக் கேட்கும்போதுதான் அவருடைய சிந்தனையின் ஒட்டுமொத்த வடிவம் நமக்குத் தெரியத் தொடங்குகிறது. அதன் வழியாகத்தான் நாமும் நம்முடைய சொந்த சிந்தனையை நோக்கி நகர முடிகிறது.

இன்று என்னைக் குவித்து, ஒரு சிந்தனைத் திசையில் தொடர்ந்து வைத்திருக்கும் ஒரே குரலாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் தொடர்ச்சியான பேச்சுகள் எனக்கு வெறும் தகவல்களாக இல்லாமல், ஒரு சிந்தனைச் சூழலை உருவாக்குகின்றன.

அதற்காக உங்களுக்கு என் நன்றி.

அன்புடன்,
ஶ்ரீனிவாச ராமன்

முந்தைய கட்டுரைபறவைகளுடன் வாழ்தல்- ஈஸ்வரி